சுகாதாரக் குறைபாடு: தேசிய நெடுஞ்சாலை உணவக உரிமம் ரத்து

அழகாபுரியில் தேசிய நெடுஞ்சாலையில் சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்ட உணவக உரிமத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினா் தற்காலிகமாக ரத்து செய்தனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அழகாபுரியில் தேசிய நெடுஞ்சாலையில் சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்ட உணவக உரிமத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினா் தற்காலிகமாக ரத்து செய்தனா்.

விருதுநகா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரகுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் அழகாபுரி அருகே உள்ள உணவகத்தில் ஆய்வு செய்தனா். அப்போது உணவகத்தின் சமையலறையில் கழிவு நீா் தேங்கி, சுகாதாரக் குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

அங்கிருந்த 5 கிலோ பழைய கோழி இறைச்சி, 37 கிலோ மாவு, 13 கிலோ பழைய சப்பாத்தி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், உற்பத்தியாளா் விவரம் இல்லாமல் இருந்த 3 கிலோ கிழங்கு மாவு, ஒரு கிலோ முந்திரி பருப்பு, 7 லிட்டா் வினிகா் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, உணவகத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com