காலம் கடந்து நிற்கும் காதல் இலக்கணம் கடந்த முதல் மரியாதை

காதல் திரைப்படங்களில் ஒட்டுமொத்த வித்தியாசத்தையும் வெளிப்படுத்தி இன்று வரை தன்னிகரற்று விளங்கும் முதல் மரியாதை இதுவரையிலான தமிழ்த்திரைப்படங்கள் பேசிய, பாடிய, உரையாடிய காதல் படங்களில் உன்னதமானது.
படங்கள்:  En Iniya Tamil Makkale யூடியூப் சேனல்
படங்கள்: En Iniya Tamil Makkale யூடியூப் சேனல்

பாரம்பரியமிக்க தமிழ்த் திரைப்படவுலகில் ஸ்ரீதர், கே.பாலசந்தர் வரிசையில் காதலுக்கு கெளரவமும் மரியாதையும் செய்து அழகு சேர்த்த இயக்குநர்கள் வரிசையில் அதே நேர்கோட்டில் இடம்பிடிக்கத் தகுதியானவர் இயக்குநர் பாரதிராஜா.

1977-ல் 16 வயதினிலேவுடன் திரைக்கு வந்து இன்று வரை தனது அழியாத படைப்புகள் மூலம் 44 ஆண்டுகளைக் கடந்தும் பிரமாண்டமாக நிற்கிறார் பாரதிராஜா. தமிழ்த் திரைப்படவுலகத்தை ஸ்டுடியோக்களிலிருந்து நிஜ கிராமங்களுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் வில்லத்தனம் குடி கொண்டுள்ளதையும், வில்லனைத் தனியாகத் தேடிச் செல்லாமல் கிராமங்களுக்குள் அழைத்துச் சென்று திரைப்பட ஆர்வலர்களுக்கும் ரசிகர்களுக்கும் புதிய பரிமாணத்தையும் புதிய பாதையையும் காட்டியவர் பாரதிராஜா.

இவர் தனது 44 ஆண்டு காலங்களில் 33 நேரடித் தமிழ்த் திரைப்படங்களை இயக்கியதில் பெரும்பான்மையான திரைப்படங்கள் புதிய பாணியிலான காதலை மையப்படுத்தியே அமைந்திருந்தது. இயக்குநர் பாரதிராஜா, கமலஹாசனுடன்  'சிகப்பு ரோஜாக்கள்' என்கிற ஆங்கில பாணி தமிழ்த் திரைப்படத்தை இயக்கினார். பெண்கள் மீது அதீத வெறுப்பு கொண்டு வளர்க்கப்பட்ட ஒருவன் பெண்களை நம்ப வைத்து, பழிவாங்கி அதனைப் படம்பிடித்து, பெண்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் ரசித்து வாழ்ந்து வருபவனுக்கு பெண்கள் மீதான அதீத வெறுப்பையும் தாண்டி ஒரு பெண்ணின் மீது முளைக்கும் காதல் உணர்வைப் பிரமாதமாக வெளிக்கொண்டு வந்தவர்.

திரை வில்லனாக ஆண்களையும் பெண்களையும் மிரட்டி வந்த சத்யராஜை கதாநாயகனாக மிகத் துணிச்சலுடன் கடலோரக் கவிதைகளில் அறிமுகப்படுத்தி முரட்டுக் கதாநாயகனுக்கு சற்றும் பொருந்தாத குடை டீச்சரைக் காதலிக்க வைத்தவர்.

கார்த்திக்கை வேற்று மத வாலிபனாகக் காட்டி அவர் மாற்று மதத்தைச் சேர்ந்த ராதாவைக் காதலிக்க வைத்து மதங்களைக் கடந்து மதங்களை உதறி வெற்றி பெறும் காதலை அலைகள் ஓய்வதில்லை மூலமும், காதல் ஓவியத்தைத் தோல்வியடையச் செய்த ரசிகர்கள் திருப்திக்காக மிகவும் கீழிறங்கி வந்து கார்த்திக்கையும், அதே ராதாவையும் வைத்து எடுத்த வாலிபமே வா வா மூலம் வக்கிரக் காதலை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நிலையை உணர்ந்து மன்னிப்புக் கேட்டவர் பாரதிராஜா.

