என் எட்டு வயது மகளுக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்படுகிறது. குறிப்பாக மேல் வயிறு. ஸ்கேன் செய்தோம். இரத்தம், சிறுநீர் பரிசோதனையும் செய்தோம். எந்தப் பிரச்னையும் இல்லை. நிரந்தர வலி கிடையாது. வந்து வந்து போகிறது. அவள் குணமடைய என்ன மருந்து சாப்பிடலாம்?
வெங்கடேசன், பொள்ளாச்சி.
"ராஜவத் ஆஸீத்' என்று உண்ட உணவிற்குப் பிறகு செய்ய வேண்டிய ஒரு செயலை வாக்படர் எனும் முனிவர் தான் இயற்றிய அஷ்டாங்க சங்கிரஹம் எனும் ஆயுர்வேத நூலில் தெரிவிக்கிறார். அதற்கு "அரசனைப்போல் நிமிர்ந்து அமர்ந்து கொள்' என்று அர்த்தமாகும். பள்ளிக்குக் காலையில் புறப்பட வேண்டிய அவசரம். காலையில் வீடே பரபரப்பாகக் காணப்படும் நேரம். அம்மா சில சமயம் ஊட்ட வேண்டிய கட்டாயம். ஊட்டிக் கொண்டிருக்கும்போதே "டாய்லெட் வருகிறது' என்று குழந்தை எழுந்து ஓடிவிடும். "நேரமாகிறதே' என்று அம்மாவிற்கு டென்ஷன். இப்படிப்பட்ட ஒரு மனப் போராட்டம் குழந்தைக்கும் அம்மாவிற்கும் இடையே நடக்கும்போது, அரசனைப் போல யாரால்தான் அமர இயலும்? உண்ட உணவு செரிக்குமா? வாந்தி ஆகுமா? என்றெல்லாம் குழப்பம் நிலவும் ஒரு வகையான அவசர யுகத்தில் நாம் வாழ்கிறோம்.
மேல் வயிறு வெற்றிடமாக இருக்கும் நிலையில், சமான வாயு அவ்விடத்தில் சூழ்ந்து நிற்கிறது. சூடு ஆறிப்போன உணவுப் பண்டத்தை குழந்தை சாப்பிட நேர்ந்தால் இந்த சமான வாயு இடம் பெயராமல், கீழ்நோக்கிச் செல்லாமல், இரைப்பையின் சுவர்ப் பகுதிகளை அழுத்தி, ஒரு குத்திட்ட நிலையிலேயே நிற்பதால் வயிற்றில் வலி ஏற்படுகிறது. பள்ளிச் சீருடை அணிந்து, அதன் மேலுள்ள பெல்ட்டை தளர்த்தாமல் தரையில் சம்மணமிட்டு, கீழ்நோக்கிக் குனிந்து வேக வேகமாக உணவைச் சாப்பிட்டால், வயிற்றின் மேல்புறத்திலிருந்து ஏற்படும் அழுத்தமும் சேர்வதால் குழந்தை திணறிப் போவது இயற்கைதான்.
சமையல் பாத்திரம், உணவின் தரம், தண்ணீர், எரியும் நெருப்பின் வேகம், சமைப்பவரின் மனநிலை போன்றவற்றையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். ஹிண்டாலியம், ஈயம் போன்ற பாத்திரங்களைவிட இன்றைய காலகட்டத்திற்கு ஸ்டீல் பாத்திரங்கள் சமையலுக்கு ஏற்றவை. உணவுப் பொருள் சுத்தமாகவும் தரமான வகையிலும் இருக்க வேண்டும். ரசாயனக் கலவைகளின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விட இயற்கையான தண்ணீரைக் கொண்டு வேக வைப்பது நல்லது. எலக்ட்ரிக் ஸ்டவ், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், மைக்ரோ வேவ் ஓவன் போன்றவற்றின் உபயோகம் மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே உபயோகித்து, முடிந்தவரை கேஸ் அடுப்பை சிம் அல்லது சிம் ஹை ஆகியவற்றிற்கு இடையே வைத்துச் சமைப்பது மிகவும் நல்லது. காலையில் குளித்த பிறகு, அமைதி மற்றும் மகிழ்ச்சியான மனநிலையுடன் வீட்டிலுள்ள பெண்கள் சமையலைத் தொடங்குவது, அன்றைய தினம் மிகவும் நல்ல பொழுதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சாப்பிட்டவுடன் குழந்தை புத்தகப் பையை மாட்டிக் கொண்டு வேக வேகமாக நடந்து செல்வதையோ, ஓடுவதையோ பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. காலை உணவிற்குப் பிறகு ஓய்வு எடுக்கும் வகையில் குழந்தைக்கு நேரம் கிடைக்கும் வகையில் உணவை உண்ணச் செய்ய வேண்டும். இந்த ஓய்வினால் உண்ட உணவு நேராக இரைப்பையில் சீராக வந்து சேர்ந்து நல்ல முறையில் ஜீரணமாவதற்கு உதவுகிறது.
வயிற்றில் வலி வந்து போவது வாயுவின் விசேஷ குணங்களில் ஒன்றாகும். வயிற்றில் வலி இல்லாமல் இருக்க, வாயுவின் சஞ்சார குணம் மட்டுப்பட, உணவின் தேக்கம் அதிக நேரம் வயிற்றில் இல்லாமல் விரைவில் ஜீரணமாக நீங்கள் மகளுக்கு அஷ்ட சூரணம் எனும் மருந்தை கால் ஸ்பூன் (1.25 கிராம்) அளவில், இந்து காந்தம் எனும் நெய் மருந்து அரை ஸ்பூன் ஆகியவற்றைச் சூடான சாதத்துடன் கலந்து முதல் உருளையைச் சாப்பிடக் கொடுக்கவும். இந்த மருந்தின் தொடர் உபயோகத்தினால் கெடுதல் ஏதுமில்லை.
மனதிலுள்ள பயத்தினால் குழந்தை பள்ளிக்குச் செல்ல வேண்டிய நாட்களை தவிர்ப்பதற்காக வயிற்றுவலி என்று கூறினால், அந்த பயத்திற்கு உண்டான காரணத்தைக் குழந்தையிடம் அன்புடனும் அனுசரணையுடனும் விசாரித்து அறிந்து, அந்த பயத்தைப் போக்குவதற்கான முயற்சிகளைப் பெற்றோராகிய நீங்கள் செய்ய வேண்டுமே தவிர, முன் குறிப்பிட்ட சூரண, நெய் மருந்துகளால் மாற்ற இயலாது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


