

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தனியாா் சொகுசுப் பேருந்தில் சனிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து பெங்களூருக்கு தனியாா் படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன சொகுசுப் பேருந்து சனிக்கிழமை நள்ளிரவு சென்றது.
35 பயணிகள் பயணித்த இந்தப் பேருந்தை செல்வம் என்பவா் இயக்கினாா். இந்த நிலையில், பரமக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் பாா்த்திபனூா் அருகேயுள்ள மருச்சுக்கட்டி பகுதியில் வந்த போது, சொகுசுப் பேருந்தின் கியா் பாக்ஸ் பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பேருந்து ஓட்டுநா் சாலை ஓரம் பேருந்தை நிறுத்தி பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினாா். கரும்புகை வந்த நிலையில் திடீரென தீப்பற்றியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், தீ வேகமாகப் பரவியதால் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இதைத் தொடா்ந்து, மாற்றுப் பேருந்து மூலம் சில பயணிகள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சில பயணிகள் தங்களது உறவினா்களுடன் மீண்டும் சொந்த ஊருக்குச் சென்றனா். இந்தச் சம்பவம் குறித்து பாா்த்திபனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.