ராதிகாவைக் கிழக்கே போகும் ரயிலுக்காகக் காத்திருக்க வைத்துவிட்டு நிறம் மாறாத பூக்களில் நகர காதலியாக வெற்றி பெற வைத்தவர். ராதாவை அலைகள் ஓய்வதில்லையில் மாணவியாக அறிமுகப்படுத்தி, காதல் ஓவியத்தில் கண்ணில்லாத கலைஞரைக் காதலிக்க வைத்தார். தன்னுடைய சிஷ்யன் கே. பாக்யராஜைப் புதிய வார்ப்புகள் மூலம் ஆசிரியக் காதலனாக அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றவர். இப்படித்தான் அறிமுக நடிகையர், நடிகர்களைக் கொண்டு 10-க்கும் மேற்பட்ட புதுவகைக் காதல் திரைப்படங்களை இயக்கி  ரசிகர்களைக் காதல் பித்துப் பிடிக்க வைத்தார்.

இத்தனையையும் தாண்டி, இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களில் மிகவும் முத்தாய்ப்பானதாகவும், காலம் கடந்தும் பேசப்படும் திரைப்படமாகவும் 36 ஆண்டுகளுக்குப் பின்னரும் மேன்மைமிகு திரைப்படமாகப் போற்றப்பட்டு வரும் திரைப்படம்  முதல் மரியாதை.

1977-ல் அறிமுகமான பாரதிராஜா அடுத்த 8 ஆண்டுகளில் சிம்மக்குரலோன் சிவாஜிகணேசனுடன் இணைந்து அசத்திய திரைப்படம்.  சிவாஜிகணேசன் பாத்திரத்தில் தனது நண்பரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை நடிக்க வைக்க நினைத்தவர் பாரதிராஜா என்பதை எஸ்.பி.பி.யே ஒருமுறை சிரித்தபடியே தெரிவித்திருந்தார்.

நடிகராகவே இறுதிவரை உயிர் வாழ்ந்த சிவாஜி கணேசன் தனது வாழ்நாளில் மொத்தம் 288 திரைப்படங்களை நடித்து முடித்தவர். அவரது திரைப்பட வாழ்க்கையில் ஒப்பனையின்றி, நடப்பது போல், சாதாரணமாக பேசுவது போல், பாசம் காட்டுவது போல், கோபம் காட்டுவது போல் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருப்பது போல் நடித்த, அல்ல வாழ்ந்த, முதல் திரைப்படம் முதல் மரியாதைதான். இதை சிவாஜி கணேசனே சொல்லியும் இருக்கிறார்.

அவரது 254 ஆவது திரைப்படமான முதல் மரியாதையில் அவர் பெற்ற விருதுகள் இரண்டுதான் என்றபோதிலும் மக்கள் மனதில் அவர் இறந்தும் இன்றும் மலைச்சாமியாகவே தோன்றுவதுதான் அந்தக் கலைஞரின் மறக்க முடியாத திறமை, ஆளுமை. 

முதல் மரியாதை கடந்த 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின வெளியீடாக தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. பாரதிராஜாவின் சொந்தத்  தயாரிப்பு நிறுவனமான மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் வெளிவந்த முதல் மரியாதையின் திரைக்கதையுடன் இயக்கத்தையும் பாரதிராஜா மேற்கொண்டிருந்தார். வழக்கம்போல் அவரது ஆர்.செல்வராஜ் கதை, வசனத்தையும்,  பாரதிராஜாவின் கண்ணுக்கு கண்ணான கண்ணன் ஒளிப்பதிவையும், இசையை நண்பர் இளையராஜாவும், பாடல்களை வைரமுத்துவும், படத்தொகுப்பை வி.ராஜகோபால், பி.மோகன்ராஜ் ஆகியோரும் கவனித்திருந்தனர்.

