ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆறுதல் பரிசுக் கதை: விமானம் தேடும் பறவைகள்

இப்ப நெனச்சாக்கூட மலச்சி மலச்சி போறன், நாம எப்டி இந்த அரபு நாட்டுக் வந்தோம்னு! செங்குறிச்சி மல்லாட்ட கொல்லியில தப்புக் கொட்டை பொறுக்கப் போனாலும், உளுந்தூர் பேட்ட கோட்டையாம்பாளையம் பொண்டுவளோட கள வெட்டப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:09 am

சித்தார்த்தன்

இப்ப நெனச்சாக்கூட மலச்சி மலச்சி போறன், நாம எப்டி இந்த அரபு நாட்டுக் வந்தோம்னு! செங்குறிச்சி மல்லாட்ட கொல்லியில தப்புக் கொட்டை பொறுக்கப் போனாலும், உளுந்தூர் பேட்ட கோட்டையாம்பாளையம் பொண்டுவளோட கள வெட்டப் போனாலும், உளுத்தாண்டார் கோயில்ல மல்லாட்டச் செடி ஆயப் போனாலும், பாதூரு பக்கம் முந்திரிக் கொட்ட பொறுக்கப் போனாலும், ""கொய்த்துக்குப் போறீயாம்டி?''ன்னு சனங்க வெசாரிச்சதுவோ.

""பாய்ங்கவூட்டு பொண்டுவதான் போவுங்க, நம்ம பொண்டுவளும் இப்ப அரபி நாட்டுக்குப் போவ ஆரம்பிச்சுட்டாளுங்க''ன்னு தனலட்சுமி வாவுரவிப்போறா.

எல்லாம் காட்டுப் பொறத்தாளுவ! விழுப்புரம், பண்ருட்டி, வெர்த்தாச்சலம் வரைக்கும் பஸ்சுல போயிருப்பாளுவ. ஏரோப் பிளேனுல ஏறி கொய்த்துக்குப் போறன்னா, வாவுருவிப் போவாம என்னா பண்ணுவாளுவன்னு நா நெனச்சுக்கறேன்.

நானும் காட்டுப்பொறத்தாத்தான். அயங்குஞ்சரத்துல பொறந்து, செங்குறிச்சி மாமனுக்கு வாக்கப்பட்டு வந்துட்டேன்.

துர்வம் கள்ளக்குறிச்சி வெரைக்கும் மாமங் கூட்டிக்கிட்டுப் போயிருக்குது. சென்னப் பட்டணத்த பாக்கணும்னு நெனவு தெரிஞ்ச நாளல்லேருந்து ஆசப்படுறேன். செங்குறிச்சி தார்ரோட்ல பஸ்சுங்க போறதத்தான் பாத்துருக்கேன். ஆனா, கொய்த்துக்கு போவ பிளேனு புடிக்கிறதுக்கு வர்ரப்பதான் சென்னப் பட்டணத்த பாக்கறேன். எம்மாம் பெரிய ஊரு! எம்மாஞ்சனங்க! வெளக்கு வச்ச நேரத்துல பிளேனு மேல கௌம்புது. கண்ணாடி வழியா கீழ பாக்குறேன். கரண்டு வெளக்கால ஊரயே சோடிச்ச மாதிரி மினுக் மினுக்குன்னு சென்னப்பட்டணம் சொலிக்குது. அப்பப் பாத்ததுதான்! இனிமே இந்தக் கொய்த்துலேர்ந்து திரும்பி போறப்பதான் சென்னப் பட்டணத்த பாக்க முடியும்னு நெனச்சுக்கிறேன்.

வூட்டுக்குள்ளர்ந்து கசாமுசான்னு சத்தம் வருது. வெடியக் காலையிலயே அரபிக்கார எசமானி முழிச்சிக்கிட்டா போல்ருக்கு. அவளோட ஹைய்ரிங்களும் (குழந்தைகள்) முழிச்சிக்கிட்டு கத்துதுவோ. இன்னிக்கி வேல இடுப்ப ஒடிச்சிடும்னு நெனச்சுக்கறேன்.

