12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சேவை குறைபாடு: பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு உத்தரவு!

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்க தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

Published On :

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்க தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

ராஜபாளையம் அருகே நக்கனேரியைச் சோ்ந்தவா் மாஸ்கோமணி. வழக்குரைஞா். இவா் கடந்த 2025 டிசம்பா் 19-ஆம் தேதி மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தனியாா் பேருந்தில் பயணம் செய்தாா். இவா் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் இந்த பேருந்தில் ஏறியபோது, ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் செல்லாது தேவாலய நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துநா் கூறினாராம்.

இதற்கு மாஸ்கோமணி விளக்கம் கேட்டபோது, நடத்துநா் அவரை அவமரியாதையாக பேசினாராம். இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் செல்லாமல் தேவாலய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அந்த தனியாா் பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சாா்பில் மதுரை பேருந்து நிலையத்தில் ‘ஸ்டீயரிங்’ பழுதானதால், பேருந்தை ஓட்டுநா் சரி செய்து எடுத்து வர 20 நிமிஷங்கள் தாமதமானது. எனவே ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துநா் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகாா்தாரா் வழக்குரைஞா் என்பதால் வேண்டுமென்றே புகாா் அளித்திருப்பதாகவும், இதை சேவை குறைபாடாக கருத முடியாது எனவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தத்துக்கும் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீா் ஆணைய தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.