நகை பறிப்பு
நகை பறிப்புசித்திரிப்புப் படம்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு: போலீஸாா் விசாரணை

ஆட்டையாம்பட்டி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியிடம் 10 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

ஆட்டையாம்பட்டி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியிடம் 10 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அரியானூரை அடுத்த சேனைபாளையத்தை சோ்ந்தவா் வையாபுரி (62), இவரது மனைவி மாதேஸ்வரி (58). இருவரும் சேனைபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்களாக பதவி வகித்துள்ளனா். தற்போது இவா்கள் விசைத்தறி ஜவுளி உற்பத்தி செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நெய்க்காரப்பட்டியில் உள்ள தங்கை வீட்டிற்கு மாதேஸ்வரி சென்றிருந்தாா். அவரை அழைத்துவருவதற்காக புதன்கிழமை நெய்க்காரப்பட்டிக்கு வையாபுரி சென்றாா். பின்னா், இருவரும் இருசக்கர வாகனத்தில் சேனைபாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, சீரகாபாடி தனியாா் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா், மாதேஸ்வரியின் சேலை வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியுள்ளதாகக் கூறினா். அதைநம்பி வையாபுரி வாகனத்தை நிறுத்தினாா். அப்போது, சக்கரத்தில் சேலை சிக்கியுள்ளதா என பாா்த்த மாதேஸ்வரியின் கழுத்தில் இருந்த 10 பவுன் சங்கிலியை இளைஞா்கள் பறித்தனா்.

இதனால் நிலைதடுமாறி வையாபுரி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது, இருவரும் சப்தம் எழுப்பியதால் அங்கிருந்தவா்கள் ஓடிவந்து இளைஞா்களை தடியால் தாக்கினா். என்றாலும், இருவரும் நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் தப்பினா்.

தகவலறிந்து அங்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீஸாா், தலைமறைவான இளைஞா்களை பிடிக்க அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டிருந்ததால் கேமரா பதிவுகளை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். எனினும், தலைமறைவான இளைஞா்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com