'மனப்பக்குவம், சகிப்புத்தன்மை அவசியம்' - கலப்புத் திருமணம் செய்த முன்னாள் எம்எல்ஏ!

கலப்புத் திருமணம் செய்து வாழ்க்கையை வெற்றிகரமானதாக்கி சமூகத்தில் தனி முத்திரை பதித்து சாதித்துள்ளார் தலைவாசல் (தனி) தொகுதியின் எம்எல்ஏவாக இரண்டு முறை இருந்த ராஜாம்பாள் (83).
வையாபுரி - ராஜாம்பாள்
வையாபுரி - ராஜாம்பாள்

கலப்புத் திருமணம் செய்து வாழ்க்கையை வெற்றிகரமானதாக்கி சமூகத்தில் தனி முத்திரை பதித்து சாதித்துள்ளார் தலைவாசல் (தனி) தொகுதியின் எம்எல்ஏவாக இரண்டு முறை இருந்த ராஜாம்பாள் (83).

கலப்பு திருமணம் செய்திட வேண்டும் என்று தனது இளைய சகோதரரும், அவரது நண்பரும் கண்ட கனவை நிஜமாக்கி காட்டியவர் ராஜாம்பாள். முதலில் கடும் எதிர்ப்புகளை சந்தித்த ராஜாம்பாள், தனது உழைப்பு, அணுகுமுறை, அனுசரித்துச் செல்லும் குணத்தின் மூலம் இரு வீட்டாரையும் இணக்கமான நட்பு மூலம் அரவணைத்துள்ளார்.

சேலத்தை அடுத்த ஆத்தூர் அரசநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாம்பாள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவரின் மூத்த சகோதரர் இருசப்பன், தலைவாசல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ. இவரின் இளைய சகோதரர் செல்லையாவும், ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருந்த வையாபுரி என்பவரும் நண்பர்கள். இருவரும் சாதியை ஒழிக்க வேண்டுமெனில் கலப்புத் திருமணம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள். இருவருக்கும் தங்கைகள் உண்டு. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இதனால் செல்லையாவின் தங்கையை ராஜாம்பாளுக்கும், வையாபுரியின் தங்கையை செல்லையாவும் கலப்புத் திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்தனர்.

இதில் செல்லையாவின் தங்கை ராஜாம்பாள், எஸ்.எஸ்.எல்.சி. பி.யூ.சி. முடித்தவர். இவர் தனது சகோதரி ராஜாம்பாளை மாற்றுச் சாதியைச் சேர்ந்த வையாபுரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவானது. இந்த முடிவில் செல்லையாவும், வையாபுரியும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ராஜாம்பாள், வையாபுரி மீது காதல் கொண்டார். அவரையே திருமணம் செய்து வாழவும் முடிவு செய்தார்.

இதனிடையே டாக்டருக்குப் படித்திருந்த செல்லையாவுக்கு, தோட்டத்தில் வேலை செய்து வந்த தனது தங்கையை திருமணம் செய்து வைக்க வையாபுரிக்கு மனம் ஒப்பவில்லை. ஆனால் செல்லையாவின் சகோதரி ராஜாம்பாளை கலப்புத் திருமணம் செய்வதில் வையாபுரி தீவிரமாக இருந்தார். இதுபற்றி தகவலறிந்த இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் கலப்புத் திருமணம் செய்து கொடுத்தால் மகளை கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில், ராஜாம்பாளுக்கு அவரது பெற்றோர் வேறொரு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் ராஜாம்பாள், தான் நேசித்து வரும் வையாபுரியைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியுடன் நின்றார். இதனால் 8 நாள்கள் உணவருந்தாமல் விடாப்பிடியாக இருந்தார். இதனால் திருமணம் தள்ளிப்போனது.

