‘காதல் வெற்றி பெற்றாலும் கஷ்டங்கள் விடுவதில்லை’

திருப்பூரில் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் மாநகரில் வீடு கிடைக்காமலும், போதிய வருவாய் இல்லாமும் வறுமையின் பிடியில் இரு குழந்தைகளுடன் காதல் தம்பதியினர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
குழந்தையுடன் சீனிவாசன் - செளந்தர சுந்தரி தம்பதி
குழந்தையுடன் சீனிவாசன் - செளந்தர சுந்தரி தம்பதி

திருப்பூர்: திருப்பூரில் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் மாநகரில் வீடு கிடைக்காமலும், போதிய வருவாய் இல்லாமும் வறுமையின் பிடியில் இரு குழந்தைகளுடன் காதல் தம்பதியினர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தைச் சேர்ந்தவர் எஸ்.சீனிவாசன்(39). இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்தார். அப்போது அவருடன் பணியாற்றி வந்த செளந்தரசுந்தரி(37) என்பவரைக் காதலித்து வந்துள்ளார்

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காங்கயம் சாலையில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பின்னர் பல்வேறு எதிர்ப்புகளைத் சந்தித்து வரும் நிலையில் தற்போது வறுமையின் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சீனிவாசன், செளந்தரசுந்தரி கூறியதாவது:

நாங்கள் இருவரும் 2007 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். ஆனால் எனது மனைவியின் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து வேறு வழியின்றி 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். இதன்பின்னர் இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளாததால் நண்பர்கள் உதவியுடன் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு இருவரும் வேலைக்குச் சென்று பிழைப்பை நடத்தி வருகிறோம். எங்களுக்கு பூமிஷா(10), விதுஷா (1) என்கிற இரு மகள்கள் உள்ளனர். நாங்கள் இருவரும் காதலிக்கும்போது பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பவில்லை. ஆனால் திருமணம் என்று வரும்போதுதான் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. எனது மனைவியையும் அவரது குடும்பத்தினர் அடுத்து துன்புறுத்தினர்.

போதிய வருவாய் இல்லாமல் அவதி

திருப்பூர் பின்னலாடைத் தொழில் கடந்த சில மாதங்களாக நலிவடைந்துள்ளதால் போதிய அளவில் வேலை இல்லை. நான் பின்னலாடை நிறுவனத்தில் கட்டிங் உதவியாளராக பணிக்குச் சென்று வருகிறேன். எங்களுக்கு கைக்குழந்தை உள்ளதால் எனது மனைவியும் 2 ஆண்டுகளாக வேலைக்குச் செல்ல இயலவில்லை. எனக்கு மாதம் முழுவதும் வேலை இருந்தால் மட்டுமே ரூ.8  ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையில் வருவாய் ஈட்ட முடியும். ஆனால் தற்போது வாரத்துக்கு 4 நாள் மட்டுமே வேலை இருப்பதால் மாதம் ரூ.6 ஆயிரம் மட்டுமே ஊதியமாகக் கிடைப்பதால் இரு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவதிக்குள்ளாகி வருகிறோம். நாங்கள் பிழைப்புக்காக மாதந்தோறும் மகளிர் குழு உள்ளிட்டவற்றில் கடன் வாங்கித்தான் வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.

தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் வீடு தரமறுப்பு

நாங்கள் தற்போது திருப்பூரில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்நகரில் குடியிருந்து வருகிறோம். இங்கிருந்து நான் பணியாற்றும் நிறுவனத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் சுமார் 8 கிலோ மீட்டர் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, திருப்பூர் மாநகரில் வாடைக்கு வீடு கிடைத்தால் வசதியாக இருக்கும் என்று பல்வேறு இடங்களில் தேடினேன். நான் போய் வீடு கேட்டேன் என்றால் தருகிறேன் என்று சொல்கின்றனர். இதன் பின்னர் மாலையில் எனது மனைவியைக் கூட்டிச் சென்றால் அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தவுடன் வீடு புக்காகிவிட்டது என்று சொல்கின்றனர். பல வீட்டு உரிமையாளர்கள் எங்களுக்கு வீடு தர மறுக்கின்றனர்.

நானும் வெள்ளியங்காடு, கரட்டாங்காடு, வலையங்காடு, செட்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் தற்போது வரையில் 13 இடங்களில் வீடு கேட்டும் தற்போது வரையில் கிடைக்காததால் திருப்பூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தள்ளி மாதம் ரூ.2 ஆயிரம் வாடைகைக்கு சிறிய வீட்டில் வசித்து வருகிறேன்.

வீடு வேண்டும்

எங்களைப் போன்ற சாதி மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒதுக்கிவைப்பதால் எந்த ஆதரவும் இல்லாமல் சிறிய வாடைகை வீடுகளில் வசித்து வருகின்றனர். ஆகவே, சாதி மாறி திருமணம் செய்து கொண்டு வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் எங்களைப் போன்ற தம்பதிகளுக்கு அரசு, சலுகை விலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்றனர் கண்ணீருடன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com