புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

முகங்கள்: இசைகளை இணைக்கவே என் இசைப் பயணம்!

புதிது புதிதாய் மாறுதல்கள் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டு வருகின்றன. ஆனால்  இந்தப் புதிய மாறுதல்கள் திடீரென்று வானத்தில் இருந்து குதித்து வந்தவையல்ல. பழையனவற்றிலிருந்துதான் புதியவை பிறக்கின்றன. ""மக்களி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:35 pm

ந. ஜீவா

புதிது புதிதாய் மாறுதல்கள் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டு வருகின்றன. ஆனால்  இந்தப் புதிய மாறுதல்கள் திடீரென்று வானத்தில் இருந்து குதித்து வந்தவையல்ல. பழையனவற்றிலிருந்துதான் புதியவை பிறக்கின்றன.

""மக்களின் மனதைக் கவரும் எவ்வளவோ திரைப்பட பாடல்கள் நமது பழைய கர்நாடக சங்கீதத்தில் உள்ள ராகங்களை அடிப்படையாகக் கொண்டு பிறந்திருக்கின்றன'' என்கிறார் சாருலதா மணி.

 எப்படியெல்லாம் கர்நாடக இசையின் ராகங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் திரைப்பட பாடல்கள் பிறந்திருக்கின்றன என்பதை விளக்கும்விதமாக ஜெயா டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக "இசைப் பயணம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் அவர்.

இதை அடிப்படையாக வைத்து கச்சேரிகளும் நடத்துகிறார். டிவிடி வெளியிட்டிருக்கிறார். பழமைக்கும் புதுமைக்கும் உள்ள தொடர்பை எல்லாரும் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கும் அவர், தற்போது திரைப்படப் பாடகியும் கூட.

சாருலதா மணியை சென்னை திருவான்மியூரில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

உங்களுடைய "இசைப் பயணம்' நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லுங்களேன்?

ஜெயா டிவியில்தான் நான் முதன்முதலில் "இசைப் பயணம்' நிகழ்ச்சியை ஆரம்பித்தேன். வாரம் ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் வாரத்திற்கு ஒரு கர்நாடக இசை ராகத்தை எடுத்துக் கொண்டு அது தமிழ்த் திரைப்படப் பாடல்களில் எப்படி அமைந்துள்ளது என்பதை விளக்குவதுதான் இந்த நிகழ்ச்சி.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், விஜய் ஆன்டெனி எல்லாரும் கர்நாடக சங்கீதத்தின் ராகங்களை எப்படித் திரையிசைப் பாடல்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைச் சொல்வதுதான் அந்த நிகழ்ச்சி.

எந்தப் பாடல் எந்த கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்திருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் புத்தகங்கள் கூட தமிழில் வெளிவந்திருக்கின்றன. இப்படிப்பட்ட புத்தகங்களினால் அதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கலாம். நல்ல முயற்சிதான். ஆனால் ரஸகுல்லா என்று பேப்பரில் எழுதிப் படித்தால் ரஸகுல்லாவைச் சுவைத்த உணர்வை ஒருவர் பெற முடியுமா? எனவே மக்களுக்கு கர்நாடக சங்கீத ராகங்களையும் அதை அடிப்படையாகக் கொண்ட திரைப்படப் பாடல்களையும் கேட்டுச் சுவைக்கும் வாய்ப்பைத் தரவே இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவியில் ஆரம்பித்தேன். அதற்கு மிக நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை மேலும் விரிவு படுத்தி "இசைப் பயணம்' கச்சேரிகளையும் மேடைகளில் நிகழ்த்துகிறேன். இதனால் ஆடியன்ஸின் நேரடியான பாராட்டுதல்களைப் பெற முடிகிறது. இரண்டரை மணி நேரக் கச்சேரியில் எவ்வளவோ ராகங்களைப் பற்றி ஆடியன்ஸ் தெரிந்து கொள்கிறார்கள். ரசிக்கிறார்கள்.

இசைப் பயணம் நிகழ்ச்சியை நமது நாட்டில் மட்டும் அல்லாமல், வெளிநாடுகளுக்கும் சென்று நடத்துகிறேன்.

வெளிநாடுகள் என்றால் எந்த நாடுகளில் நடத்தினீர்கள்?

