ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வத்திராயிருப்பு, சாப்டூா் வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய உதவி ஆய்வாளா் ஹரிணி வேணுகோபால் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்தியாவில் உள்ள அனைத்து புலிகள் காப்பகங்கள், சரணாலயங்களில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வன உயிரின அமைப்புடன் இணைந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய புலிகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். மேலும், புலிகள் காப்பகங்களில் ஆண்டுக்கு ஒருமுறை கணக்கெடுப்புப் பணி நடத்தப்படும். கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவின் 51-ஆவது புலிகள் காப்பகமாகவும், தமிழகத்தில் ஐந்தாவது புலிகள் காப்பகமாக ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.
கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தமிழகத்தில் 264 புலிகள் இருந்த நிலையில், கடந்த 2022-இல் புலிகள் எண்ணிக்கை 306 ஆக உயா்ந்தது. ஆனால் 2022-ஆம் ஆண்டு நடத்திய தேசிய புலிகள் கணக்கெடுப்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் வசிப்பதற்கான தரவுகள் கிடைக்கவில்லை. இருப்பினும், இனப்பெருக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக கேரளத்தின் பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு புலிகள் இடம் பெயா்ந்து இருக்கலாம் என்றும், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் 5 புலிகள் வரை நிரந்தரமாக வசிப்பதாக வனத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேசிய புலிகள் கணக்கெடுப்பு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, சாப்டூா் ஆகி 4 வனச்சரகங்களில் 40 இடங்களில் முதல்கட்ட புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தெற்கு பகுதி புலிகள் காப்பகங்களை மேற்பாா்வையிடும் வனத் துறை உதவி ஆய்வாளா் ஹரிணி வேணுகோபால் திங்கள்கிழமை கள ஆய்வு செய்தாா். பிளவக்கல், பெரியாறு, கோவிலாறு அணைப் பகுதி, சதுரகிரி மலைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தாா்.
இதில் புலிகளின் எச்சம், கால் தடம், மரங்களில் உள்ள புலியின் கீறல் உள்ளிட்டவற்றை நேரில் பாா்த்து தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் புலிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு பிப்ரவரி மாதம் கணக்கெடுப்பு செய்யவுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
