வீராச்சாமி - மாலா தம்பதி
வீராச்சாமி - மாலா தம்பதி

'இருந்தாலும் இறந்தாலும் அவரோடுதான்!' - சாதி கடந்து சாதித்த காதல்!

காதல் புனிதமானதுதான். ஆனால் சாதி தாண்டி நிகழும்போது காதல் தீட்டாகிவிடுகிறதோ என்னவோ, தகராறு, பிரச்னைகள் ஏற்பட்டு, சில நேரங்களில் கொலைகூட நிகழ்கிறது.



காதல் புனிதமானதுதான். ஆனால் சாதி தாண்டி நிகழும்போது காதல் தீட்டாகிவிடுகிறதோ என்னவோ, தகராறு, பிரச்னைகள் ஏற்பட்டு, சில நேரங்களில் கொலைகூட நிகழ்கிறது. 

கடவுள்கள்கூட காதல் செய்த நாட்டில் சாதியம் தாண்டி காதல் செய்கையில் காதலுக்கான எதிர்ப்பு பலமாகவே இருக்கிறது. வேற்று கிரகத்தில் வசிக்கலாமா என ஆராய்ச்சி செய்யும் காலத்தில் அடுத்த சாதியினர் தேவையில்லை எனும் எதிர்ப்புகள் இன்னமும் உள்ளது கவலைக்குரியதே.

சில சமூகத்தில் காதல்கள் அரசியல் இயக்கங்களையே கொந்தளிக்கச் செய்யும். சில நேரங்களில் பெரும் கலவரங்களைக் கூடத் தூண்டியிருக்கிறது. தற்போதைய காலகட்டத்திலேயே இப்படி என்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்?

1979 இல் அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில், தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் அம்மனூர் ஊராட்சிக்குட்பட்ட கொத்தங்குடி கிராமம். சுமார் 100-க்கும் குறைவான வீடுகள். சாலை வசதி கிடையாது. ரேடியோ, டிவி வசதி கிடையாது. மின்சாரமும் ஒரு சில வீடுகளில் மட்டுமே இருந்தது. அதுவும் மாலை 6 மணிக்குப் பிறகு மங்கலாகவே எரியும். 

இதே கிராமத்தைச் சேர்ந்தவர் குஞ்சுவின் மகன் வீராச்சாமி. தற்போது 60 வயதைக் கடந்து விட்ட அவருக்கு அப்போது 22 வயதாகி இருந்தது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். எஸ்எஸ்சி படித்தவர். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. 18 வயதாகியிருந்த அவர் வேறு ஒரு சமூகத்தைச் வகுப்பைச் சேர்ந்தவர். 5 ஆவது வரை படித்தவர்.

ஓராண்டாக காதலித்து வந்த அவர்கள், திருமணம் செய்வதற்காக ஊரை விட்டு ஓடி விடுகின்றனர். பின் குழந்தை பிறந்த பிறகு ஓராண்டு கழித்தே அவர்களால் ஊருக்குள் திரும்பி வர முடிந்தது. தொடர்ந்து, வாழ்க்கையை நகர்த்திச் செல்வதில் பிரச்னைகள். அவற்றையெல்லாம் கடந்து 40 ஆண்டுகளைத் தாண்டி இணை பிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். 

திருமணத்தின்போது சந்தித்த சவால்கள் குறித்து வீராச்சாமி கூறியதாவது:  

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஊரை விட்டே சென்றோம். முதலில் கிடாரங்கொண்டான் அருகே பழவனக்குடியில், தெரிந்த நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். ஆனால், அங்குள்ள சில அரசியல் கட்சியினர் பிரச்னை செய்து இங்கு தங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால், கல்யாணமகாதேவி அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். மறுநாள் நாகை பதிவாளர் அலுவலகத்துக்கு செல்வதற்கு முடிவு செய்திருந்தோம். அப்போது, நான் மாலாவை அழைத்து வந்துவிட்ட செய்தி ஊருக்குள் தகவல் பரவிவிட்டதால், பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால், பக்கத்து ஊர் தலைவராக இருந்த நாகப்பன் என்பவர், எங்களை அழைத்துக் கொண்டு தஞ்சாவூரில் உள்ள அவருடைய உறவினர் வீட்டில் தங்க வைத்தார். ஒருமாத காலம் வரை அங்கேயே தங்கியிருந்தோம். அதன்பிறகு தங்கையின் கணவரான கருணாகரன் வந்து, வழக்குரைஞர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார்.

நான் எஸ்எஸ்சி வரை படித்திருப்பதால் எனக்கு வேலை தருவதாகக் கூறியவர், மறுநாள் தஞ்சாவூரிலேயே மாலை மாற்றி திருமணம் செய்து, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து விடலாம் என்றார். ஆனால், அதற்குள் ஊரிலிருந்து அங்கும் சிலர் வந்ததால், எங்களை அழைத்துக் கொண்டு திருத்துறைப்பூண்டி வந்துவிட்டனர். தகவல் தெரிந்து, ஊரிலிருந்து சிலர், திருத்துறைப்பூண்டி பதிவாளர் அலுவலகத்துக்கும் வந்து விட்டதால், இரவு வரை பதிவு செய்ய முடியவில்லை.

தலைவர் நாகப்பன் அங்கிருந்து எங்களை அழைத்துக் கொண்டு, கருங்கண்ணியில் உள்ள அவருடைய உறவினர் வீட்டில் விட்டு விட்டார். பின்னர் ஒருவாரம் கழித்து மீண்டும் திருத்துறைப்பூண்டி பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு, திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பெரியநாயகிபுரத்தில் தங்கினோம்.