கி.ராஜநாராயணனின் கிராமத்து மொழியாடல்களைப் படம் முழுவதும் கவனமுடன் கையாண்டிருந்தார் பாரதிராஜா. முதல் மரியாதை கதாநாயகனாக சிவாஜிகணேசன் மலைச்சாமியாகவும், வடிவுக்கரசி பொன்னாத்தாவாகவும், ராதா, ராதிகாவின் பின்னணிக் குரலுடன் குயிலாகவும், கயிறு திரிப்பவராக ஜனகராஜும், மலைச்சாமியை முற்றிலும் அறிந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியாக வீராச்சாமியும், அறிமுக நடிகர் நடிகைகளாக ரஞ்சனியும், தீபனும் இளங்காதலர்களாகவும், அருணா, சத்யராஜ் உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரங்களாகவே மாறி கதாபாத்திரங்களாக உயிர் வாழ்ந்திருந்தனர்.

திரைப்படத்தின் ஒளிப்பதிவு உதவியாளரான இளவரசு முதன்முதலாக நடிகராகத் திரையில் தோன்றி சந்தையில் புகைப்படம் எடுப்பவராக நடித்திருந்தார். முதல் மரியாதை திரைக்கு வந்து அனைத்துத் தரப்பினரின் பாராட்டுதல்களையும் ஒருங்கேபெற்று அந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர் சிவாஜி கணேசன் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான திரைப்பட விருதும், பிலிம்பேர் வழங்கிய சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருதினை பாடலாசியர் வைரமுத்துவும் பெற்றிருந்தனர்.

இளையராஜாவிடம் எப்போதும் சிறந்த பாடல்களைப் பெறும் திறமை பெற்றிருந்த பாரதிராஜா, அவரிடமிருந்து 8 பாடல்களைப் பெற்று படம் முழுவதும் பாடல்களாக நிறைத்தார். பின்னணி இசைக்கோர்ப்பு மூலம் பல இடங்களில் வசனங்களின்றி வெறும் காட்சிகள் மூலமாகவே கதாபாத்திரங்களின் உணர்வுகளைக்  காட்சிகளின் தன்மையுடன் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அழகாகப் புரியவைத்து ஜாலம் புரிந்திருந்தார் இளையராஜா.

குறிப்பாகக் கிராமத்தில் குயில் காலடி வைத்ததும் உயிரைத் தொண்டைக்குழியில் வைத்துள்ள மலைச்சாமி சிலிர்க்கும்போது அந்த திடுக்கிடலை ரசிகர்கள் அனைவருக்கும் மிகச் சரியாக உணரவைத்துக் கொண்டு சேர்த்தவர் இளையராஜா.

ஒரு காட்சியின் சூழலை எப்படி இவரால் இசை மூலம் எளிமையாகச் சொல்ல முடிகிறது என்பது ஆச்சர்யமே. கால்வாய் சார்ந்த ஒரு கிராமம் அந்தக் கிராமத்தின் குடிசையை சிறுவர்கள் வேடிக்கை பார்ப்பதிலும், அதில் பெரியவர் ஒருவர் பொருமல் சப்தத்துடன் படுத்துக் கிடப்பதிலிருந்தும், ஊர்ப் பஞ்சாயத்துடனும் திரைப்படம் தொடங்கி பின்னோட்டக் காட்சிகளாக நம்முன் விரிகிறது.

பொருந்தாத திருமணத்தைச் செய்துகொண்டு வீட்டிற்குள் நடமாடும் பிண்டங்களுடன் உரையாடாமல் உயிர் வாழும் சிட்டுக்குருவிகளுடன் பேசி மகிழ்ந்துவரும் மலைச்சாமியின் கதாபாத்திரத்தையும், வழக்கம்போல் கணவரைத் திட்டியபடி தனது விதியை நொந்துகொண்டு மூக்குச்சளியைச் சிந்தியபடி கையைச் சுத்தம்கூட செய்யாமல் உணவைப் பரிமாறும் மனைவியையும் ஒரே காட்சியில் வித்தியாசப்படுத்தி கதாபாத்திரங்களைத் தெளிவுபடுத்தி விடுவார் இயக்குநர்.

