புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

புதிய கோணம்: பெரும்பான்மை வாசகர்களுக்கு மதிப்பில்லையா?

பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் நிறைய வெளிவந்திருக்கின்றன. நமக்கு வங்க மொழியின் சரத் சந்திரரைத் தெரியும். தாகூரைத் தெரியும். மலையாளத்தின் வைக்கம் முகம்மது பஷீரை, தகழி சிவச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:32 pm

ந. ஜீவா

பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் நிறைய வெளிவந்திருக்கின்றன. நமக்கு வங்க மொழியின் சரத் சந்திரரைத் தெரியும். தாகூரைத் தெரியும். மலையாளத்தின் வைக்கம் முகம்மது பஷீரை, தகழி சிவசங்கர பிள்ளையை, கேசவதேவைத் தெரியும். ரஷ்யாவின் டால்ஸ்டாயையும், மாக்ஸிம் கார்க்கியையும் தெரியும். பிரெஞ்ச் இலக்கியத்தில் எமிலிஜோலாவை படித்திருப்போம். இந்த இலக்கியங்கள் எல்லாம் மொழிபெயர்ப்பின் வாயிலாக நமக்குக் கிடைத்தவை.

  அதுபோல நமது தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் எழுத்துகள் பிற மாநில மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகள் எனக் கருதப்படுகிறவர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன.

  ஆனால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான வாசகர்கள் ரசிக்கக் கூடிய ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ரமணி சந்திரன் போன்றோரின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறது பிளாஃப்ட் (ஆகஅஊப) என்னும் பதிப்பகம்.

  அந்தப் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிபவர் ப்ரீத்தம் சக்ரவர்த்தி. அவர் நவீன நாடக உலகில் முத்திரை பதித்தவர். அவருடைய "கண்ணாடி', "நிர்வாணம்' ஆகிய நாடக முயற்சிகள் உலக அளவில் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்தவை. பேசப்பட்டவை.

  அவரை சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

  தமிழ் புத்தகங்கள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கின்றன. உங்கள் வெளியீடுகள் அவற்றிலிருந்து எப்படி வேறுபடுகின்றன?

  பெங்குயின் போன்ற பல பெரிய ஆங்கிலப் பதிப்பகங்கள் கூட தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கின்றன. ஆனால் ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகத்தைப் படிக்கும்போது அது பிற மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்று தெரியக் கூடாது. அதே சமயம் அதன் மூலமொழியின் ஒரிஜினல்தன்மையும் போய்விடக் கூடாது. இந்த அடிப்படையிலேயே நாங்கள் நூல்களை வெளியிடுகிறோம். எங்களுடைய வெளியீடுகளுக்கும் பிற பதிப்பக வெளியீடுகளுக்கும் இதுதான் வித்தியாசம்.

  தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இதற்கு முன்பு எந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? ஒரு சுந்தரராமசாமியை, அசோகமித்திரனை, புதுமைப்பித்தனை, சுஜாதாவைத் தேர்ந்தெடுத்தார்கள்.

  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்கு ஏதோ "புனிதத்தன்மை' வாய்ந்த எழுத்துகளே தகுதியானவை என்று ஒரு கருத்து இதுவரை இருந்து வந்திருக்கிறது. அதை உடைக்கும்விதமாக நாங்கள் மொழிபெயர்ப்புக்கான எழுத்துகளைத் தேர்வு செய்கிறோம்.

  பெரும்பாலான பெரும் பத்திரிகை வாசகர்கள் வாசிக்கக் கூடிய - அந்த அளவுக்கு இலக்கியத்தரம் இல்லாதவை என்று கருதப்படுகிற -  பொழுதுபோக்குத் தன்மை நிறைந்த தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவது எதற்காக?

  நீங்களே சொல்கிறீர்கள், பெரும்பான்மையான வாசகர்கள் படிக்கக் கூடிய புத்தகங்கள் என்று. அப்படியானால் அந்த 80 சதவீத வாசகர்களுக்கு மதிப்பே கிடையாதா? பெரும்பான்மை மக்களைத் தவிர்த்துவிட்டு ஒரு விஷயத்தைச் சொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை.

  டிவி, சினிமா என்று மக்களை இழுக்கும் கவர்ச்சி விஷயங்களையும் மீறி ஒரு வாசகன் புத்தகத்தை வாங்குகிறான்; அதன் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறான் என்றால் அது எங்களுக்கு ரொம்ப முக்கியம்.

  பெரும்பான்மை வாசகர்கள் வாசிக்கக் கூடிய இதே போன்ற கதைகளை ஆங்கிலத்தில் ஷிட்னி ஷெல்டன் எழுதினால் எல்லாரும் ரசிக்கிறார்கள். பாராட்டுகிறார்கள். ஏன் அவர் வெள்ளையர் என்பதாலா? அல்லது அவர் ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்பதாலா?

  எனவே பெரும்பான்மை வாசகர்கள் வாசிக்கக் கூடிய புத்தகங்களை ஆங்கிலத்தில் வெளியிடுவதில் எந்தத் தயக்கமும் எங்களுக்கில்லை.

  உங்களுடைய வாசகர்கள் யார்?

  தமிழின் பெரும்பான்மை வாசகர்கள் எங்கள் புத்தகங்களைப் படிப்பதில்லை. நாங்கள் எங்களுடைய வாசகர்களாக அவர்களைக் கருதவில்லை.

  பயணத்தின்போது தனது பையில் தமிழ்ப் புத்தகங்களை வைத்திருந்தால் அதை மட்டமாக நினைக்கிற ஒருவர், ஓர் ஆங்கிலப் புத்தகம் வைத்திருப்பதைப் பெருமையாக நினைக்கிறார். அப்படிப்பட்ட வாசகர்களுக்கு தமிழ்ப் புத்தகங்களை வாசிக்க வசதியாக நாங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தருகிறோம்.

