47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தற்காப்பு: இது... யா...ஊ...சாமியோவ்!

நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடையே தற்போது படிப்பறிவு நாளுக்கு நாள் பெருகிவருவது ஆரோக்கியமான விஷயம்.   "தங்களையும் அவர்கள் சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள்; தங்களின் சுற்றுப்புறங்களை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:50 am

வேல்முருகன்

நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடையே தற்போது படிப்பறிவு நாளுக்கு நாள் பெருகிவருவது ஆரோக்கியமான விஷயம்.

  "தங்களையும் அவர்கள் சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள்; தங்களின் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள்'- இதுதான் அவர்களைக் குறித்து காலம்காலமாக பலருக்கும் இருக்கும் கருத்து. இந்தக் கருத்தை போக்கும் வண்ணம், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அடுத்த தலைமுறைக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார் பஞ்சலிங்கம். கிணத்துக்கடவு அருகே சோழனூரைச் சொந்த ஊராகக் கொண்டவர் இவர். இண்டர்நேஷனல் ஒகினாவோ ஷோரின் ரியோ பாணியில் அமைந்த கராத்தே பயிற்சியை இந்திய அளவில் சொல்லிக் கொடுக்கும் தலைமைப் பயிற்சியாளர் இவர்.

  பொள்ளாச்சி அருகே கொள்ளுப்பாளையம் நரிக்குறவர் காலனியில் உள்ள இளைஞர்களுக்கும், அந்தப் பகுதியிலிருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக இலவசமாக கராத்தே பயிற்சி அளித்து வருகிறார் பஞ்சலிங்கம். இனி அவரின் மொழியில் அவர் நரிக்குறவ இளைஞர்களுக்குப் பயிற்சியளித்த அனுபவத்தைக் கேளுங்கள்...

  ""ஊசி, பாசி வாங்கலியோ சாமியோவ்' -இந்தக் குரல் கேட்காத இடங்களே தமிழகத்தில் இருக்காது. இக்குரலுக்குச் சொந்தக்காரர்கள் பஸ் நிலையங்களிலும் திருவிழாக்களிலும் ஊசி, பாசி உள்ளிட்ட சிறுபொருள்களை விற்றுப் பிழைக்கும் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்களிடமும் திறமை உண்டு. அதை வெளிக்கொணர வேண்டும் என்று எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றனர்?

  அந்த ஆர்வத்தை நான் அவர்களிடமிருந்து வெளிக்கொணர நினைத்தேன். நான் அடிப்படையில் கராத்தே பயிற்சியாளர் என்பதால் அந்தப் பயிற்சியை முறையாக அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க முடிவெடுத்தேன். ஏனென்றால் கராத்தே என்பது வெறும் சண்டைப் பயிற்சி கலை, விளையாட்டு என்பதைத் தாண்டி, ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுக்கும் பயிற்சிகள் என்ற வகையில், அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

  பொள்ளாச்சி அருகே கொள்ளுப்பாளையம் நரிக்குறவர் காலனியில் உள்ள இரு இளைஞர்களுக்குக் கடந்த 4 ஆண்டுகளாக இலவசமாகக் கராத்தே பயிற்சி கொடுத்ததன் மூலம் அவர்கள் தேசிய அளவில் பரிசு பெறுவதற்கு உதவினேன்.

  அதன்பின் பொள்ளாச்சி அருகே கொள்ளுப்பாளையத்தில் உள்ள 32 பேருக்குப் பயிற்சியளித்தேன். துவக்கத்தில் பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு இருந்தாலும் தங்கள் பிள்ளைகளின் நாகரிக மாற்றத்தில் ஆர்வம் கொண்ட அவர்களும் பின்னர் எனது முயற்சிக்கு ஒத்துழைப்புத் தந்தனர்.

  ஊசி, பாசி விற்பனை செய்தாலும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் "யா... ஊ... ஹோஸ்' எனக் கராத்தே பயிற்சி பெறுவோரின் ஒட்டுமொத்த சத்தம் பார்ப்போரைப் பிரமிப்பில் ஆழ்த்தும்.

  தொடர்ந்து பயிற்சி பெறுவோரே தவறு செய்யும்போது ஒருமுறை கற்றுத் தந்தால் அதைக் நேர்த்தியாகக் கற்றுக் கொள்ளும் அந்தச் சமூகத்து இளைஞர்களின் பாங்கு, மறுமுறை செய்யும்போது அதைத் தவறில்லாமல் பாங்குடன் செய்யும் அழகு, அவர்களின் உடல் திறன் ஆகியவை என்னை பிரமிக்கவைத்தது.

  வெள்ளை 1, 2, 3, மஞ்சள், ஆரஞ்சு, பர்ப்பிள், பச்சை, பிரெüன் மற்றும் பிரெüன் 1, கருப்பு என கராத்தேயில் தகுதிக்கேற்ப பெல்ட்டுகள் தரப்படுகின்றன. இதில் கொள்ளுப்பாளையம் மாணவர்கள் 2 பேர் பிரெüவன் 1-வது பெல்ட்டைப் பெற்றுள்ளது அவர்களின் தணியாத தாகத்துக்கு எடுத்துக்காட்டு.

  கொள்ளுப்பாளையம் காலனியைச் சேர்ந்த கவுண்டமணி மற்றும் மோகன் ஆகியோர் பெங்களூரில் கடந்த 2006-ல் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் இரணடாமிடம் பெற்றனர். மேலும் பலர் பல போட்டிகளிலும் பல்வேறு நிலைகளில் பரிசுகளைப் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் அவர்களின் கடுமையான இடைவிடாத பயிற்சிதான்.   நரிக்குறவ இன மாணவர்களிடம் பல்வேறு திறமைகள் குவிந்துள்ளன. தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றுச் சாதனை படைத்ததே அவர்களின் திறமைக்குக் கிடைத்த பரிசு. இந்தப் பயிற்சியின் மூலம் அம்மாணவர்கள் பிற மாணவர்களுடன் கலந்து பேசி நாகரிக வளர்ச்சி அடைவதற்கும், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இன்னும் முனைப்புடன் கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிப்பதற்கும் இந்த கராத்தே பயிற்சி வழி செய்தது.

  பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இம்மக்களுக்கு அரசு தேவையான உதவிகளைச் செய்தால், அவர்களிடம் அபரிமிதமாக உள்ள திறமையை வெளிக் கொணர முடியும். அவர்கள் மூலமாக இந்தியாவுக்கும் புகழ் கிடைக்கும்'' என்றார் பஞ்சலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.