தன் இயல்புக்குச் சற்றும் பொருந்தாத தன்னையும் வீட்டையும் வெறுத்தபடி வீட்டை விட்டு வெளியேறியவர் வானத்தையும், பறவைகளையும் பார்த்ததும் உற்சாகமான மலைச்சாமியாக மாறி  வழக்கமான கிண்டல்கள், உரையாடல்களுடன் மக்களுடன் கலந்துபோவார். தன்னுடைய மாமன் தனது மகள் யாருடைய உறவாலோ கருவுற்று வந்ததால் குடும்பக் கெளரவத்தைக் காப்பாற்ற மலைச்சாமியின் காலில் விழுந்து கேட்டுக் கொண்டதால் பொன்னாத்தாளை மனைவியாக ஏற்றுக்கொண்டு மாமன் விழுந்த மரியாதைக்காக 20 ஆண்டுகளாகக் காலுக்குச் செருப்பே அணியாமல் தனி மனிதராக வாழ்ந்து வருவார்.

வீட்டின் சோகத்தை யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாக ஊர் பெரிய மனிதராக பழகி வரும் இவருக்கு அந்த கிராமத்திற்குள் பஞ்சம் பிழைக்க வரும் பரிசல்கார பெண் குயிலுடன் ஏற்படும் நட்பே பின்னர் சவாலாகவும், பிரியமாகவும், புரிதலுடன், காதலாக விரிவதுதான் முதல் மரியாதையின் அழகு.

படத்தில் வசனங்களில் இருக்கும் இயல்பான ஆபாசம் ஒரு துளிக்கூட காட்சிகளில் இல்லாமல் அமைந்ததுதான் இன்று வரை ஆச்சர்யத்தின் உச்சம். மலைச்சாமியின் பெரிய மனது, தியாக வாழ்க்கை, வீட்டையும், வெளி உலகத்தையும் சம்பந்தப்படுத்தாமல் தனிமையாக வாழ்ந்து வருவது உள்ளிட்ட  அவரைப் பற்றி முற்றிலும் வீராச்சாமி மூலம் உணர்ந்துகொள்வார் குயில். அதனால் இரக்கமும், அன்பும் அதிகரித்து அவர் மீது இயல்பாகவே காதலாகிக் கசிந்துருகுவார். தங்களது தொடர்பு ஊர்ப் பஞ்சாயத்து வரை வந்ததற்குப் பிறகு அவரது முகத்தில் ஆனந்தத்தின் அளவு அதிகரித்தபடியிருக்கும் நுட்பத்தையும் இயக்குநர் பதிவு செய்திருப்பார்.

குயிலின் தொடர்பும் அதனால் மலைச்சாமிக்கு ஏற்படும் பாதிப்பைத் தாண்டியும் தனது தங்கையின் மகன் புல்லாங்குழல் காதலனுக்குத் துணிச்சலாக செருப்புத் தைக்கும் தொழிலாளியான வீராச்சாமியின் மகளைத் திருமணம் செய்துவைத்து மகிழ்ச்சியடைவார். மலைச்சாமியின் தொடர்பு குறித்து ஊர்ப் பஞ்சாயத்து வரை கொண்டு சேர்த்து குயிலைக் கொலை செய்வதற்காக விருந்து படைத்துத் தனது உறவினர்களுக்கு உத்தரவிடும் பொன்னாத்தா, மலைச்சாமியின் குடும்ப கெளவரத்தைப் பாதுகாக்க, பொன்னாத்தாவைப் பங்கு கேட்டு வரும் முன்னாள் காதலரைக் கொலை செய்யும் குயில் என இரண்டு கதாபாத்திரங்களையும் ஒன்றுபடுத்தி வித்தியாசப்படுத்துவதுடன் படம் முடிவடைகிறது.

