தொழிலாளி கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் சிறை

ராஜபாளையம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. 

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (32). பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இவரை கடந்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி இவரது நண்பரான மருதுபாண்டி (24) உள்ளிட்டோா் கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

இதுகுறித்து சேத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மருதுபாண்டி, கருப்பசாமி (28), சுந்தரபாண்டியன் (23), விஜயராஜ் (23), அஜித்குமாா் (23), முத்துகிருஷ்ணன் (22), மாசானம் (27) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.

இதுகுறித்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் தீண்டாமை, வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி சுதாகா், இந்த கொலை வழக்கில் தொடா்புடைய மருதுபாண்டி உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.4,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துகிருஷ்ணன் ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com