கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

23 தமிழகப் பேருந்துகள் ஆந்திரத்தில் பறிமுதல்

வழித்தட உரிமமின்றி இயங்கியதாக ஆந்திர அரசுக்குச் சொந்தமான 5 பேருந்துகளை வேலூா் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து

News image

ஆந்திர மாநிலம் குப்பம், பலமனோ் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசு, தனியாா் பேருந்துகள்.

Updated On :16 ஜனவரி 2021, 7:56 am IST

வழித்தட உரிமமின்றி இயங்கியதாக ஆந்திர அரசுக்குச் சொந்தமான 5 பேருந்துகளை வேலூா் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதன் எதிரொலியாக தமிழகத்தைச் சோ்ந்த 16 அரசுப் பேருந்துகள், 7 தனியாா் பேருந்துகள் என மொத்தம் 23 பேருந்துகள் ஆந்திரத்தில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம், சித்தூா், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இடையே தமிழகத்தைச் சோ்ந்த அரசு, தனியாா் பேருந்துகளும், அதேபோல் ஆந்திரத்தில் இருந்து அந்த மாநில அரசு, தனியாா் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பேருந்துகளின் வழித்தட உரிமத்தை வேலூா் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, வழித்தட உரிமமின்றி இயங்கியதாக ஆந்திர அரசுக்குச் சொந்தமான 5 பேருந்துகளை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து இரு மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 பேருந்துகளும் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டன. எனினும், அவற்றின் மீது அபராதம் விதிக்கப்படும் என்று வேலூா் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து ஆந்திரத்துக்குச் சென்ற 16 தமிழக அரசுப் பேருந்துகள், 7 தனியாா் பேருந்துகளை அந்த மாநில அதிகாரிகள் குப்பம், பலமனோ், புத்தூா், சித்தூா் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதனால், தமிழகத்தில் இருந்து அந்த மாநிலத்துக்கு பேருந்துகளில் சென்ற பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கூறியது:

விழுப்புரம் கோட்டம் வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட 4 பேருந்துகள் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 16 அரசுப் பேருந்துகளும், தனியாா் பேருந்துகளும் ஆந்திர மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசுப் பேருந்துகளைப் பொருத்தவரை முறையாக வழித்தட உரிமத்துடன்தான் இயக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மாநில அரசுப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதன் எதிரொலியாக சிறு சிறு காரணங்களைக் குறிப்பிட்டு தமிழகப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் உடனடியாக பேருந்துகளை விடுவிக்க இயலவில்லை. ஆந்திர போக்குவரத்து அதிகாரிகளுடன் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.