47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கல்வி: பண்பை வளர்க்கும் கல்வி

பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தின் அருமை, நாட்டின் பாரம்பரியப் பெருமை, கலாசாரம், சுதந்திரப் போராட்டத்தில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:48 am

வேல்முருகன்

பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தின் அருமை, நாட்டின் பாரம்பரியப் பெருமை, கலாசாரம், சுதந்திரப் போராட்டத்தில் இன்னுயிர் தந்தவர்களின் வரலாறு, புராதனப் பெருமை யாவும் இளம் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

  இவற்றை நமது கல்வித்திட்டத்தில் கொண்டு வந்து இளம் தலைமுறையினருக்குப் புரிய வைத்தால் தீவிரவாதம் ஒழிந்து நாடு வல்லரசாகும் என்பதில் அழுத்தம் திருத்தமான நம்பிக்கை கொண்டுள்ளவர் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரித் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர்.

  எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஆழமான கருத்துக்களைக் கூறும் வாணவராயரின் பேச்சு, மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்துத் துறையினரிடமும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

  நாட்டிலேயே முதன் முதலாகக் கடந்த 1987-ம் ஆண்டு பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் (என்.ஜி.எம்.) கல்லூரியில் "அறவியலும் பண்பாடும்' என்ற பாடத்தை இளநிலையில் 6 பருவங்களிலும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் கட்டாயமாகக் கொண்டு வந்து புதுமையைப் புகுத்தியவர். இப்பாடத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டும் பட்டம் வழங்கப்படுகிறது.

  இப்பாடத்திட்டம் "பொள்ளாச்சி என்.ஜி.எம். மாடல்' என அழைக்கப்படுகிறது. இப்போது நாட்டின் பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் இப்பாடம் இடம் பெற்று வருகிறது. புதுமையைப் புகுத்திக் கல்வியாளர்கள் பலரின் கவனத்தையும் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த வாணவராயரைச் சந்தித்தோம்.

     அறவியலும் பண்பாடும் என்ற பாடத்தைக் கல்லூரிப் பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து உருவானது எப்படி?

  கடந்த 1984-ல் என்.ஜி.எம். கல்லூரிச் செயலராகப் பொறுப்பேற்றபோது, கல்வியுடன் மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. கல்வி என்பது பிரமாண்டமான கட்டடங்களிலோ, அதிநவீன கருவிகளிலோ, செறிவான தகவல்களிலோ இல்லை, தன்னை முழுமையாக அறிந்து கொள்வதே உண்மையான கல்வி என்பதை உணர்ந்தேன்.

  இதற்காக பண்பாட்டு, கலாச்சார ஆன்மிகக் கல்வி கொடுக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆன்மிகம் என்றால் மதம் மட்டுமில்லை. மனிதனின் பிரச்சினைகளைத் தீர்த்து அவனை முழு மனிதனாக உயர்த்துவதே ஆன்மிகக் கல்வி. இதற்காக அப்போதைய முதல்வர் என்.நமசிவாயத்துடன் ராமகிருஷ்ணா மிஷனின் அன்றைய துணைத் தலைவர் சுவாமி ரங்கநாதானந்தாவைச் சந்தித்தேன்.

  கல்வி, கல்வி முறைகள், வேதகாலம், தற்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து அவர் பேசினார். தேசத்தின் பெருமைகள், தேசத்தை உருவாக்கிய தலைவர்கள், வாழ்க்கைப் பண்புகள், சமுதாய நலனை அடிப்படையாகக் கொண்ட பண்புகள், சிறந்த குடிமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்குப் போதிக்குமாறு அவர் கூறினார்.

  உன்னத லட்சியத்துக்காக மாணவர்கள் தங்களை அர்ப்பணித்து வாழும் முறையில் பாடத்திட்டத்தை அமைக்கவும் ஆலோசனை கூறினார். அதன்படி சவால்களைச் சந்தர்ப்பங்களாக மாற்றி மனிதவளத்தை மேம்படுத்த உதவும் "அறவியலும் பண்பாடும்' என்ற கல்வியைக் கட்டாயப் பாடமாக நாட்டிலேயே முதன்முதலாக எங்கள் கல்லூரியில் கடந்த 1987-ல் தன்னாட்சி பெற்றபோது கொண்டு வந்தோம்.

  இதைக் கட்டாயப் பாடமாக்கும்போது ஏதேனும் எதிர்ப்பு இருந்ததா?

  என்.ஜி.எம். கல்லூரி தன்னாட்சிக் கல்லூரி என்பதால் இப்பாடத்திட்டத்தை இளநிலை மாணவர்களுக்குத் கொண்டு வருவது சாத்தியமானது. ஆரம்பத்தில் இதைக் கூடுதல் சுமையாக மாணவர்களும் பெற்றோர்களும் கருதினர். கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் இருந்து, இதற்கான பாடத்திட்டத்தை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று கேட்டனர். ஆனால் ஆசிரியர்கள் இதை விரும்பி ஏற்றனர். எதிர்ப்புகள் நாளடைவில் ஆதரவானது.



  இதற்கான பாடப் புத்தகங்கள்?

