எனக்கு அடிக்கடி வயிற்று உப்புசம், சோர்வு, தலைவலி, மயக்கம், தலைசுற்றல், விலாப்பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு, கொட்டாவி, உடல் வலி, தண்ணீர்தாகம், காய்ச்சல், வாந்தி, முக்கி சீதளத்துடன் மலம் கழித்தல், ருசியின்மை, அஜீரணம் போன்றவை மாறி மாறி ஏற்பட்டு வேதனைப்படுகிறேன். இவை எதனால் ஏற்படுகிறது? எப்படிச் சரி செய்வது?
வயிற்றில் வந்து சேரும் உணவானது, சரிவர செரிக்காமல், புளித்துப் போய், விஷம்போல் வயிற்றில் தங்கும்போது நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் அனைத்தும் தோன்றக் கூடும். இதற்கு அன்னவிஷம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.
அஜீரணம் ஏற்படுவதற்கான காரணங்களை கீழ்க்காணும் வகையில் சரக ஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.
அபோஜனாத் - பட்டினியாயிருத்தல் அஜீர்ணாதிபோஜனாத் - முன் உண்ட உணவு செரிக்காத நிலையில் அடுத்த உணவை வயிறு முட்டச் சாப்பிடுவது.
அஸôத்ம்யம் - பழக்கமற்ற புதிய புதிய உணவு வகைகளைச் சாப்பிடுவது
குரு - எளிதில் செரிக்காதவை
சீதம் - சில்லிட்டுப் போன, வயிற்றுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு
அதிரூக்ஷ: குடல் வறட்சியை ஏற்படுத்தும் உணவு
சம்துஷ்டபோஜனாத் - கெட்டுப் போன உணவு
வியாதிகர்ஷணாத் - நோயினால் உடல் வாடிவிடும்போது
தேச கால ருது வைஷம்யாத் - உடல் மற்றும் தான் வசிக்கும் இடத்திற்குத் தக்கவாறு அல்லாத உணவு, பருவ காலங்களுக்குப் பொருந்தும் வகையில்லாத உணவு
வேகனாம்ச விதாரணாத் - மலம், சிறுநீர், குடல்வாயு போன்ற இயற்கை உந்துதல்களை வலுக்கட்டாயமாக அடக்குதல்
மேற்குறிப்பிட்ட காரணங்களால் வயிற்றிலுள்ள பசி எனும் தீயானது கெட்டுவிடுகிறது. பசித்தீ கெட்டுவிட்டால் எளிதான உணவைக் கூட செரிக்கும் சக்தி இல்லாததாகிவிடுகிறது. வயிற்றில் நெடும்நேரம் தங்கும் உணவு, பதனழிந்து புளித்துப் போவதால், விஷப் பொருளாக மாறி, பல உடல் உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. இதுபோன்ற விஷசேர்க்கைக்கு இடமளிக்காமல் முன் கூறிய காரணங்களைத் தவிர்த்து, பசித்தீ கெடாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த விஷச் சேர்க்கையான உணவு, வயிற்றில் பித்தத்துடன் கலந்துவிட்டால், உடல் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றிலிருந்து உணவுக் குழாயின் மேல் பகுதியில் புளிப்புச் சுவையுடன் கூடிய எரிச்சல், வாய்ப்புண், மயக்கம், தலைசுற்றல் ஆகியவை தோன்றும்.
அன்ன விஷம் கபத்துடன் சேர்ந்துவிட்டால் இருமல், ருசியின்மை, மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், சர்க்கரை உபாதை, சீதளக்கழிச்சல், வாந்தி போன்றவை தோன்றிவிடும்.
அன்னவிஷம் வாதத்துடன் சேர்ந்துவிட்டால் வயிற்று உப்புசம், தலைவலி, சோர்வு, விலா மற்றும் இடுப்புப் பிடிப்பு, கொட்டாவி, உடல் உபாதைகள் தோன்றும்.
இம்மூன்று நிலையிலும் வயிற்றில் ஏற்பட்டுள்ள மப்பு நிலையை முதலில் மாற்ற வேண்டும். அதற்கு சுக்கு, அதிவிடயம், கோரைக் கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் வீதம் சேர்த்து 250 மி.லி. தண்ணீரில் கொதிக்கவிட்டு, 60 மி.லி. ஆகும் வரை குறுக்கி, வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட மப்புநிலை மாறி, பசி நன்றாக எடுக்கத் தொடங்கும். இம்மருந்துகளைப் பொடித்துச் சூடான அரை கிளாஸ் நீருடன் காலையில் சாப்பிட்டாலும், அஜீரண உபாதையிலிருந்து விடுபடலாம்.
மப்புநிலை தோன்றினாலும், தோஷங்களின் சீற்றத்தையும் அங்கிருந்து அகற்றினால்தான் நோய் முழுவதுமாக மாறும். பித்ததோஷம் விலக, அவிபத்தி சூரணம் விற்கப்படுகிறது. ஐந்துகிராம் சூரணம், 10 மி.லி. தேனுடன் குழைத்து மதிய வேளையில் பசி உள்ள போது நக்கிச் சாப்பிட, பேதியாகி, பித்தம் வெளியேறிவிடும். அக்னிகுமாரம் குளிகை 1 - 2, வெற்றிலைச் சாறுடன் சேர்த்து காலை உணவிற்குப் பிறகு சாப்பிட, கபாஜீர்ணம் குணமாகிவிடும். வாயுகுளிகை 1 - 2, சிறிது சீரகம் போட்டுக் காய்ச்சிய சூடான தண்ணீருடன், மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, வாத தோஷத்தினால் ஏற்படும் அஜீரணம் குணமாகிவிடும். இம்மருந்துகளைச் சுமார் 3 - 5 நாட்கள் சாப்பிடலாம். உங்கள் உடலில் ஏற்படும் அறிகுறிகளுக்குத் தக்கவாறு நீங்கள் இம்மருந்துகளைச் சாப்பிட்டுக் குணமடையலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.