இதுங்களுக்கு விடிஞ்சதுமே திங்கறதுக்கு சாப்பாடு தயாரா இருக்கணும். இல்லனா பிச்சி எடுத்துடுவா அரபிக்காரி எசமானி.

முன்னாடியே எந்திரிச்சி கோதும மாவப் பெசைஞ்சி சப்பாத்தி சுட்டுட்டேன். பேரிச்சம் பழச்சாறுல தொட்டுக்கப் பண்ணணும். இதுங்களுக்கு இதுதான் தேனு! பேரிச்சம் பழத்தை சாக்குல, மூட்டை மூட்டயாக் கட்டி சிமிண்டு ரூமுக்குள்ள அடுக்குதுங்க. நம்மூரு கொல்லியில வாய்க்கா வரப்பு கட்டற மாதிரி சிமிண்டுல கட்டிவுட்டுடுதுங்க. அதுவழியா பேரிச்சம் பழம் கனிஞ்சு ரசமா ஓடிவரும். வடிஞ்சு வர்ற பேரிச்சம் தேன புடுச்சிக் கொண்டுபோய் வாணலியில காய்ச்சி, பூண்டும் இஞ்சியும் போட்டு தாளிச்சி வச்சிட்டாப் போதும். சப்பாத்தியில தடவி அதுங்கபாட்டுக்கு உள்ள தள்ளும்ங்க....

உளுத்தாண்டார் கோயில் திருவிழாவுல கோட்டையாம்பாளையத்துக்காரன் தள்ளுவண்டில பேரீச்சம் பழத்த புளி மாதிரி கொட்டி அமுக்கி வச்சி, கைத்தாரசுல விக்கறதத்தான் பாத்துருக்கேன். ஆனா இங்கதான் ஆடு மாடுங்களுக்கெல்லாம் தொட்டியில பேரிச்சம்பழத்தக் கொட்டி அரபிக்காரிங்க தின்னக் கொடுக்கறதப் பாக்குறேன்.

ஆடுமாடுங்களப் பாத்துக்க கேரளாக்காரன் ஒருத்தன் இருக்கான். அவம்பேரு கேசவன் நாயர். வயசானவனா இருந்தா நாயரேன்னு கூப்புடலாம். இவன் நடுத்தர வயசுக்காரன். கேசவான்னுதான் நான் கூப்புடுவேன். இவனுக்கு மூணு புள்ளைங்க இருக்குதாம். இவன் கொய்த்துக்கு வந்து மூணு வருஷம் ஆகுதாம். அடுத்த மாசம் ஊருக்குப் போறதா சொல்லிக் கிட்டிருக்கான்.

"கொய்த்து எண்ணெக் கம்பெனியில வேல செஞ்சுக்கிட்டிருக்கேன்னு' அவன் வூட்டுக்கு கடுதாசி போடுவானாம். "ஆனா இங்க ஆடு மாடு ஒட்டகம் மேய்க்கிறேன்னு' சோகமாச் சொல்லி சிரிப்பான். அதிகாலையிலேயே பேரிச்சம்பழம் பொறுக்கக் கௌம்பிடுவான். காலைல எட்டு மணிக்கே, நம்மவூர் நாட்ல மத்தியானம் அடிக்கிற வெயிலு கொளுத்த ஆரம்பிச்சுடும். கேசவன் நாயர் அந்த வெய்யிலுல பொறக்கிட்டு வந்த பேரீச்சம் பழத்தை ஆடுமாடு தொட்டிங்கல்ல போடுவான். அதுங்கள பசியில்லாம தின்ன வக்கணும். அவனுக்கு பத்து பதினோரு மணிக்குத்தான் சாப்பாடு. அதுக்குள்ளியும் காஞ்சி கறுத்துப்பூடுவான். இப்படி கஷ்டப்படுறானேன்னு சொலபமா வேல பாக்க வழி சொன்னா, ""எனிக்கி அறியும்...எனிக்கி அறியும்'' அப்படிம்பான். ஆனா பாலைவனத்துல போற ஒட்டகம் மாதிரி அசராம ஒழைப்பான்.