  புதிய முயற்சி என்பதால் இதற்கெனத் தனியாகப் பாடப் புத்தகங்களோ பாடத்திட்டமோ, ஆசிரியர்களுக்குப் பயிற்சியோ இல்லை. இந்தியாவின் புராண இதிகாசங்கள், உலக மதங்கள், இந்தியப் பெரியார்கள், வாழ்வாங்கு வாழ்வதற்கான பயன்பாட்டுப் பண்புகள் ஆகியவற்றுக்கான பாடங்களைத் தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை அழைத்துப் பேச வைத்தோம். அவர்களில் சிலரும் கல்லூரி முதல்வர்களும் பேராசிரியர்களும் சில தலைப்புகளில் பாடங்களை எழுதியுள்ளனர். அவற்றை அச்சிட்டுப் புத்தகங்களாக மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

  இப் பாடத்தின் மூலம் சமுதாயத்துக்குச் சொல்லும் சேதி?

  கல்வியின் முக்கியத்துவம் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது உணரப்படுகிறது. அரசும் கல்விக்கு உரிய முன்னுரிமை தருகிறது. ஆனாலும் இன்றைய சமுதாயத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகவும் தாழ்ந்து போயுள்ளது. இதற்குக் காரணம் இன்றைய கல்வி முறை வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய அளவுக்கு வாழ்க்கையின் குறிக்கோளை உயர்த்தவில்லை என்பதுதான். மனிதனை மனிதனாக்கும் கல்விதான் அறவியல் பண்பாட்டுக் கல்வி. இளைய மனங்களைச் செப்பனிடும் இத்தகைய கல்வி பண்பட்ட மாணவர்களை உருவாக்கும். இது போன்ற கல்வி இன்றைய சமுதாயத்துக்கு அவசியம் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.

  இப் பாடத் திட்டத்தில் பேராசிரியர்களின் பங்கு?

  இப்பாடத்திட்டம் வெற்றி பெற்றதிலும் பாடத் திட்டத்துக்கான புத்தகங்களை வெளியிடுவதிலும் தொடர்ந்து தொய்வில்லாமல் விடாமுயற்சியுடன் நடத்துவதிலும் பேராசிரியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதற்காக ஒரு பேராசிரியர் குழு செயல்படுகிறது.

  தேசிய அளவில் இப்பாடத் திட்டத்துக்கான பாராட்டுக் குறித்துப் பாராட்டு?

  1987-ல் என்.ஜி.எம். கல்லூரியில் சிறு பொறியாகத் துவங்கியது இப்பாடத்திட்டம். "பொள்ளாச்சி என்.ஜி.எம். மாடல்' என்ற பெயரில் கோவை பாரதியார் பல்கலைக் கழகக் கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரியின் மூலம் உலக வலைத் தள அமைப்பில் விவாதிக்கப்பட்டுப் பாராட்டு பெற்றது.

  கடந்த 1991-ல் இங்கு வந்த பல்கலைக்கழக மானியக் குழுவின் கண்காணிப்புக் குழுவும், 2007-ல் வந்த தேசியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனமான நாக் அமைப்பும் இப்பாடத் திட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளன.

  கடந்த 22 ஆண்டுகளாக நடந்து வரும் இப்பாடத் திட்டத்துக்குக் காஞ்சிப் பெரியவர், குன்றக்குடி அடிகளார், சி.சுப்பிரமணியம் ஆகியோரின் பாராட்டுக் கிடைத்தது. என்.ஜி.எம். கல்லூரியைத் தொடர்ந்து நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இக் கல்வியைப் பாடத்திட்டத்தில் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     இத்திட்டத்தின் அடுத்த கட்டப் பயணம்?

  "அறவியலும் பண்பாடும்' என்ற இப் பாடத் திட்டம் "மனித வள மேன்மைக் கல்வி' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதில் யோகாசனங்கள், தியானம் ஆகியவை மாணவ, மாணவியருக்குக் கற்றுத் தரப்படுகிறது. இந்தியப் பாரம்பரியங்கள், மென்திறன் ஆற்றல்கள், ஜனநாயகக் கடமைகள், மனித உரிமைகள், உறவுகளின் மேன்மை குறித்த பாடங்கள் உள்ளன.

  இவற்றைத் தங்கள் இயல்புகளாக மாற்றிக் கொள்ளும் எங்கள் மாணவச் செல்வங்கள் வளாகத் தேர்வில் சிறப்பாகத் தேறி வேலைக்கான தகுதிகளைப் பெற்றுப் பணியில் சேர்கின்றனர்.

  வாழ்க்கை ஓட்டத்தின் இடையில் வரும் தடைகளைத் தாண்டி மாணவர்களின் முழு ஆற்றல்களை வெளிப்படுத்தி மிகச்சிறந்த குடிமக்களாக மாற்றி வேலையிலும் வாழ்க்கையிலும் வளமுறச் செய்வதில் இந்த அறக்கல்வி மிகப் பேருதவியாக உள்ளது.

  இதைவிடச் சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்றால் அம்மாற்றத்துக்கும் என்.ஜி.எம். கல்லூரி தயார். ஏனெனில் மாற்றம் ஒன்றுதான் இந்த உலகில் என்றுமே மாறாதது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.