அஞ்சலி: நட்புக்காக ஒரு கட்டிடம்!
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இம்மாதம் ஒரு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. சிறுவயதில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான வார்டுதான் அந்தக் கட்டிடம். சாதாரணமாகப் பார்க்கும்போ


சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இம்மாதம் ஒரு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. சிறுவயதில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான வார்டுதான் அந்தக் கட்டிடம். சாதாரணமாகப் பார்க்கும்போது அது வெறும் கட்டிடமாகத்தான் தெரியும். ஆனால் அந்தக் கட்டிடத்தின் பின்னுள்ள கனவையும், அந்தக் கனவை நனவாக்க முயன்ற நட்பு உள்ளங்களின் கடும் முயற்சியையும் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால்...ஆச்சரியப்பட்டுப் போவீர்கள், இந்தக் காலத்தில் இப்படியும் நடக்குமா? என்று.
ஆம். "நம்மவர்', "குருதிப்புனல்' போன்ற தமிழ்த் திரைப்படங்களின் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் மகேஷ். அவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மறைந்தார். மறைவதற்கு முன்பு அவர் தனது உயிலில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார். அந்தக் கனவை நனவாக்க அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலர் முயற்சித்து சுமார் மூன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடத்தைக் கட்டி முடித்து அவருடைய நினைவுக்கு அர்ப்பணித்திருக்கின்றனர்.
தங்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவே நேரமில்லாமல் பலர் ஓடிக் கொண்டிருக்கும் இந்நாளில் இந்தக் கட்டிடத்தை வெற்றிகரமாகக் கட்டி முடித்திருப்பது சாதாரண விஷயமல்ல. உணர்வுப்பூர்வமான ஒரு சாதனை.
இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள மறைந்த இசையமைப்பாளர் மகேஷின் துணைவி சித்ரா மகேஷைச் சந்தித்துப் பேசினோம்.
உங்களுடைய கணவர் மகேஷுக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ஏதாவது வசதி செய்து தர வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது?
எனது கணவர் மகேஷ் 7 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். அவர் எழுதி வைத்த உயிலைப் பார்த்தோம். அதில் அடையாறு புற்றுநோய் மருத்துவ மனைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவர் தெரிவித்திருந்தார்.
அதற்கு முன்பு அவர் அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையில் பலமுறை தங்கி சிகிச்சை பெற்றிருக்கிறார். அப்போது இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் சிறுவர், சிறுமியர்களை அவர் பார்த்திருக்கிறார். அப்போது அவரைப் பார்க்கவரும் நண்பர்களிடம் இந்த மருத்துவமனையில் சிறப்பாகச் சிசிச்சையளிக்கிறார்கள். இன்னும் அதிக வசதியிருந்தால் நல்லது. இந்த மருத்துவமனைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்குப்பின்தான் உயிலிலும் எழுதி வைத்திருக்கிறார்.
ஒருவர் மறைந்த பின்னால் அவருடைய நண்பர்கள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வது அபூர்வம். உங்களுடைய கணவருடைய நண்பர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?
எனது கணவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். 500 க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் தாங்கள்தான் மகேஷின் மிக நெருங்கிய நண்பர் என்று உணரும்விதமாக அவர் எல்லாரிடமும் பழகி வந்தார். அவரைவிட்டால் நமக்கு நெருங்கிய நண்பர் யாரும் கிடையாது என்று எல்லாரும் நினைத்தனர். அந்த அளவுக்கு எல்லாரிடமும் அன்பு செலுத்துவார். அவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்.
அவர் மரணமடைவதற்கு முன்பு சுமார் 13 வருடங்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அந்த நோய் தந்த "வாழ்க்கை நிலையாமை எண்ணம்தான்' அவர் பிறருடன் இப்படிப் பழகுவதற்குக் காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இயல்பாகவே அவர் நண்பர்களிடம் மிகத் தீவிரமாக அன்பு செலுத்தும் மனிதராக இருந்தார்.
அவர் இறந்தபிறகு நடந்த நினைவுக் கூட்டத்தில் அவருடைய நண்பர்கள் 800 பேர் கலந்து கொண்டனர்.
அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும், அவர் நினைவாக இந்தக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் 600 பேர் கலந்து கொண்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அவருடைய நண்பர்களில் டைரக்டர் மணிரத்னம், அருணா சுப்ரமணியம், சுஜாதா சங்கர், பரத்ராமன், ரவிராஜ்கோபால், சஞ்சய் சந்திரசேகர், ரங்கா குமார், பி.ஜி.கிருஷ்ணன் ஆகியோர் முக்கியமானவர்கள்
இந்தக் கட்டிடம் கட்டும் முயற்சிகளைப் பற்றி?
அவருடைய மறைவுக்குப் பின் "மகேஷ் நினைவு அறக்கட்டளை' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கினோம்.
இந்தக் கட்டிடம் கட்டுவதற்கு சுமார் 3 1/2 கோடி ரூபாய் தேவைப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையை நண்பர்களே திரட்டித் தந்தனர். சென்னை தரமணியில் அவருடைய நண்பர்களில் ஒருவரான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மாபெரும் இசைக் கச்சேரி நடந்தது. இது மகேஷின் நண்பர்களில் ஒருவரான டைரக்டர் மணிரத்னத்தின் முன்முயற்சியினால் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஏறக்குறைய 30 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை அப்படியே மகேஷ் நினைவு அறக்கட்டளைக்குக் கொடுத்துவிட்டார்கள்.
அவருடைய நண்பர்களான அஜய்தேவ்கன், கஜோல் ஆகிய இருவரும் ஸ்டார் டிவி நடத்தும் க்ரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் கிடைத்த 1 கோடி ரூபாயை அப்படியே கொடுத்துவிட்டார்கள். இதுதவிர அவருடைய பிற நண்பர்கள் அளித்த நிதி, பிறரிடம் வாங்கிக் கொடுத்த நிதி என எல்லாம் சேர்த்து இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டுவது சாத்தியமானது.
மகேஷ் தனது உயிலில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ஏதாவது வசதி செய்து தர வேண்டும் என்று சொல்லியிருந்தாரே தவிர, இதைத்தான் செய்ய வேண்டும் என்று குறிப்பிடவில்லை.
நாங்கள் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் டாக்டர் சாந்தாவைக் கலந்து ஆலோசித்தோம். சிறுவயதினருக்கு புற்றுநோய் வந்தால் அவர்களில் 90 சதவீதம் பேரை முற்றிலும் குணமாக்க முடியும். எனவே சிறுவயதினருக்கான வார்டுகளைக் கட்டிக் கொடுத்தால் நல்லது என்று அவரும் கூற, நாங்களும் முடிவு செய்தோம். மகேஷின் நண்பர்களில் ஒருவரான சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் மகேஷைப் பற்றி மிகச் சுருக்கமாக இப்படிச் சொன்னார்: "மகேஷ் என்றால் சிரிப்பு, நட்பு, இசை'
நீங்கள் கட்டித் தந்திருக்கும் இந்த வார்டில் என்னென்ன வசதிகள் உள்ளன?
சிறுவயதினருக்கான இந்த வார்டு 2 தளங்களைக் கொண்டது. இதில் 3 ஜெனரல் வார்டுகள் உள்ளன. அவசரச் சிகிச்சைப் பிரிவு, சிறு அறுவைச் சிகிச்சைகள் செய்யும் வசதி எல்லாம் உள்ளன. ரத்ததானம் பெறும் வசதியும் உள்ளது. இங்கு தங்கி மருத்துவ சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு விளையாட இடம் உள்ளது. படிக்கும் இடம் உள்ளது. புற்றுநோய் மருத்துவம் தொடர்பான நூற்கள் அடங்கிய நூலகம் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு வெளியே உள்ள நோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கு ஆலோசனை கூறும் டெலி மெடிசன் வசதி உள்ளது. குழந்தைகளின் மனதைக் கவரும் ஓவியங்கள், குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் சுவரில் தீட்டப்பட்டுள்ளன.
"மகேஷ் சொல்லியிருக்கிறார்; நாம் பண்ணனும்' என்ற எண்ணமே எல்லாருடைய மனதிலும் மேலோங்கியிருந்தது. மகேஷ் சொன்னதை இப்போது செய்து முடித்துவிட்டோம் என்ற திருப்தி இருக்கிறது.
படங்கள்: பி.ராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...