பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தேடல்: கல்லைத் தேடிச் சென்ற கல்லூரி

படித்தவர்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். கிராம மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால்  கிராமங்களில் விவசாயம் நலிவடைந்துவிட்டதால் அங்கிருந்து மக்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி வருவத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:07 pm

ந. ஜீவா

படித்தவர்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். கிராம மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பார்கள்.

ஆனால்  கிராமங்களில் விவசாயம் நலிவடைந்துவிட்டதால் அங்கிருந்து மக்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி வருவதே அதிகம்.

கல்லூரி ஆசிரியர்கள் மூவர் கடந்த ஏப்ரல் மாதம் காயம்பட்டு என்ற கிராமத்திற்குச் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் காயம்பட்டு கிராமம்.

அவர்கள் சென்றது மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்தோடு அல்ல. அந்தக் கிராமத்தில் நடுகற்கள் ஏதாவது கிடைக்குமா என்று தேடிப் பார்க்கவே அவர்கள் போனார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த ஊரில் அவர்களுக்கு நடுகற்கள் கிடைத்தன. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் அவை. எதிர்பாராதவிதமாக அவர்கள் நடுகற்களைக் கண்டுபிடித்த கதையை அங்கு சென்ற கல்லூரி ஆசிரியர்களுள் ஒருவரான சென்னையைச் சேர்ந்த சி.இளங்கோ நம்மிடம் விளக்கினார்...

"" பொதுவாக கல்வெட்டுகள், நடுகற்கள் போன்றவற்றைத் தொல்லியல் துறையினர்தான் கண்டுபிடிப்பார்கள். நானும் கல்லூரி ஆசிரியர்களான என் நண்பர்கள் இருவரும் நடுகற்களைக் கண்டுபிடித்தது முற்றிலும் தற்செயலான ஒருநிகழ்ச்சி.

நான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியம், பண்பாட்டுத்துறையில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். தொல்லியல்துறை 2001 இல் நடத்திய பயிற்சிப் பட்டறையில் பங்குகொண்டேன். சுவடியிலிலும், நாட்டுப்புறவியலிலும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் டிப்ளமாவும் பெற்றேன். இப்போது சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ்த்துறையில் கெüரவ ஆசிரியராக வேலை செய்கிறேன்.

தொல்லியல்துறையில் நான் பயிற்சி பெற்றபோது அங்கே பணிபுரிந்த அ.பத்மாவதி, பூங்குன்றன், வசந்தகல்யாணி ஆகிய அறிஞர்கள் தொல்லியல் துறையில் எனது ஆர்வத்தை வளர்த்துவிட்டனர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் வீ.அரசும் என்னை ஊக்குவித்தார்.

நான் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்போது நடுகற்களைப் பற்றிச் சொல்ல வேண்டி வந்தது. மாணவர்களுக்கு வெறுமனே அவற்றைப் பற்றிச் சொல்வதைவிட, நேரடியாக அவர்களுக்கு நடுகற்களைக் காட்டினால் என்ன என்று தோன்றியது.

நடுகற்கள் அதிகமாக எங்கே இருக்கும் என்று  விசாரித்த போது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அதிகம் இருப்பதாகச் சொன்னார்கள்.

நான் உடனே செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளர்களாக வேலை செய்யும் எனது நண்பர்கள் செந்தில்குமாரையும், காந்தியையும் தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர்களும் என் கூட நடுகற்களைப் பார்க்க வருவதாகக் கூறினார்கள். நாங்கள் முதலில் நடுகற்களைப் பார்த்துவிட்டு பின்பு ஒருநாள் எங்களுடைய மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்குக் காட்டுவதாகத் திட்டம்.

கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நாங்கள் மூவரும் செங்கத்தில் இறங்கினோம். செங்கத்தில் இறங்கி நடுகற்களைப் பற்றி விசாரித்தோம். ""நடுகற்களா? அப்படின்னா...'' என்று எங்களையே திருப்பிக் கேட்டார்கள். அதிர்ச்சியுடன் நின்றோம்.

அதன் பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் தொல்லியல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற குழந்தைவேலன் சாரிடம் அங்கிருந்தே போனில் பேசினோம். "நடுகற்கள் எங்கே இருக்கின்றன என்ற தகவல் எதுவும் தெரியாமல் இப்படி எல்லாம் போகக் கூடாது' என்று எங்களை அவர் கடிந்து கொண்டார். "செங்கத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள காயம்பட்டு கிராமத்திற்குச் சென்று பாருங்கள்' என்றார்.

நாங்கள் மூவரும் காயம்பட்டு கிராமத்தில் வந்து இறங்கினோம். இந்தக் கிராமத்து மக்களுக்கும் நடுகற்கள் என்றால் என்ன என்று தெரியவில்லை.

அப்புறம், அப்படி இப்படி பேச்சுக் கொடுத்துக் கேட்ட பிறகு, அந்த ஊர் ஏரிக்கரையில் "வேடியப்பன் சாமி' என்று ஒன்று இருப்பதாகச் சொன்னார்கள். சரி அதையும் பார்த்துவிடுவோமே என்று அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்று பார்த்தோம். என்ன ஆச்சரியம்! நாங்கள் எதிர்பார்த்த நடுகல்லாக அது இருந்தது. எங்களுடைய முகம் எல்லாம் சிரிப்பு.

இந்த வேடியப்பன் சாமி என்ற நடுகல்லின் இரண்டு பக்கமும் வீரர்களின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பக்கம் மட்டும் பழங்கால தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த நடுகல்லில் பொறிக்கப்பட்ட வீரனின் நேல் நான்கு அம்புகள் பாய்ந்திருந்தது. இந்தக் கல்வெட்டுக் கூறிய செய்தி என்ன என்று மிகத் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு வேறு ஏதாவது நடுகற்கள் கிடைக்கின்றனவா என்று பார்க்கக் கிளம்பினோம்.

