அரிசி கிலோ ரூ.340, கோழிக்கறி ரூ.800; அதள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

அரிசி கிலோ ரூ.340, கோழிக்கறி விலை ரூ.800 ஆகவும் இருப்பதாகவும் அதள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம் இருப்பதாகவும் தகவல்.
பாகிஸ்தான் கொடி ஏந்திய மக்கள்
பாகிஸ்தான் கொடி ஏந்திய மக்கள்AP
Published on
Updated on
2 min read

ஏற்கனவே, பாகிஸ்தான் பொருளாதாரம் அதளபாதாளத்தில் விழுந்துகிடக்கும் நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், பாகிஸ்தான் - இந்தியா இடையே பதற்றம் ஏற்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் உருவாகியிருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையே போர்ப்பதற்றம் உண்டானால், அவ்விரு நாடுகளின் ராணுவ பலம், பாதுகாப்புத் துறையின் பலம் குறித்துத்தான் அலசப்படும். ஆனால், பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து ஊடகங்கள் அனைத்தும் அலசத் தொடங்கிவிட்டன. காரணம், அந்நாட்டின் பொருளாதாரம் படுமோசமாக இருப்பதுதான். இப்படியொரு நிலையில், இந்தியாவுடன் போர் தொடுக்க அந்நாட்டால் முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கு நம்மிடம் பதில் இல்லை. ஆனால், பாகிஸ்தான் பொருளாதாரம் குறித்த பல தரவுகள் கிடைத்துள்ளன.

நாட்டின் மிக முக்கிய உணவாக இருக்கும் சில பொருள்களின் அடிப்படை விலை பற்றிய தகவல்கள் சொல்வது என்னவென்றால், ஒரு கிலோ கோழிக்கறி ரூ.800க்கும், ஒரு கிலோ அரிசி விலை ரூ.340 ஆகவும் உள்ளதாம்.

ஒரு டஜன் முட்டை ரூ.330க்கும், ஒரு லிட்டர் பால் விலை ரூ.224க்கும் விற்பனையாகிறது என்கிறார்கள்.

வறட்சியால் 1 கோடி மக்கள் பட்டினிக்கு ஆளாகும் நிலை ஊள்ளது. பாகிஸ்தான் பொருளாதாரம் முற்றிலும் மோசமாகியிருக்கிறது. இவ்வாறு உள்நாட்டிலேயே பல சிக்கல்களை வைத்துக்கொண்டு அண்டை நாட்டுடன் பாகிஸ்தான் போர் தொடுக்குமா? அதற்கான நிதி இருக்கிறதா? அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழத்தான் செய்கிறது.

பாகிஸ்தானில் மழை வெள்ளம், கடுமையான வெய்யில் போன்றவை, வேளாண்மையை பாதித்து அதனால் அங்கு கடும் பஞ்சம் நிலவி வருகிறது. இந்த ஆண்டு கோடைக்குள் ஒரு கோடி பேர் உணவுப் பற்றாக்குறை, பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படும் நிலையில், பணவீக்கம் அபாய அளவில் உள்ளது.

இதனால் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி, கோழிக்கறியை விடுங்கள். ரொட்டி, தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றையே ஏழை மக்கள் வாங்கி சாப்பிட முடியாத நிலை உள்ளது.

ஒரு ஏழைக் குடும்பம் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போர் கூட வேண்டாம், அங்கு நிலவும் தண்ணீர் பஞ்சம், மின் தடை போன்றவற்றுக்கு இடையே சிந்து நதிநீர் தடுக்கப்பட்டாலே இரண்டு மாகாணங்கள் வறட்சியில் சிக்கிக்கொள்ளும்.

இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை மூடப்பட்டுவிட்டது. முழுமையாக வணிகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் அடிப்படைப் பொருள்களின் விலை விண்ணைத் தொடலாம்.

அடுத்து இந்தியாவிலிருந்து 40 சதவீதம் வரை மருந்துத் தயாரிப்புக்கான கச்சாப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்நாட்டில் மருந்து பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான பொருள்களை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துவந்த நிலையில் அவை பாதிக்கப்பட்டால், ஆசியாவிலேயே மிக அதிக செலவாகும் நாடாக பாகிஸ்தான் மாறிவிடும்.

பாகிஸ்தானின் பொருளாதார நிலை, உள்நாட்டில் பலூச் அமைப்பினரின் தாக்குதல், வெளிநாடுகளுடனான பிரச்னைகள் என அந்நாட்டு அரசுக்கு எத்தனையோ விவகாரங்கள் இருந்தாலும், அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு, முழுமையாக இந்தியாவுக்குள் பயங்கரவாதத்தைப் பரப்ப வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்ததன் விளைவுதான் இன்று பாகிஸ்தான் என்றொரு நாடு படும் பாடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com