எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தொண்டு: ஊர் கூடி கோயில் கட்டுவோம்!

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் கோயில் இருந்தும், அதைப் பராமரிப்பவர்கள் யாருமில்லாமல் புதர் மண்டிக்கிடப்பவை எத்தனையோ, ஒரு கால பூஜைக்குக் கூட வழியில்லாமல் இருக்கும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:47 am

ரவிக்குமார்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் கோயில் இருந்தும், அதைப் பராமரிப்பவர்கள் யாருமில்லாமல் புதர் மண்டிக்கிடப்பவை எத்தனையோ, ஒரு கால பூஜைக்குக் கூட வழியில்லாமல் இருக்கும் நூற்றாண்டு பழைமையான கோயில்கள் எத்தனையோ... இப்படிப்பட்ட கோயில்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கவனிப்பாரற்றுக் கிடந்த 55 கோயில்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை, தியாகராய நகரைச் சேர்ந்த மகாலஷ்மி சுப்பிரமணியம். குரு சேவா ரத்னா, திருப்பணி செம்மல் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், பத்மா சேஷாத்ரி பள்ளியில் நூலகராகவும், லயன்ஸ் கிளப்பில் தலைவராகவும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்.  தம்முடைய ஆன்மிகப் பணிகளைக் குறித்து அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...

  ""காஞ்சிப் பெரியவரின் வழிநடத்துதலின் பேரில் தொடங்கப்பட்ட "கச்சி மூதார் அறக்கட்டளை'யின் கீழ் வயதான கோயில் அர்ச்சகர்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டன. இதற்காக பெரியவரின் செய்தியை வீடு தோறும் சென்று பரப்பி, அவர்களிடமிருந்து உதவிகள் பெற்று அந்த அறக்கட்டளைக்கு அளித்திருக்கிறேன். இதுதான் என்னுடைய இறைப்பணிகளுக்கு விதையாக அமைந்தது.

  பராமரிப்பின்றி இருக்கும் கோயில்களை புனரமைக்க நான் தொடங்கிய இந்த இறைத் தொண்டை, ஆண்டவனின் கட்டளையாகத்தான் நினைக்கிறேன்.

  மயிலாடுதுறையிலிருக்கும் கோழிகுத்திதான் நான் பிறந்த ஊர். தந்தையின் மரணத்துக்குப்பின், சென்னைக்கு குடும்பத்தோடு வந்துவிட்டோம். பணி, திருமணம், குழந்தைகள் வளர்ப்பு... அவர்களின் படிப்பு, அவர்களின் திருமணம்... என்று பல விஷயங்களும் நடந்துவிட்டன. ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்னால் எங்களின் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அந்த ஊருக்கே பெருமை சேர்க்கும் கோயில்- பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் வானமுட்டி பெருமாள் கோயில். அந்தக் கோயிலை பராமரிப்பதற்கு ஆளின்றி புதர் மண்டிக் கிடந்தது. மேற்கூரையே இல்லை. கோயில் இருக்கும் நிலைமையைப் பார்த்ததும் எனக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

  நான் சென்னைக்குத் திரும்பியதும், என்னுடைய கிராமத்து முக்கியப் பிரமுகர்கள் சிலர் என்னிடம் வந்து "நீங்கள்தான் கோயிலைப் புதுப்பிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். "கோயில் இப்படி இருப்பது எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கின்றது. ஆனால் தனியாளாக என்னால் மட்டும் பெரியதாக என்ன செய்துவிடமுடியும்?' என்றேன். என்னுடைய அம்மாதான், இது இறைவனின் கட்டளை. "உன்னால் முடிந்த பொருளுதவியை நீ செய். உனக்குத் தோள் கொடுப்பதற்கு கிராம மக்கள் முன்வருவார்கள்' என்றார். அவர் சொன்னது அப்படியே பலித்தது. கிராமத்து மக்களின் உதவியோடும், அரசு அதிகாரிகளின் உதவியோடும் கடந்த 2007-ல் வானமுட்டி பெருமாள் கோயிலுக்கு சம்ரோக்ஷணம் நடந்தது. இதுதான் ஆரம்பம்.