அந்த ஊர் ஏரியும் பிற ஊர் ஏரிகளைப் போலவே வழக்கமாகக் காய்ந்து கிடந்தது. ஓரிரு இடங்களில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளமாகச் சகதி இருந்தது. நாங்கள் அந்த ஏரியில் நடந்து கொண்டிருந்தபோது, சகதியில் மூழ்கியும் மூழ்காமலும் இருந்த ஒரு கல்லைப் பார்த்தோம். அதில் ஏதோ உருவம் பொறிக்கப்பட்டிருப்பது போலத் தெரிந்தது. சற்றுப் புரட்டிப் பார்த்ததும் அதிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த எழுத்துகள் முழுமையாக இல்லை. அதேபோல் இன்னொரு நடுகல்லையும் பார்த்தோம். அதன் ஒருபுறத்தில் வீரனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் சிதைந்திருந்தன. ஆனால் அதன்பின்புறம் இருந்த எழுத்துகள் சிதையாமல் தெளிவாக இருந்தன.

எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

நடுகற்களைப் பார்த்தோம். ஆனால் அந்த நடுகற்கள் கூறும் செய்தி என்ன? என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே அதைத் தெரிந்து கொள்ள புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப் பள்ளியின் மூத்த ஆய்வாளர் கோ.விசயவேணுகோபாலை அணுகினோம்.

அவர் நாங்கள் கொடுத்த புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, இந்தப் புகைப்படங்களில் எழுத்துகள் அவ்வளவு தெளிவாக இல்லை. எனவே மீண்டும் காயம்பட்டு சென்று நடுகற்களை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து புகைப்படம் எடுத்து வாருங்கள் என்று சொல்லிவிட்டார்.

அவர் சொல்லியவிதத்தைப் பார்த்த எங்களுக்கு இந்த நடுகற்களில் ஏதோ முக்கியமான செய்தி இருக்கிறது என்று தோன்றியது. மீண்டும் காயம்பட்டுக்குச் சென்றோம்.

ஏரிக்கரையில் இருந்த "வேடியப்பன் சாமி'யை நாங்கள் அடைந்து அவரைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். அந்த ஊர் மக்கள் எங்களிடம் மிக வேகமாக வந்து, ""இது மிகச் சக்திவாய்ந்த சாமி. இதை நீங்கள் தொட்டுக் கழுவி போட்டோ எடுத்தால் நீங்கள் திரும்பிப் போவதற்குள் உங்களுக்கு ஏதாவது ஆகிவிடும் '' என்று எச்சரித்தார்கள்.

நாங்கள் பொறுமையாகப் பேசி, அவர்களுடைய அனுமதியுடன் வேடியப்பன் சாமியைக் கழுவி எழுத்துகள் தெளிவாகத் தெரியும்படி புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

அதுபோல, ஏரிக்குள் இறங்கி அங்கிருந்த நடுகற்களைச் சுத்தம் செய்யும்போது வேறு சிலர் வேகமாக வந்து எங்களிடம் மிரட்டும் தொனியில் பேசினார்கள். நாங்கள் எதற்காக அங்கு வந்திருக்கிறோம் என்பதையும் இந்த நடுகற்களால் அந்த ஊருக்கே பெருமை வரப் போகிறது என்பதையும் விளக்கிச் சொன்னதும் அவர்கள் எங்களுக்கு உதவினார்கள்.

அந்த நடுகற்களையும் தெளிவாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம். விசய வேணுகோபால் சாரை மீண்டும் பார்த்தோம். அவர் கவனமாக நாங்கள் கொண்டுவந்திருந்த புகைப்படங்களைப் பார்த்தார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று துடிப்பாக இருந்தது.

வேடியப்பன் சாமி என்று மக்கள் குறிப்பிட்ட அந்த நடுகல் தொக்கைபாடி என்ற ஊரைச் சேர்ந்த இநையமன் என்கிறவருடைய மகன் தக்கையன் என்ற வீரனுக்காக வைக்கப்பட்டது என்றும், அவன் பகைவர்கள் கவர்ந்து சென்ற கால்நடைகளை மீட்கச் சென்று போரிட்டு மரணமடைந்திருக்க வேண்டும் என்றும் அவனுடைய நினைவாக அந்த நடுகல்லை அமைத்திருக்கலாம் என்றும் விசயவேணுகோபால் சார் சொன்னார். அந்த நடுகல்லின் காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு என்று அவர் சொன்னதும் எங்களுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அதன்பின் மேலும் கிடைத்த இரண்டு நடுகல்லைப் பற்றியும் அவர் எங்களிடம் சொன்னார். அதில் உள்ள ஒரு கல்லில் "வர்மன்' என்று எழுத்து உள்ளதால் அது பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக (கி.பி.9 ஆம் நூற்றாண்டு) இருக்கலாம் என்று கூறினார். இன்னொரு கல்லில் சோழர் காலத்தைச் சேர்ந்த மெய்க்கீர்த்திகள் உள்ளன என்பதால் அது கி.பி.11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கூறினார்.

மாணவர்களுக்குச் "சும்மா' காட்டுவதற்காக நடுகல்லைத் தேடிப் புறப்பட்ட நாங்கள், இன்று பழைய நடுகற்களைக் கண்டுபிடித்தவர்களாக ஆகிவிட்டோம் என்பது எங்களுக்கே ஆச்சரியத்தைத் தருகிறது. பெருமையாகவும் இருக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.