சேவை: "பொன்னான நேரம்'!
உயிர் காக்கும் சேவையில் 24 மணிநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருப்பவை ஆம்புலன்ஸ் வாகனங்களும், அதை ஓட்டும் வாகன ஓட்டிகளும். இதுவரை நோயாளியின் உயிரை தகுந்த நேரத்தில் காப்பாற்றுவதற்கு மட்டுமே ஆம்புலன்ஸ் சேவை


உயிர் காக்கும் சேவையில் 24 மணிநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருப்பவை ஆம்புலன்ஸ் வாகனங்களும், அதை ஓட்டும் வாகன ஓட்டிகளும். இதுவரை நோயாளியின் உயிரை தகுந்த நேரத்தில் காப்பாற்றுவதற்கு மட்டுமே ஆம்புலன்ஸ் சேவை என்றிருந்ததை, ஹிதேந்திரனின் உறுப்பு தான சம்பவம் மாற்றியது. மூளைச் சாவு நிலைக்குப் போன ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை குறித்த கால அவகாசத்தில் குறித்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றதன் மூலம், தானமாக பெறுபவர்களின் உயிர்களையும் காப்பாற்றுவதற்கு முடியும் என்று நிரூபித்தது ஆம்புலன்ஸ் சேவை.
இப்படி உயிர் காக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிப்பவர்கள்தான் கோபிச்செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த எஸ்.சரத் பாபு, எஸ்.ஆனந்த், எம்.மாரியப்பன், பி.சங்கர் ஆகிய நான்கு இளைஞர்கள். சரத் பாபுவும், ஆனந்தும் முதுகலை உயிர் நுட்பவியல் படிப்பை முடித்துவிட்டு அவசரகால மருத்துவ உதவியாளர்களாகவும், மாரியப்பனும், சங்கரும் ஐ.டி.ஐ.,யில் "ஃபிட்டர்' பயிற்சி பெற்று வாகன ஓட்டுனர்களாகவும் இருக்கின்றனர்.
இனி, சாலை பாதுகாப்பு குறித்த சில பயனுள்ள தகவல்கள் அந்த இளைஞர்களின் மொழியில்....
""வீட்டில், சாலைகளில் கூட இப்போதெல்லாம் அவசர அவசரமாகக் காரியங்களைச் செய்வதற்கு பலரும் பரபரக்கிறார்கள். இயந்திரமயமாக மாறிவிட்ட மனிதவாழ்வில் மனிதநேயம் மங்கிவிட்டதோ என்பது மனசாட்சி உள்ள மனிதர்களின் மனதில் தினமும் எழும் கேள்வியாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை நேரங்களில் எப்போதும் புறப்படும் நேரத்துக்கு சற்று முன்னதாக புறப்பட்டால் நீங்கள் நிதானமாகவும், குறித்த நேரத்தில் அலுவலகம் செல்வதற்கும் உபயோகமாக இருக்கும். ஒரேநேரத்தில் எல்லோரும் பணிக்குக் கிளம்பும் போதுதான் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது'' என்றார் மாரியப்பன்.
""விபத்தில் காயமடைந்தவர்களையும், பாம்பு கடி, தீக்காயம், மற்றும் பிரசவத்திற்கு காத்திருக்கும் பெண்களையும் உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கும் வகையில் தனியாருடன் இணைந்து ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகிறது தமிழக அரசு.
கோபியில் ஆம்புலன்ஸில் பணியாற்றும் எங்களின் சேவை அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப் பகுதியில் எங்களின் ஆம்புலன்ஸ் சேவையை பிப்ரவரி மாதம் 28 ம் தேதி துவக்கினோம். இதுவரை 100 சம்பவங்களில் எங்களின் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியிருக்கிறோம். 56 சாலை விபத்துகள், தீக்காயம் அடைந்த 32 பேருக்கு அவசரகால சிகிச்சை, 9 பெண்களுக்கு அவசரகால பிரசவம் ஆகியவற்றுக்காகவும் எங்களின் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன'' என்றார் சரத் பாபு.
""என்னைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் தான் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் நடைபெறுகின்றன. அண்மையில் பங்களாபுதூர் அருகில் நடைபெற்ற விபத்தில் பலத்த காயமடைந்து நினைவு இழந்தவரை மீட்டு, அவர் வைத்திருந்த ரூ.10,000 மற்றும் செல்போனை பத்திரமாக எடுத்து மருத்துவரிடம் கொடுத்துள்ளோம்'' என்றார் சங்கர்.
""இந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற எண்ணை தொடர்பு கொண்டால், சம்பவம் நடந்த இடத்திற்கு ஆம்புலன்ûஸ அனுப்பி வைப்போம். விபத்துக்குள்ளானவருக்கு தகுந்த முதலுதவியை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அளிப்போம்.
இப்படி ஒரு பணியிலிருக்கும் நாங்கள் சந்திக்கும் பிரச்னைகளில் பல. ஒருவர் 108 என்ற எண்ணிற்கு அழைத்தவுடன் தொலைபேசியில் பேசுபவர் எந்த இடத்திலிருப்பவருக்கு உதவி தேவைப்படுகிறது என்று கேட்பார். பின்னர், அந்தப் பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு அவர்களிடம் சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணை கொடுப்பார்கள்.
நாங்கள் சம்பவ இடத்தை விரைவில் அடைவதற்காக அந்த எண்ணை தொடர்பு கொள்ளும் போது அது பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கும், அல்லது அழைப்பை தொடர்பு கொண்டால் யாரும் எடுக்கமாட்டார்கள். அப்படியே எடுத்தாலும் சரியாக பதில் கூறமாட்டார்கள்.
மேலும், ஆம்புலன்ஸ் செல்லும் போது சாலைகளில் சில போக்குவரத்து வாகனங்கள் வழி விடுவதில்லை. ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டுச் செல்ல வேண்டும் என்ற அடிப்படை மனித நேயம் கூட அவர்களுக்கு இருப்பது இல்லை. சில சமயங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக எங்களது வேனை கடந்து சென்று, கேலி செய்துவிட்டுச் செல்கின்றனர்.
சமீபத்தில் 108க்கு தொடர்பு கொண்டு கோபி பஸ் நிலையத்தில் விபத்து, கச்சேரி மேடு பகுதியில் விபத்து என்று பொய்யான தகவல்களைக் கொடுத்தனர். அங்கு சென்று பார்த்தால் விபத்தே நடக்கவில்லை. இப்படி தவறான தகவல் கொடுப்பதால் எங்களுக்கு பணி செய்வதில் தொய்வு ஏற்படாதா?'' என்கிறார் சரத்.
- பொதுமக்களின் ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் போதும் குறித்த காலத்தில் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று விடுவோம். விபத்து நடந்ததிலிருந்து அடிப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நேரத்தை, "பொன்னான நேரம்' என்பார்கள் மருத்துவர்கள். அந்தப் பொன்னான நேரத்தில் விபத்தில் அடிப்பட்டவரை காப்பாற்றுவதுதான் மனிநேயம்! அத்தகைய மனித நேயம் இத்தகைய இளைஞர்களால் மேலும் சிறக்கட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...