அரபிக்கார எசமானன் பக்கத்துல இருக்குற எண்ணெய்க் கம்பெனியில வேல செய்யுறான்னு கெபீர் ஹோர்மா (மூத்த பெண்டாட்டி) சொன்னா. அரபிக்கார எசமானனுக்கு நாலு ஹோர்மாங்க. மூத்தவதான் அனுசரணையா பேசி வேல சொல்லித் தருவா. நிக்கவுடாம வேலயும் வாங்குவா.

நாலு ஹோர்மாங்களோட எப்படி குடும்பம் நடத்துறான்னு பாக்க ஆச்சரியமா இருந்தது. வாரம் ஒருத்தி கூட படுத்துக்கணும்னு ஒப்பந்தம் போட்ட மாதிரி இருக்கும்னு நான் நெனச்சிக்கிட்டேன். ஆனா, இன்னிக்கி நம்ம கூட படுத்துக்குவான்னு தெரியறாப்ல மூணாம் பொண்டாட்டி, தல நெறயா மல்லிப் பூ வச்சிக்கிட்டு, அலங்காரம் சோடனையெல்லாம் பண்ணிக்கிட்டு ஒக்காந்திருப்பா.

அரபிக்கார எசமானன் வேலையிலிருந்து வந்தவொடனே ரெண்டாவது ஹோர்மா ரூமுக்குள்ள போயிடுவான். இன்னிக்கு அவ கூடதான் சாப்பாடு, தூக்கம் எல்லாம்.

மூணாம் பொண்டாட்டி ஏமாந்து போய் எந்திரிச்சுப் போயிடுவா. அவ மொகத்தப் பாக்க பாவமா இருக்கும். ஆனா, சண்ட சாடி எதுவும் வராது.

நம்ம வூர்நாட்டுக்காரிங்க ஒரு சக்களத்தி கூட மல்லுக்கட்டி மாஞ்சு போறத பாத்த எனக்கு இது ரொம்ப ஆச்சரியமாப்பூட்டுது.

வெள்ளிக்கெழம சர்க்காரு லீவு. அரபிக்கார எஜமானன் எல்லா ஹோர்மாங்களையும் எங்காச்சும் வெளியில கூட்டிக்கிட்டுப் போவான். அப்போ எல்லா ஹோர்மாங்களோட மொகத்திலேயும் பூரிப்புத் தெரியும். ஹைய்ரிங்களும் (குழந்தைகள்) கொண்டாட்டம் போட்டுக்கிட்டு துள்ளியாடும். அததுங்க நாக்கு ருசிக்கேத்த மாதிரி தீனி செஞ்சு போடறதோட ஒரு நா ரெண்டு நாளுக்குத் தேவையானத மொத்தமா தயார் பண்ணியாவணும். எனக்குத்தான் இடுப்பொடிஞ்சி போயிடும். 

ஹைய்ரிங்கள சின்னப் புள்ளிவோதானேன்னு அதட்டிட முடியாது. அதது அதோட தாய்ங்ககிட்ட "மோளாச்சு' சொல்லிடும். ராத்திரி தன்னோட புருஷன் தன் கூட படுக்க வரலங்கற கோபத்த, ஹோர்மாங்க எம்மேல காட்ட ஆரம்பிச்சுடுவாங்க.

நண்டும் சிண்டுமா ஏழெட்டு புள்ளிவோ இருந்தாலும், மூத்தவ பொண்ணுதான் பெருசு. ஆத்தா மாதிரியே நெடுநெடுன்னு ஒசரம். அழகு பூரிச்சுக் கௌம்புற வெடல வயசு. இது அடுப்படிக்கு வந்தா ஆத்தாக்காரியும் பின்னாடியே வந்துடுவா. ""கெபீர் பிந்த், ஹெதேத்தி'' (பெரிய பெண்ணே சாப்பிட்டியா?) அப்படிம்பா. பெத்த புள்ள மேல கரிசனம்.

