புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கண்டுபிடிப்பு: எலுமிச்சை... முந்திரி... பேரீச்சம்பழம்... வெள்ளைப் பூண்டு!

புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பவர்கள் யாராக இருக்கக்கூடும்? நிறையப் படித்தவர்கள், ஒரு துறையில் ஆழமாக ஆய்வு செய்பவர்கள் புதிய பொருள்களைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் அந்தக் கால புகுமுக வகுப்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:19 pm

ந. ஜீவா

புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பவர்கள் யாராக இருக்கக்கூடும்? நிறையப் படித்தவர்கள், ஒரு துறையில் ஆழமாக ஆய்வு செய்பவர்கள் புதிய பொருள்களைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் அந்தக் கால புகுமுக வகுப்பு படித்த ஒருவர் அன்றாடம் வாழ்வில் பயன்படக் கூடிய பல இயந்திரங்களை உருவாக்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் வெளிநாட்டில் தயாராகக் கூடிய இயந்திரங்களுடன் போட்டி போடும் வகையில் அவர் தயாரித்திருக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன.

இதற்காக அவருக்கு அகில இந்திய அளவிலான விருதுகள் கூட கிடைத்திருக்கின்றன. 2005 ஆம் ஆண்டு "நேஷனல் இனோவேஷன் ஃபவுண்டேஷன் விருது'  கிடைத்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கையால் இந்த  விருதை வாங்கியிருக்கிறார் அவர்.

2006 இல் "நேஷனல் ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்' விருதும் கிடைத்தது.

இத்தனைக்கும் இவர் இருப்பது மிகப் பெரிய நகரம் அல்ல. மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த எம்.நாகராஜன்தான் அந்தக் கண்டுபிடிப்பாளர். அப்படி அவர் என்னதான் கண்டுபிடித்திருக்கிறார் என்று கேட்கிறீர்களா? அவரிடமே கேட்போமே...

""நான் 1984 ஆம் ஆண்டு மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தேன். அதற்கு மேல் படிக்க வசதியில்லை. அப்பா ரைஸ் மில் இயந்திரங்களில் ஆயில் மோட்டார் மெக்கானிக். நான் அவருக்குத் துணையாகச் செல்வேன். அப்பா ரைஸ் மில்லில் வரும் எல்லாப் பழுதுகளையும் பார்ப்பார். அவர் கூட நிறையப் படித்தவர் அல்ல. தனது சொந்த அனுபவத்தின் மூலம் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டவர். நானும் அவரிடம் வேலை கற்றுக் கொண்டேன். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இப்படியே ஓடிவிட்டன. ஆனால் எவ்வளவு நாட்கள் இப்படி குறைந்த வருமானத்துடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பது என்று தோன்றியது. ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

பழைய ரைஸ் மில்களுக்கு அப்போது நெருக்கடி வந்தது. தஞ்சாவூர் பகுதியில் மாடர்ன் ரைஸ் மில்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதைக் கூர்மையாகக் கவனித்தேன். நெல்லை அரைக்கும் போது  வரும் தவிட்டைத் தனியே பிரித்தெடுக்கும் இயந்திரம் அப்போது இல்லை.

நான் அந்த இயந்திரத்தை உருவாக்கினேன். தவிட்டிலிருந்து எண்ணெய் எடுப்பது வேறு அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்தது. நான் உருவாக்கிய இயந்திரம் தவிட்டிலிருந்து உமியைத் தனியாகப் பிரித்தெடுத்தது. குருணை தனியாகப் பிரிந்தது. தவிடு தனியாக வந்தது. உமியை எரிபொருளாகப் பயன்படுத்த முடிந்தது.

ஒரே ஒரு மிஷின் ஆர்டர் வாங்கினேன். அந்த ஒரு மிஷினை நல்லபடியாகச் செய்து கொடுத்தேன். அதை வைத்து 100 மிஷின்கள் ஆர்டர் கிடைத்தன.

இதில் சுமார் 6 ஆண்டுகள் ஓடிவிட்டன. மாடர்ன் ரைஸ் மில்  உருவாக்கத்தில் பெரிய கம்பெனிகள் இறங்கின.  போட்டிக்கு வந்தன. நான் செய்து வைத்திருந்த பல இயந்திரங்கள் அதனால் விற்காமல் போயின. லட்சக்கணக்கில் நஷ்டம் வந்தது. மீண்டும் வறுமை வாழ்க்கையில் தலைகாட்டியது.

ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து வெள்ளம்போல் அரிசி இங்கே விற்பனைக்காக வந்து குவிந்தது. அதனால் இங்கே ரைஸ் மில் தொழில் படுத்துவிட்டது. நானும் அதை விட்டுவிட்டு வேறு இயந்திரங்களைத் தயாரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.

அப்போது செய்ய ஆரம்பித்ததுதான் எலுமிச்சம் பழத்தை வெட்டும் இயந்திரம். இந்த இயந்திரம் எலுமிச்சம் பழத்தை எட்டுத் துண்டுகளாக வெட்டிவிடும். ஒரு மணி நேரத்தில் 15 ஆயிரம் எலுமிச்சம் பழங்களை வெட்டித் தள்ளிவிடும். இந்த இயந்திரத்துக்கும் நிறைய தேவை இருக்கிறது. பெரிய பெரிய ஊறுகாய் கம்பெனிகளுக்கு இந்த இயந்திரம் தேவைப்பட்டது. எலக்ட்ரான் பவுடர் தயார் பண்ணும் தொழிற்சாலைகளுக்கும் தேவைப்பட்டது. எலுமிச்சம் பழத்தைத் துண்டாக்கி உலர வைத்து டி ஹைடிரேட் பண்ணி வெளிநாட்டுக்கு அனுப்பும் கம்பெனிகள் இங்கே இருக்கின்றன. அவர்களுக்கும் இந்த இயந்திரம் தேவைப்பட்டது. பெக்டின் என்ற பொருளைத் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும் இந்த இயந்திரம் தேவைப்படுகிறது.

எலுமிச்சம் பழத்தை மட்டும் இந்த இயந்திரம் வெட்டாது. உருண்டையாக உள்ள முக்கால் அங்குலத்திலிருந்து, 2 அங்குலம் விட்டம் வரையுள்ள எல்லாப் பொருள்களையும் வெட்டித் தள்ளிவிடும் இந்த இயந்திரம்.

அடுத்து நான் உருவாக்கியது பூண்டு உரிக்கும் இயந்திரம். சில பெரிய ஊறுகாய்க் கம்பெனிகளில் ஒரு நாளைக்கு 2 டன் பூண்டு உரிப்பார்கள். நாம் கைகளால் உரித்தால் சுமார் 8 கிலோ உரிக்கலாம். எத்தனை பேரை வைத்து எவ்வளவு மணி நேரங்களுக்கு உரிப்பது? இந்த வேலையை மிக எளிமையாக்க என்னுடைய இயந்திரம் உதவியது. மணிக்கு 200 கிலோ வெள்ளைப் பூண்டை உரித்துக் கொடுத்தது. அதிலும் 90 சதவீதம் சேதாரமில்லாமல் உரித்துக் கொடுத்தது. வெள்ளைப் பூண்டு நன்றாகக் காய்ந்திருந்தால் 95 சதவீதம் வரை சேதாரம் இல்லாமல் உரித்துக் கொடுத்துவிடும். இதுவும் பெரிய அளவுக்கு ஊறுகாய் தயாரிக்கும் கம்பெனிகளுக்குப் பயன்பட்டது.

முந்திரிப் பருப்பை கொட்டையிலிருந்து உரித்தெடுத்துச் சேதாரமில்லாமல் எடுப்பது ரொம்பவும் கடினம். அதற்கு அவர்கள் நிறையச் செயல்முறைகளை வைத்திருக்கிறார்கள். முந்திரிக் கொட்டையை இரண்டாக உடைத்து அதில் உள்ள பருப்பை எடுத்து 12 மணி நேரம் வெப்பப்படுத்தி 6 மணி நேரம் குளிரச் செய்து கையால் அதைச் சுத்தப்படுத்திதான் நமக்குக் கடைகளில் கொண்டு வந்து விற்கிறார்கள். கையால் சுத்தப்படுத்தும்போது அதில் உள்ள பால் கைகளில் பட்டு தோல் வியாதிகள் ஏற்பட வாய்ப்புண்டு.