ஆனால் மீதிக் காட்சிகளில்தான் வயதான மலைச்சாமிக்கும், இளம் வயது பரிசல்காரி குயிலுக்கும் இடையே இருக்கும் காதல் நிரூபிக்கப்படுகிறது. இதனை வழக்கம்போல் பாரதிராஜா தனது சிறப்புக் காட்சிகளுடன் செம்மைப்படுத்தியிருப்பார். கடைசி வரை தன் பொருந்தாக் காதலை வெளிப்படுத்த விரும்பாத மலைச்சாமி, தனக்காக, தன் குடும்பத்திற்காக குயில் கொலை செய்யத் துணிந்ததால், சிறையிலிருந்து வந்ததற்குப் பிறகு தனது காதலை வெளிப்படுத்தி தனது மனதில் இருப்பது குயில் மட்டும் தான் என்று அவருக்காகக் காத்திருப்பார் மலைச்சாமி.

வழக்கமாக தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகர்களுக்காகக் காத்திருக்கும் காதலிகள் மத்தியில் மிகவும் புதிதாகத் தனது காதலிக்காகக் காதலன் அவரது நினைவுடன் வருகைக்காகக் காத்திருக்கும் திரைப்படம் தமிழுக்குப் புதிய வரவாகவே இருந்தது. தனது குடிசையில் உரிமையுடன் தனக்காக உயிரைப் பிடித்து தன்னைக் காண்பதற்காகப் படுத்துக்கிடக்கும் தனது காதலர் தனது காதலை வெளிப்படுத்தியதற்குப் பிறகு உயிர் துறப்பதும், காதலரைப் பார்த்து விட்டு சிறைக்குச் செல்லும் வழியில் காதலி உயிரிழப்பதுமாக படம் நிறைவடைகிறது. வாழ்வில் ஒன்று சேர்க்காத காதல் அவர்களை மரணத்தில் ஒன்று சேர்க்கிறது.

பாரதிராஜாவின் திரைப்படங்களில் மட்டுமே காணப்படும் எசப்பாட்டு பாடும் காட்சிகள் முதல் மரியாதையில் மிகவும் சிறப்பு. தனது பாட்டுக்கு எசப்பாட்டு பாடுபவர் யாரென்பதைப் பல முயற்சிக்குப் பிறகு நேரில் பார்க்கையில், நீதானா அந்தக் குயில் என்றபடி சிவாஜி வெளிப்படுத்தும் அந்த மகிழ்ச்சி, வியப்பு, பிரமிப்பு என அனைத்தையும் ஒரே நிமிடத்தில் அந்தக் கண்களில்  கண்ணீருடன் வெளிப்படுத்தியிருப்பார். அங்குதான் சிம்மக்குரலோனை வாரி அணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது. கதையாக யோசித்தால் மிகவும் ஆபத்தான திரைப்படத்தை மிகவும் கண்ணியமான திரைப்படமாக்கியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. 

அந்த நேர்த்திக்காகத்தான் அவரை உச்சத்தில் வைத்து தமிழ் உலகம் இன்றுவரை பாராட்டி சீராட்டிக் கொண்டாடி வருகிறது. சிவாஜியை நடிக்க வைக்காமல் இயல்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருந்ததால் அவருக்குள் இருந்த வேறு ஒரு கதாநாயகத்தன்மை வெளிவந்தது. அதன் தொடர்ச்சியான வெளிப்பாடுதான் தேவர் மகன் திரைப்படத்தில் சிவாஜிகணேசனுக்கு வாய்த்தது என்பதை அடித்துக் கூறலாம்.

ராதாவின் நடிப்பைக் குறையே கூற முடியாதபடி தெனாவட்டு, அந்த அதிகப் பிரசங்கித்தனம், பெரிய வயதுத்தனத்துக்குரிய மிடுக்கு, பெண் என்கிற நொரண்டு, வாய் கொள்ளாத சிரிப்பு என ராதிகாவின் பின்னணிக் குரலுடன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேபோல் வடிவுக்கரசி தனது தவறான நடத்தையின் குற்ற உணர்ச்சியை வாழ்நாள் முழுவதும் சுமந்துகொண்டே அதனை தனது கணவரின் மீது பொருத்திப் பார்த்து அவரைத் திட்டிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து அதிகபட்ச திறமையைத் திரையில் கொண்டு வந்திருந்தார்.

