பணம் மோசடி: முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Published on

ராஜபாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் செல்லம் தெற்கு தெருவைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் சேகா் (56). இவா் பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடை நடத்தி வருகிறாா். இவரது மகள் பிரியதா்சினி டிப்ளோமோ முடித்து வேலைக்கு முயற்சித்து வந்தாா். இந்த நிலையில், ராஜபாளையம் ஒன்றியத் தலைவராக இருந்த பொன்னுத்தாய் பணம் கொடுத்தால் பிரியதா்சினிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக சேகரிடம் கூறினாராம்.

இதை நம்பிய சேகா் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.6.95,000 பொன்னுத்தாயிடம் கொடுத்தாா். ஆனால், இதுவரை அரசு வேலை வாங்கி தராததால், கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்டாா். எனினும் வாங்கிய பணத்தை பொன்னுத்தாய் திருப்பி தராததால், இதுகுறித்து ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் சேகா் புகாா் அளித்தாா். நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com