அதுவுமில்லாமல் அதிக அளவுக்கு கைகளால் சுத்தம் செய்ய முடியாது. ஒரு பெண் ஒரு நாளைக்கு 5 கிலோ முந்திரிப் பருப்பையே சுத்தம் செய்ய முடியும். அதற்கு அவருக்கு ரூ.100 கூலி தர வேண்டியிருக்கும்.

முந்திரி தமிழ்நாட்டை விட கேரளா,கோவா, மகாராஷ்டிரா,குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகம் விளைகிறது. தென் ஆப்ரிக்கா, பிரேசில், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் முந்திரி விளைகிறது. ஆனாலும்  விளைகிற முந்திரியைப் பக்குவப்படுத்தி சுத்தம் செய்வதற்கான இயந்திரங்கள் மிகக் குறைவு. அப்படியே இயந்திரங்கள் வந்தாலும் முந்திரிப் பருப்பு பல துண்டாக உடைந்து போயின. முந்திரிப்  பருப்பைப் பொறுத்தவரை அது உடையாமல் இருந்தால்தான் முழு மதிப்பு. முந்திரிப் பருப்பு உடைய உடைய அதன் விலை குறைந்து கொண்டே போகும். பிரேஸிலில் இருந்து முந்திரிப் பருப்பைச் சுத்தம் செய்யும் மிஷின் வந்தது. ஆனால் அதைப் பயன்படுத்தும்போது 20 சதவீதம் வீணானது.

எனவே இதற்கு நான் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டேன். நான் தயாரித்த மிஷின் 95 சதவீதம் வரை உடையாமல் முந்திரிப் பருப்பைச் சுத்தம் செய்து தருகிறது.

பிரேஸிலில் இருந்து வந்த மிஷினுக்கு அடுத்தபடியாக வியட்நாமில் தயாரிக்கப்பட்ட மிஷின் வந்தது. அந்த மிஷின் 60 அடி நீளம் உள்ளது. அதற்கு 50 எச்பி மோட்டார் தேவை. விலை 25 லட்சம், வரி சேர்த்து மொத்தம் 40 லட்சம் ரூபாய் ஆகும்.

நான் தயாரித்த மிஷின் மணிக்கு 200 கிலோ முந்திரியை உரித்துத் தரும். பருப்பு 95 சதம் உடையாமல் வரும். 2 எச்பி மோட்டார் நான் உருவாக்கியுள்ள மிஷினுக்குப் போதும். விலையும் மிக மிகக் குறைவு. இப்படி வெளிநாட்டுடன் போட்டி போடும் அளவுக்கு என் மிஷின் தரத்தில் உயர்ந்ததாக உள்ளது.

கடலைப் பருப்பை இப்போது பேக் பண்ணி விற்கிறார்கள். கடலைப் பருப்பின் தோலை நீக்கிவிட்டு வெள்ளை வண்ணத்தில் உள்ள அதைப் பெரிய பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் விற்கிறார்கள்.

அதற்கான இயந்திரத்தையும் தயாரித்தேன்.

பேரீச்சம்பழத்தை நடுவில் மட்டும் கீறி கொட்டையை வெளியே எடுக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன். இது முதலில் கைகளால் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

எனது கண்டுபிடிப்புகளுக்குப் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. நேஷனல் இனோவேஷன் ஃபவுண்டேஷன் விருது 2005 இல் எனக்குக் கிடைத்தது. ஃபுட் அன்ட் பேக்கேஜிங் வகையில் எனக்கு அந்த விருது எனக்குக் கிடைத்தது. இந்த விருது அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கையால் எனக்குக் கிடைத்தது. பூண்டு உரிக்கும் இயந்திரத்துக்கு மிக எளிமையான கருவி என்பதற்காக விருது கிடைத்தது. நேஷனல் ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் இதை எனக்குக் கொடுத்தது.

எனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் கடினமாகச் செய்து கொண்டிருக்கும் வேலைகளை எளிமைப்படுத்துபவை. சேதாரத்தைக் குறைப்பவை. வேலை நேரத்தைக் குறைப்பவை.

நான் எனது கண்டுபிடிப்புப் பணிகளை எப்போதும் தொடர்வேன். உசிலம்பட்டியில் உள்ள எனது விர்கோ இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தை மேலும் வளர்ப்பதும், ஓரு ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் மையத்தை உருவாக்குவதுமே எனது லட்சியம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.