வீராச்சாமி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமிங்கிற வசனத்துடன் நினைவுகொள்ளும்படி நடித்துள்ளார். அறிமுகக் காதலர்களும் தங்களது பங்குக்குக் காதலித்துத் தங்களை வெளிப்படுத்தியிருந்தனர். அருணாவும் தனது பிறப்பு குறித்து உண்மை தெரிந்து தனது வளர்ப்புத் தந்தையுடன் மன்னிப்புக் கேட்கும் காட்சியில் நல்ல நடிகையாக ஜொலித்திருந்தார்.

ஜனகராஜும் கயிறு திரிப்பவராகத் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டபடி சிவாஜியின் மீதான தொடர்பை ஊர்ப்பஞ்சாயத்து வரை கொண்டு வரும் கதாபாத்திரமாக வாழ்ந்திருந்தார். கதாபாத்திரங்கள் அந்தப் பெயர்களாகவே நடித்து வாழ்ந்து காட்டியிருப்பது பாரதிராஜாவின் உழைப்புக்கு பலம் சேர்த்தவை என்றாலும் படத்தின் ஒளிப்பதிவாளரும் படத் தொகுப்பாளர்களும் இயக்குநரின் கதையை உணர்ந்து பணியாற்றி படத்தை வெற்றியாக்கியவர்கள்.

சிவாஜியைப் பார்க்கும்போதெல்லாம், அவரது காலுக்கு செருப்பு தைத்துப் போடனும் என வீராச்சாமி சொல்கிற காட்சிகள், குருவிகளுடன் உரையாடி பாடி வரும் சிவாஜி, இளைஞனாகத் தன்னை நிரூபிக்க, கல்லைத் தூக்க முயற்சிக்கும் காட்சிகள், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைகளைக் கழுவி விட்டு சுத்தபத்தமாக சுவையான உணவருந்தும் காட்சிகள், நரைமுடியில் முத்துக் கோர்ப்பது, காயத்திற்கு மயிலிறகால் மருந்து தடவுவது, புல்லாங்குழல் கால்வாயில் விழுவது, சிவாஜியின் உடல்நலமற்று உயிருக்குப் போராடுவதை மனதால் உணர்வது, கிராமத்து மண்ணில் கால் வைத்ததும் சிவாஜி சிலிர்ப்பது, முதன்முறையாக காதலர்கள் தங்களது கைகளைப் பற்றிக் கொண்டு காதலை வெளிப்படுத்திக் கொள்வது, ஊர்ப் பஞ்சாயத்து கூடுவது என அனைத்துக் காட்சிகளும் வழக்கமான பாரதிராஜாவின் உத்திகளாக இருந்தபோதிலும் இதில் படத்துடன் பொருந்திய காட்சிகளாக நல்ல வித்தியாசத்தை வெளிப்படுத்தியிருந்தன.