நல்ல பையனாப் பாத்து மொதத் தாரமா கட்டிக் குடுத்துடம்னு மனசுக்குள்ள இருக்குற ஆதங்கத்த எங்கிட்ட மட்டும் சொல்வா. அது எந்த விகல்பமும் இல்லாம "பொளுக்குன்னு பொளுக்குனு' ஆத்தா பேசறதயே பாத்துக் கிட்டு நிக்கும். "அப்பன் பேச்சக் கேட்டு எங்க ரெண்டாந்தாரம் மூணாந்தாரத்துக்கு சம்மதஞ் சொல்லி தலையாட்டிடுவாளோன்னு பயமாயிருக்கு'ன்னு எங்கிட்ட சொல்வா. "எத்தன பொண்டாட்டி கட்னாலும் மொதப் பொண்டாட்டிக்குத்தான் பவுரும், பவுசும் எந்த நாட்லயும் இருக்கும்னு' நான் சொல்வேன். நா என்னமோ ஒலக விசயத்தையே கரைச்சிக் குடிச்சவ மாதிரி அவகிட்டே பேசுவேன். அத அவ ஆமோதிச்சி தலையாட்டுவா.

வூர்நாட்லர்ந்து வர்ர கடுதாசிய வெள்ளிக்கிழமையன்னிக்குத்தான் படிச்சுத் தெரிஞ்சுக்க முடியும். பத்து மைல் தள்ளியிருக்குற வெள்ளிக்கிழமையன்னிக்கு, நம்ம நாட்டுச் சனங்க எல்லாம் ஒண்ணாக்கூடும்ங்க. அங்க சிலோன்கார பத்மகுமாரி, இழுத்து இழுத்து படிப்பா.

  இந்த வார கடுதாசிய படிச்சிக் காட்டுனா. நடுப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வக்கப் போறதாகவும், கொஞ்சம் "ஜென்டிப்பான' எடத்லேர்ந்து மாப்ள வந்திருக்கறதால, சுருக்கா கல்யாணத்த முடிச்சுப்புடணும்னு, வூட்டுக்காரரு கடுதாசியில சொல்லியிருந்தாரு.

கடுதாசியப் படிச்சிக் காட்டிப்புட்டு பத்மகுமாரியும் பிலாகண் வைப்பா. அவ அண்ணன் தம்பி ஆயி அப்பன் எல்லாரும் ஒவ்வொரு நாட்ல இருக்காங்கன்னு சொல்வா. குடும்பமே தனித்தனியா பிரிஞ்சி கெடக்குது. அவ வேல பாக்குற அரபிக்காரன் குடும்பமும், பெரிய குடும்பம். வேல முதுகெலும்ப ஒடிச்சிடும். பத்மகுமாரி, ""ஞான் கதைச்சது வெளங்குச்சா அக்கா?'' அப்படிம்பா கடைசியா. கிட்டத்தட்ட கேசவன்நாயர் பேசுறமாதிரியே இருக்கும் இவ பேசுறதும்.

""இங்க வந்து அடிமையாக் கெடந்து அல்லல்படுறோம். ஆனா ஊர்நாட்டுக்குப் போனா, வெளிநாட்டுல போய் சோரம் போயி சம்பாரிச்சிட்டு வர்ரதா பேசுவாங்க. நா கௌம்பி வர்ரப்பவே கொய்த்துக்கு போறீயாம்டி? கொய்த்துக்கு போறீயாம்டி? வூர் நாட்டுக்காரிங்க கேட்டாளுங்க'' ன்னு நான் சொன்னேன்.

""அவள்கள் தவளைக்குட்டிகள். விடுங்கள் அக்கா'' அப்படிம்பா பத்மகுமாரி.

