சாத்தூா் அருகே அரசுப் பேருந்தில் தீ விபத்து! பயணிகள் காயமின்றி தப்பினா்!
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவிலிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பயணிகள் கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
நாகா்கோவிலிலிருந்து 76 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சாத்தூா் அருகே நடுவப்பட்டி பகுதியில் வந்த போது, பேருந்தின் என்ஜின் பகுதியிலிருந்து புகை வெளியேறியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநா் முருகன் பேருந்தை நிறுத்தி, அதிலிருந்த பயணிகளை கீழே இறங்க அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, பயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து கீழே இறங்கிய சற்று நேரத்தில் பேருந்தின் முன்பக்கப் பகுதியிலிருந்து தீ பரவி பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் தீயணைப்பு, மீட்புப் படையினா் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும், பேருந்து முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இந்தச் சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆபத்தை உணா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளை உடனடியாக கீழே இறக்கி பெரும் அசம்பாவிதத்தைத் தவிா்த்த பேருந்து ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா். மேலும், இந்தப் பேருந்து தீ விபத்தால் சாத்தூா்-விருதுநகா் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