  இதுதவிர, தமிழ் தெரியாதவர்கள் ஆனால் தமிழ் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் உடையவர்களை எங்கள் வாசகர்களாகக் கருதுகிறோம்.

  இன்றைய இளம்தலைமுறையினருக்கு - அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் - அவர்களுக்குத் தமிழ் படிக்கத் தெரிவதில்லை. அவர்களுக்குப் பயன்படுவதற்காகவும் நாங்கள் ஆங்கிலத்தில் புத்தகங்களை வெளியிடுகிறோம்.

  ஆழமான, கனமான விஷயங்களை வெளியிடாவிட்டால் வாசகர்களுக்கு என்ன பயன் இருக்க முடியும்?

  தமிழில் வெளிவரும் "கில்லி' போன்ற படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பது ஏன்? நமது தலைவர்கள் கோமாளித்தனமாக அடிக்கும் ஸ்டண்ட்களை மக்கள் ரசித்துப் பார்ப்பதேன்? இவையெல்லாம் வெறும் பொழுதுபோக்கு. அவ்வளவுதான். அதற்குமேல் அவற்றிற்கு அதிக மதிப்பெல்லாம் கிடையாது.

  நீங்கள் ரயில் பயணத்தின் போதோ, விமானப் பயணத்தின் போதோ என்ன செய்வீர்கள்? ரொம்ப ஆழமான, சிக்கலான விஷயங்களைப் பேசுகின்ற புத்தகங்களை வாசித்து மண்டை காய்வீர்களா? அந்தப் பயண நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்க உதவுகிற லைட் ரீடிங் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பீர்களா?

  மனிதனுக்குப் பொழுதுபோக்கு முக்கியம். மக்களின் பொழுதுபோக்கிற்கு உதவுவதே ஒருவிதத்தில் அவர்களுக்குப் பயன்படுவதுதான்.

  மேலும் நாங்கள் ராஜேஷ்குமார், ரமணிசந்திரன் புத்தகங்களை மட்டும் வெளியிடவில்லை. தமிழின் இலக்கியவாதி என்று கூறிக் கொள்கிற ஒருவரால் எந்தக் காரணத்தாலும் புறக்கணிக்க முடியாத கி.ராஜநாராயணனின் நூல்களையும் வெளியிட்டிருக்கிறோம்.

  கி.ரா., ராஜேஷ்குமார், சாருநிவேதிதா, ரமணி சந்திரன், இந்திரா செüந்திரராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாருடைய புத்தகங்களையும் - அவை பல தரங்களில் இருந்தாலும் அவற்றை நீங்கள் வெளியிடுவது எந்த அடிப்படையில்?

  எங்களை எந்த பிராக்கட்டுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள். இன்னும் பல வித்தியாசமான வகைகளில் புத்தகம் வெளியிடுவதே எங்கள் நோக்கம்.

  இப்படி வெளியிடுவதன்மூலம் தமிழில் என்ன நடக்கிறது என்பதைப் பிற மொழிக்காரர்களும் தெரிந்து கொள்ளட்டுமே.

  அரசுசார்ந்த பெரிய பதிப்பகங்கள் இந்தியாவின் பல மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளை பிற மாநில மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளியிடுகின்றன. உங்களுடைய வெளியீட்டிற்கும் அவர்களின் வெளியீட்டிற்கும் என்ன வித்தியாசம்?

  அவர்களைப் பொறுத்தவரை புத்தகம் பண்ண வேண்டும். அதுதான் அவர்களுடைய நோக்கம். எங்களுக்கு வாசர்கள் வாங்கிப் படிக்கும்விதமாகப் புத்தகங்களை வெளியிட வேண்டும்.

  படிக்கும் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில் முதலில் புத்தகங்களை வாங்க வைப்பதே பெரிய விஷயம். அவ்வாறு வாங்கிய புத்தகங்களை அவர்களை வாசிக்க வைப்பது அதைவிடப் பெரிய விஷயம். இதுதான் பிற பதிப்பகங்களுக்கும் எங்களுக்கும் அடிப்படையான வித்தியாசம்.

  புத்தக வெளியீடு ஒரு லாபகரமான தொழிலாக இல்லாத நிலையில் உங்களுடைய புத்தகங்களின் விற்பனை எப்படி உள்ளது?

  தெருவோரக் கடையில் உள்ள தமிழ்ப் புத்தகங்களை வாங்க விரும்பாதவர்கள் சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரிய புத்தகக் கடையில் நாங்கள் வெளியிட்டுள்ள ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வாங்குகிறார்கள். எங்களுடைய புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சாதாரணமாகத் தமிழில் வெளிவரும் ஒரு புத்தகம் 1000 பிரதிகள் விற்கவே படாதபாடு படும்போது எங்களுடைய புத்தகங்கள் 3000 பிரதிகள் விற்கின்றன. ஆனால் ராஜேஷ்குமார் புத்தகங்கள் தமிழில் 10 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகின்றன. அப்படிப் பார்த்தால் எங்களுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகங்களின் விற்பனை குறைவுதான். ஆனால் நூலக ஆர்டரை நம்பி நாங்கள் புத்தகம் வெளியிடுவதில்லை.

  நவீனச் சிந்தனை உள்ள நீங்கள் ஜனரஞ்சகமான புத்தகங்களை மொழிபெயர்ப்பதேன்?

  என்னுடைய தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்த எனக்கு நவீன நாடகங்கள் உள்ளன. இந்த புத்தக மொழிபெயர்ப்பில் என்னுடைய சிந்தனைகள் வெளிப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.