மத்தியானம் நல்ல வெயிலு. நெஞ்சுக் கூட்டுக்குள்ள நெகுநெகுன்னு சூடு கௌம்புது. வூட்டுக்காரரு கடுதாசியில எழுதியிருந்தத நெனச்சி நெனச்சி மனம் அல்லாடுது. நடுள்ளுவ இப்பத்தான் பொறந்து தத்தித் தவழ்ந்து நடந்த மாதிரியிருக்கு...ஆச்சி...அதுக்கும் பதினெட்டு பத்தொம்பது வயசு ஆச்சி...சின்னப் பையனும் அஞ்சாங் கௌôசு போறான். இன்னும் ச்லேட்டுப் பையத்தான் எடுத்துக்கிட்டுப் போறான். அவனையாச்சும் நாலெழுத்துப் படிக்க வச்சுப்புடணும்னு மாமன் கடுதாசியில சொல்லியிருக்குது. அதுதான் என்னாப் பண்ணும்? உளுந்தூர்ப்பேட்ட ஜில்லாவே காஞ்சி கெடக்குதாம். "எல்லாப் பயலுவலும் கேரளாவுக்கு மண்ணு வெட்டப் போரானுங்க. புள்ளிங்கள வுட்டுட்டு நான் எப்படி கேரளாவுக்குப் போறது? அதான் காஞ்சி கெடக்கற காக்காணி கொல்லியில மல்லாடுறேன்'ன்னு ஒரு தடவை போன் பேசுனப்போ சொல்லிச்சு.

அடிக்கடி போன் வந்தா அரபிக்காரன் சொல்ல மாட்டான். "கடுதாசி போடுன்னு சொல்லிடு'ம்பான். கடுதாசியும் அவன் வேல பாக்குற எண்ணெக் கம்பெனி அட்ரசுல போடணும். ரெண்டு நாளு கழிச்சு, கடுதாசியக் கொண்டு வந்து தருவான். அதையும் வெள்ளிக்கிழமையில கொண்டு போயித்தான் படிச்சுத் தெரிஞ்சுக்க முடியும்.

இந்த மாசச் சம்பளத்துல எனக்கு ஒரு செல்போன் வாங்கித் தாங்கன்னு அரபிக்காரன்கிட்ட சொன்னேன். ""செல்போனிருந்தா எந்த நேரமும் போன் வந்துகிட்டே இருக்கும். வேல செய்ய மாட்டே'' அப்படின்னு மறுத்திட்டான்.

நான் மூத்த ஹோர்மாகிட்ட மன்றாடி செல்போன் வேணுமின்னு கேட்டேன். அவ செபாரிசு பண்ணி வாங்கிக் கொடுத்தா. வெள்ளிக் கெழமை மட்டும்தான் எங்கிட்டே செல்போனக் குடுப்பா. மத்த நாள்ல வாங்கி சுவிட்ச் ஆப் பண்ணி வச்சுடுவா.

இந்த ரெண்டரை வருஷத்துல சம்பாதிச்சத கணக்குப் போட்டுப் பாத்தா, பெரிசா இருக்கும்ணு தோணல. முந்திரி கொட்ட பொறுக்குறது, மல்லாட்ட ஆயறது, இதோட சேத்து, நாலு வெள்ளாடு வாங்கி வளர்த்திருந்தாலே இங்க சம்பாதிச்சதுக்கும் மேலேயே, நம்ம வூர்நாட்லேயே சம்பாதிச்சதுக்கும் மேலேயே, நம்ம வூர்நாட்லேயே சம்பாதிச்சிருக்கலாம்னு நெனச்சுக்கிறேன். அரபி நாட்டுக்கு வந்து, மாடா ஒழச்சி இடுப்பு வலி சேந்துகிட்டதுதான் மிச்சம். போவுது போ. நம்மோட போவட்டும் இந்தப் பொழப்பு! நம்ம புள்ளங்க தல தூக்கறதுக்கு இந்தக் கஷ்டம் பட்டுத்தான் ஆகணும். நடுப்புள்ளய கட்டிக் குடுத்து புருஷன் வூட்டுக்கு அனுப்பிட்டா, அடுத்தது சின்னப் பையந்தான். இருக்கறதவச்சி நல்லபடியா ஆளாக்கிடலாம். போதும் இந்த அரபி நாட்டு வேல...

மூத்தவள கட்டிக்குடுத்து ரெண்டு புள்ளிங்க பொறந்துடுச்சி. மருமொவனும் வெவசாயம்தான் பாக்குது...