அந்த ஊரைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்து விட்டனர். காவல்துறையினர் வந்து, மாலா என்ற பெண் இங்குள்ளரா என மாலாவிடமே கேட்டுள்ளனர். அவர் வந்து உடனே சென்றுவிட்டதாக மாலாவும் கூறியிருக்கிறார். 

இதற்கிடையில் ஊருக்குள் பிரச்னை பெரிதானதோடு, 30 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கத்துடன் பணத்தை எடுத்துக் கொண்டு மகளை கூட்டிச் சென்றதாக புகார் அளித்திருப்பதாகக் கூறி பெண்ணின் பெற்றோர், எனது தந்தையை மிரட்டினர். அவர் பயந்து போய், நாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வந்து, எங்களை அழைத்துக் கொண்டு ஆலிவலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார.

ஆலிவலம் காவல் நிலையத்தில் பெரும் பஞ்சாயத்து நடந்தது. சாதி கடந்து எப்படி காதலிக்கிறாய் என என்னிடமிருந்து மாலாவை பிரித்து வைக்க காவல்துறையினர் முயன்றனர். ஆனால் மாலா, 'நான் அவரை மனசார விரும்பிட்டேன்.. இருந்தாலும் செத்தாலும் அவரோடுதான்.. நான் இப்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன், எனக்கு கணவர்தான் முக்கியம்..' என்று விடாப்பிடியாகத் தெரிவித்து விட்டார்.

உடனே காவல்துறையினர், உனது அப்பா புகார் கொடுத்திருக்கிறார்.. அதனால் நீ கணவனோடு செல்ல முடியாது.. காப்பகத்துக்குத்தான் செல்ல வேண்டும் என தஞ்சாவூருக்கு அனுப்பி விட்டனர். நான் மணலியில் உள்ள எனது தங்கை வீட்டுக்கு வந்து விட்டேன்.

7 மாதம் வரை மாலா, தஞ்சாவூரில் உள்ள காப்பகத்தில்தான் இருந்தார். அதன்பிறகு திருத்துறைப்பூண்டி மாஜிஸ்திரேட்டிடம் சென்று, இது மாலாவுக்கு 10 ஆவது மாதம்.. பிரசவ காலம் என்பதால் அழைத்து வர அனுமதிக்க வேண்டும் என பணத்தைக் கட்டி அனுமதி வாங்கி விட்டு, தஞ்சாவூர் சென்றோம். ஆனால், அங்கு சென்றபோது இப்போதுதான் மாலாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகக் கூறினார்கள். மருத்துவமனைக்குச் சென்றபோது, இப்போதுதான் மருத்துவம் பார்த்துவிட்டு மாலா காப்பகம் சென்று விட்டதாகக் கூறினர். ஒருநாள் முழுவதும் அலைக்கழிக்கப்பட்டு, இரவு 7 மணியளவில்தான் மாலாவைப் பார்க்க முடிந்தது.

உடனடியாக மாலாவை மணலிக்கு அழைத்து வந்து விட்டோம். சில நாள்களுக்குப் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பொருளாதார ரீதியில் பிரச்னைகள் ஏற்பட்டதால் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்தோம். ஊரில் உள்ளவர்கள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்றாலும் பெண்ணின் தரப்புக்கு ஆதரவாக விவசாயப் பணி எதுவும் வழங்கவில்லை.

இதனால், வேறு ஊருக்குச் சென்று வேலை பார்த்து வந்தேன். அப்போது மாலா சின்னப்பெண் என்பதுடன் அவருக்கு எந்த வேலையும் தெரியாது. இங்கு வந்தபிறகு, புல் அறுக்கக் கற்றுக் கொண்டார், விவசாயப் பணிகளை கற்றுக் கொண்டார். பின்னர், கோழி, ஆடு, மாடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தோம்.

சில நாள்களுக்குப் பிறகு ஊரில் உள்ளவர்கள், எங்களோடு பேச ஆரம்பித்தனர். எங்களுக்கும் வேலையையும் தரத் தொடங்கினர். மாலாவும் அவர்கள் குடும்பத்துடன் பேசத் தொடங்கினார். ஆனால், அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் என்னுடனேயே வசிக்க ஆரம்பித்து விட்டார் என்றார்.

இவர்களுக்கு ராஜா, விமல் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில், ராஜாவுக்கு வீராச்சாமியின் கலப்புத் திருமணத்தின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இடம் கிடைத்து, தற்போது ஆசிரியராக பணிபுரிகிறார். குடும்பத்தினர் அனைவரும் பக்கத்து ஊரில் இடம் வாங்கி, அங்கே வீடு கட்டி வசிக்கின்றனர்.

வீராச்சாமி தனது இரண்டாவது மகன் விமலின் பராமரிப்பில் அதே இடத்தில் வசிக்கிறார். மாலாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். வீராச்சாமி இன்னமும் வயல் வேலைக்குச் சென்று, மனைவியைப் பராமரித்து வருகிறார்.

போராட்டங்களுடன் தொடங்கிய வாழ்க்கைப் பயணத்தில் வீராச்சாமியும், மாலாவும் எந்த இடத்திலும் சறுக்காமல், களைத்து விடாமல் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்க்கையை நகர்த்திச் சென்று விட்டனர். சாதியம் கடந்த காதல் என்றாலும், 40 ஆண்டுகளைத் தாண்டியும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது இனிமையான ஒன்று.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com