கடும் போராட்டங்களுக்கு இடையே 1960-ல் இருவரும் திருச்சி அருகே மலைக்கோட்டையில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்த ராஜாம்பாள், மலைக்கோட்டை கோயிலுக்கு வரவில்லை. பின்னர் அருகில் உள்ள முருகன் கோயிலில் வையாபுரியும், ராஜாம்பாளும் திருமணம் செய்து கொண்டனர். புதுமணத் தம்பதி இருவரும் ஊர் திரும்பியதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வேற்று சாதியைச் சேர்ந்த பெண்ணை ஏற்பதில் வையாபுரியின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இருந்தபோதிலும் இருவரும் தனியாக ஒரு வீட்டில் குடியேறினர். இந்த திருமணத்துக்கு அப்போதைய காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர்கள் வாழப்பாடி ராமமூர்த்தி, சத்யமூர்த்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் அரசு வேலைக்கு சேர்ந்த ராஜாம்பாள், தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி ஒன்றியங்களில் பணியாற்றி வந்தார்.

இதனிடையே அரசியல் கட்சியைப் பின்னணியாக கொண்ட ராஜாம்பாள் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக ஆதரவுடன் 1980 இல் தலைவாசல் (தனி) தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். தொடர்ந்து 1984 இல் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மறைந்த கணவர் வையாபுரியை நினைத்து கண்கலங்கிய ராஜாம்பாள் தனது திருமண வாழ்க்கை குறித்து கூறியது:

என் தந்தைக்கு 4 மகள்கள், 2 மகன்கள் பிறந்தனர். எனது இளைய சகோதரர் செல்லையாவும், எனது கணவர் வையாபுரியும் சிறு வயது முதல் நண்பர்கள். இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து சாதி மறுப்பு கலப்பு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள். சாதி ஒழிப்பை வேறு எங்கும் மாற்ற முடியாது. நம் வீட்டில் இருந்தே துவங்க வேண்டும் என்பதற்காக எனது சகோதரர் செல்லையா, வையாபுரியின் தங்கையையும், எனது கணவர் வையாபுரியின் சகோதரியை செல்லையாவும் திருமணம் செய்து கொள்ளவும் பேசிக் கொண்டனர். இதில்  வையாபுரியின் சகோதரி தோட்டத்தில் வேலை செய்து வந்த நிலையில், டாக்டர் படிப்பு முடித்த செல்லையாவை திருமணம் செய்து வைப்பது சரியாக இருக்காது என நினைத்தார்.

மறுபக்கத்தில் வையாபுரி என்னை கலப்பு திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தார். குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி இருவரும் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் கலப்புத் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் மட்டும் காலமாகிவிட்டார்.

எனது கணவர் வையாபுரி, ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்து விவசாயிகளுக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். தலைவாசல் தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது, அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வர உதவியுள்ளார். இருமுறை எம்எல்ஏவாக இருந்த பிறகு அரசியல் வாழ்க்கையை விட்டு விவசாயம் பக்கம் திரும்பினேன். நானும் என் கணவர் வையாபுரியும் விவசாயம் செய்து வந்தோம். எனது கணவர் வையாபுரி 2  ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். நாங்கள் கலப்பு திருமணம் செய்தபோது இரு வீட்டார் மத்தியிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.  என்னுடைய உழைப்பையும், அணுகுமுறையும் எனது கணவரின் குடும்பத்தினர் சிந்தனையை மாற்றியது. சுமார் 60 ஆண்டு கால திருமண வாழ்க்கை இனிமையாகக் கொண்டு சென்றோம். பின்னர் அனைவரும் எங்களோடு இணக்கமாகப் பழக ஆரம்பித்தனர். இப்போதும் அந்த நட்புறவு நீடிக்கிறது.

இப்போதைய இளம் தலைமுறையினர் காதல் திருமணம் செய்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடும் சூழ்நிலை உள்ளது. இதனால் இளவயதிலேயே இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் விரக்தியில் பிரிந்து மனக்கசப்போடு வாழும் நிலை உள்ளது. காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் இணக்கமான சூழலில் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம், சகிப்புத்தன்மை இல்லாத நிலையில் இல்லற வாழ்க்கையை நடத்த முடியாமல் சிரமப்படுவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. காதல் திருமணங்களை செய்யும் தம்பதியினர் காதலில் உறுதியாக இருக்க வேண்டும்.

எல்லோரும் படித்தவர்கள். எல்லோரும் மனிதர்கள்தான். நாம் நடக்கும் அணுகுமுறையில்தான் எல்லாம் உள்ளது. அனைத்து விஷயங்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டும்  என்றார். 

படங்கள்: வே.சக்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com