  இதற்குப்பின், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் குத்தாலம் கிராமத்தைச் சேர்ந்த சோழீஸ்வரர் கோயிலை புனரமைத்த சம்பவமும் முக்கியமானது. காலம் காலமாக நிறையப் பேர் இதைப் புனரமைப்பதற்கு முன்முயற்சி எடுத்தும் அது நிறைவேறாமலேயே இருந்தது. காரணம், சில அரசியல் காரணங்களும் அங்கு நிலவியதுதான். அந்தக் கோயிலையும் நீங்கள் புனரமைத்துத் தரவேண்டும் என்று என்னிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அன்புடன் கேட்டுக் கொண்டனர். நான் அந்த கிராமத்தின் முக்கியஸ்தர்களையும், அரசு அதிகாரிகளையும், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களையும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய இறைப்பணி இது. ஒன்று சேர்ந்து பாடுபட்டால் இந்தப் பணியை நம்மால் செய்யமுடியும் என்று பேசினேன். அவர்களும் அப்படியே ஒத்துழைப்பை அளித்தனர். இப்போது அந்தக் கோயிலில் மூன்று கால பூஜை நடந்து வருகின்றது. இப்படி ஆறு கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது. நாங்கள் புனரமைக்கும் கோயில்கள் இருக்கும் சில கிராமங்களில் அந்தந்தப் பகுதியிலிருப்பவர்களைக் கொண்டே பூஜை செய்யச் சொல்கிறோம்.

  எந்தப் பகுதியில் இருக்கும் கோயிலையும் புனரமைப்பதற்கு எங்களால் இயன்ற உதவிகளை தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் கோயில் இருக்கும் பகுதியில் இருக்கும் மக்கள் எங்களை முறையாக அணுகவேண்டும். ஒற்றுமையாக இருக்கவேண்டும். கோயில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே ஒரு குழுவை உண்டாக்கி, அவர்களையே தோயில் புனரமைப்புக்காக ஒருங்கிணைக்க வைக்கிறோம். ஸ்தபதியையும், புனரமைப்புக்கான செலவுகளையும் எங்களின் நன்கொடையாளர்கள் அளித்துவிடுவார்கள். நாங்கள் புனரமைப்புக்கு எடுத்துக் கொள்ளும் கோயில்களில் ஒரு சன்னிதியை நிர்மாணிக்கும் பொறுப்பை எங்களின் குடும்பம் ஏற்றுக் கொள்ளும். என்னுடைய கணவர் சுப்பிரமணியமும், அமெரிக்காவிலிருக்கும் மகன் அர்ஜூன், மகள் ரம்யா ஆகியோர்களின் பங்கும் உள்ளது. இதைத் தவிர, வெளிநாடு வாழ் இந்தியர்களின் நன்கொடைகளும் நாங்கள் செய்யும் இறைப்பணிக்கு இருக்கின்றது. தற்போது 55 கோயில்களில் புனரமைப்புக்கான 50 சதவீதம் பணிகள் முடிந்திருக்கின்றன.

  நாங்கள் செய்து கொண்டிருக்கும் பணியில் முழுமையான ஆத்ம திருப்தி எங்களுக்குக் கிடைக்கின்றது. இந்த இறைப்பணியில் நீங்களும் உங்களின் பங்களிப்பைச் செலுத்தலாம். உங்கள் ஊரிலிருக்கும் புனரமைக்கப்படாத கோயிலை புனரமைக்கும் ஆர்வம் இருப்பவர்களும் எங்களை (தொலை பேசி எண்: 044-28152533/98400 53289) அணுகலாம். இறைப்பணிக்காக நன்கொடை தர நினைப்பவர்களுக்கும் விளக்கு ஏற்றுவதற்குக் கூட ஆள் இல்லாமல் இருக்கும் கோயில்களைப் பராமரிக்க நினைப்பவர்களுக்கும் நாங்கள் பாலமாகச் செயல்படுகிறோம். நீங்களும் பாலமாகத் தயாரா?! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.