முதல் மரியாதைக்குக் கதையெழுதிய செல்வராஜ் படம் முழுவதும் தன்னுடைய வசனங்களால் அனைவருக்கும் பெருமை சேர்த்திருப்பார். பெரிசுக்கு நெஞ்சுக்குழிக்குள்ள ஏதோ நினைப்பு இழுத்துக்கிட்டு கிடக்கு, எல்லோரையும் நனையாம கூட்டிக்கிட்டு போறியே உன் வயிறு நனையாம இருக்கணுமே, ஆத்துக்கு இரண்டு பக்கம் கரையிருக்கிற மாதிரி ஒரு புருசனுக்கு பொஞ்சாதியும் அத்தைக்காரியும் இருக்கனும்மா, எங்கள மாதிரி பஞ்சம் பொழைக்க வந்தவங்களுக்கு பூசிமொழுகின தரையோ, மாட்டுக்கொட்டகையோ எங்கிருந்தாலும் சரி படுத்தா உடனே தூங்கிற ஜாதிய்யா எங்களுது, மண்ணத் தின்னாலும் மறுபடியும் பசிக்கிற வயிறுய்யா, வில்லங்கம் இல்லாத வயிறுய்யா, பறவை மிருகங்களெல்லாம் எந்த ஜாதிய்யா அதெல்லாம் சந்தோசமா வாழல, நல்லவேளை நாடார் குருவி, தேவர் கிளி, நாயக்கர் கொக்குன்னு சாதி பிரிக்கல, உசுரப் பிடுங்கிற எமன்கிட்டயும் கயிறு இருக்கு... காப்பாத்தற சிவன்கிட்டேயும் கயிறு இருக்கு, வேசம் போடாதய்யா உன் மனசுக்குள்ளே எதையெதையோ மறைச்சு வைச்சிருக்கே, அதில பெரிய வீட்டுக்கதையும் இருக்கு, இந்த சின்ன சிறுக்கி மனசும் இருக்கு, இடுப்பில இருக்கிற குழந்தை சுமையையே எங்கயாவது இறக்கி வைக்க மனது அலையறப்போ இவ்ளோ பெரிய சுமையை இத்தனை வருசமா எப்படிப்பா சுமந்துகிட்டு இருந்தீங்க, மாப்பிள்ளையாக இல்ல மனுசனா இருக்க விரும்பறேன்,  தீர்ந்து போன கணக்க திருப்பி பார்க்க வந்தியா வரவுக்கும் செலவுக்கும் சரியா போச்சே இப்ப வம்பு எதுக்குடா உனக்கு... என படம் முழுவதும் தத்துவம் போல கிராமத்தார்களின் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் இன்றும் உயிர் வாழ்கிறது. குறிப்பாக குயில் பேசும் வசனங்களும், பொன்னாத்தாவின் கிராமப் பழமொழிகளும் பொருத்தத்துடன் இருந்தன.

ஒரு திரைப்படம் அனைத்து வகைகளிலும் தன்னிறைவு பெற்று, அது ரசிகர்களுக்கும் பிடித்தமானதாக இருந்தால் முதல் மரியாதைக்குக் கிடைத்த அதே மரியாதையும், கெளரவமும் கிடைக்கும். ஒரு திரைப்படம் 36 ஆண்டுகள் கடந்த பின்னரும் பேசப்படுகிறது என்றால் அந்த திரைப்படத்தின் காதல் மொழி அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்தமானதாக இருந்திருக்கிறது, அந்தத் திரைப்படம் எப்படிச் சேரவேண்டுமோ அப்படியே முழு வடிவில் முழுமையாக அனைவருக்கும் சென்று  சேர்ந்திருக்கிறது என்பதுதான் முதல் மரியாதைக்கு கிடைத்த வரவேற்பும் பாராட்டும்.

தமிழ்த் திரைப்படவுலகில் முதல் மரியாதைக்குப் பிறகு அதே பாணியில் பல படங்கள் வந்திருந்தாலும் ஒரு திரைப்படத்திற்கான நேர்மை, ஒழுங்கமைவு, காட்சியமைப்பு இருந்திட வேண்டும் என்பதற்கு முதல் மரியாதைதான் சரியான உதாரணம். காதல் திரைப்படங்களில் ஒட்டுமொத்த வித்தியாசத்தையும் வெளிப்படுத்தி இன்று வரை தன்னிகரற்று விளங்கும் முதல் மரியாதை இதுவரையிலான தமிழ்த் திரைப்படங்கள் பேசிய, பாடிய, உரையாடிய காதல் படங்களில் உன்னதமானது. இனியும் பல ஆண்டுகளுக்கு அது உரையாடும் தன்மையுடனும், வாசிக்கும் தன்மை கொண்டதுமாக இருந்து கொண்டே இருக்கும் அதுதான் முதல் மரியாதைக்கு கிடைத்த பெருங்கொடை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com