இந்த வாரம் வெள்ளிக்கெழம பத்மகுமாரி ஒப்பாரி வைக்காத கொறையா பொலம்ப ஆரம்பிச்சுட்டா. ""அக்கா, யாழ்பாணத்திலே எங்கள் உறவுகளை கொன்று குவித்துவிட்டார்கள். யாராவது தப்பிப் பிழைத்திருப்பார்களா? எப்படிக் கண்டுபிடிப்போம். எங்கே தேடுவோம்?'' என்று கலங்கினாள்.

இப்ப எங்கிட்டருந்த செல்போனுலேர்ந்து சத்தம் எழும்புச்சு. இன்னும் எனக்கு செல்போன புடிச்சி சரியாப் பேசத் தெரியல. பத்மகுமாரிகிட்ட குடுத்துப் பேசச் சொன்னேன். அவ காதுல வச்சிக் கேட்டுட்டு, ""அக்கா, உங்கள் மகள் வள்ளி கதைக்கிறாள்'' அப்படின்னா.

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி. வள்ளிதான் எனக்கு மூத்த பொண்ணு. அவள நல்லபடியா கட்டிக் குடுத்து, ரெண்டு புள்ளைங்களுக்கும் தாயாகிட்டா.

நா வாங்கிப் பேசுனேன்.

""யம்மா...நான் வள்ளி பேசுறேம்மா''

""வள்ளி நல்லாருக்கியா? புள்ளிங்க நல்லாருக்குதா? ஒங்கூட்டுக்காரரு நல்லாருக்காரா?''

""எல்லாரும் நல்லாருக்காங்க. ஒம் மருமொவனும் காட்டுக்கும் மேட்டுக்கும் மண் வெட்டியப் போட்டு அல்லாடுறாரு. என்னா ஒழச்சிம் மழை இல்லாததால வெளச்சல் கொறைஞ்சி போச்சிம்மா...ரெண்டு காணி முந்திரியிலயும் சூறைக்காத்தடிச்சி முந்திரிப் பூவெல்லாம் கொட்டிடுச்சி. அவரும் கொல்லியில பாடுபட்டு நாலுகாசு தங்க மாட்டேங்குது, கேரளாவுக்கு மண்ணு வெட்டப் போறேன். நீ, புள்ளங்கள பாத்துக்கங்கராரு, எம் மனசு கேக்கல. நீ போவாதன்னுட்டேன். பஞ்சம் பொழைக்க மலையாள நாட்டுக்கு போறத வுடு. எனக்குப் பாஸ்போர்ட்டு எடுத்துக் குடு. அரபி நாட்டுக்குப் போயி மூணு நாலு வருஷம் வூட்டு வேல செய்யுறேன்...அப்படின்னேன். ஒம் மருமொவன் முடியாதுன்னுட்டாரு. நான்தான் சண்ட போட்டு அடம்பண்ணி சம்மதிக்க வச்சேன். அவருக்கு விருப்பமில்லாமலேயே விழுப்புரம் போயி பாஸ் போர்ட்டு வாங்கறதுக்கு பணம் கட்டிட்டு வந்திருக்காரு...யம்மாடி...நா பேசுறது கேக்குதா யம்மா? நீ எப்படியாச்சும் நம்ம வூர்நாட்டுக்கு வர்றதுக்குள்ள எனக்கு ஒரு விசா வாங்கி அனுப்பி வச்சுடு...கைப்புள்ளயும் வாய்ப்புள்ளயுமா இருக்குதுவோ. இதுங்கள நல்லபடியா ஆளாக்க வேணாமா, யம்மா? எத்தன நாளக்கித்தான் இந்தப் பஞ்சப் பொழப்பு பொழக்கிது? சீக்கிரம் விசா வாங்கி அனுப்புறியாம்மா?''

அவ பாட்டுக்குப் பேசிக்கிட்டே போறா.

நா அவளுக்கு என்னா பதில் சொல்றதுன்னு தெரியாம மலச்சிப் போயி நிக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.