2007 ஆம் ஆண்டில் கனடாவில் எனது இசை நிகழ்ச்சி நடந்தது. கிட்டத்தட்ட 15 ஆயிரம் மக்கள் கச்சேரிக்கு வந்திருந்தனர். ஆனால் அது இசைப் பயணம் நிகழ்ச்சியல்ல. மெல்லிசை நிகழ்ச்சி.

அதற்கு அடுத்த ஆண்டு கனடாவில் டொரான்டோ நகரில் பாரதி கலா மன்றம் சார்பில் இசைப் பயணம் கச்சேரியை நடத்தினேன். அங்கு வாழும் தமிழ் மக்கள் நமது மண்வாசனையை இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள் என்பது மனதை நெகிழ வைத்தது.

2008 இல் லண்டனில் "தமிழ் அனாதைகள் அறக்கட்டளை' என்ற அமைப்புக்காக நிதி திரட்டுவதற்காக நடத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

இந்த ஆண்டிலும் லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறேன்.

மத்திய கிழக்கு நாடுகளான துபாய் போன்ற நாடுகளிலும் எனது இசைப் பயணம் கச்சேரி நடந்திருக்கிறது. மார்ச் 2008 இல் ஆஸ்திரேலியாவிற்கும் சென்று கச்சேரிகள் நடத்தினேன்.

டிவிடி  வெளியிட்டு இருக்கிறீர்களாமே?

ஒவ்வொரு மாதமும் சென்னையில் உள்ள பாரதீய வித்யாபவனில் என்னுடைய "இசைப் பயணம்' கச்சேரிகள் நடைபெறுகின்றன. அந்தக் கச்சேரிகள் பதிவு செய்யப்பட்டு டிவிடியாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரை 10 தொகுதிகளாக அவை வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இசையமைப்பாளர் தீனா, பாடகர் உன்னிகிருஷ்ணன் இருவரும் 8, 9, 10 ஆவது தொகுதிகளை வெளியிட்டனர். இந்த டிவிடிக்களுக்கு இசை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

கர்நாடக சங்கீத ராகங்களின் அடிப்படையில் அமைந்துள்ள திரைப்படப் பாடல்களைப் பற்றி நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமானால், பாரம்பரிய சங்கீதத்தில் உங்களுக்கு நல்ல பயிற்சி இருக்க வேண்டுமே?

ஆமாம். என் குடும்பமே இசைக் குடும்பம்தான். அம்மா ஹேமலதா மணி நன்றாக வீணை வாசிப்பார். சிறுவயதில் இருந்தே கர்நாடக இசை கற்றுக் கொண்டேன். சொன்னால் நம்பமாட்டீர்கள். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். நான் இன்ஜினியர் வேலைக்குப் போகாமல், கர்நாடக இசையில் உள்ள ஆர்வத்தால் பாட வந்துவிட்டேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசையில் எம்.ஏ. படித்திருக்கிறேன்.

சினிமாவுக்குப் பாடிய அனுபவம் பற்றி?

சமீபத்தில் நான் விஜய் நடிக்கும் "வேட்டைக்காரன்' படத்திற்காகப் பாடியுள்ள ஒரு பாடல்  ஹிட் ஆகியுள்ளது. எந்த எஃப்எம் ரேடியோவைத் திறந்தாலும் அந்தப் பாடல் நம்பர் ஒன் பாடலாக ஒலிக்கிறது. "ஏ...உச்சி மண்டையிலே' என்ற அந்தப் பாடலுக்கு இசை அமைத்திருப்பவர் விஜய் ஆன்டெனி சார். ரொம்பவும் இயல்பான வார்த்தைகளால் அதை எழுதியிருப்பவர் அண்ணாமலை. இந்தப் பாடல் இவ்வளவு ஹிட்டாகும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. இந்தப் பாடலின் ஓப்பனிங்கில் ஸ்பானிஷ் மொழியில் சில வார்த்தைகளை நான் பேசியிருப்பேன். அது ரசிகர்களை ரொம்பக் கவர்ந்து விட்டது. ரெண்டாவது பிஜிஎம்மில் ஒரு ஹம்மிங் பண்ணியிருப்பதும் ரொம்பப் பேருக்குப் பிடித்துவிட்டது.

ஸ்பானிஷ் மொழி தெரியுமா?

ஸ்பானிஷ் மொழி தெரியாது. சில வார்த்தைகள் தெரியும். அவற்றிற்கு அர்த்தமும் தெரியும். அதுபோல இத்தாலி மொழியிலும் சில வார்த்தைகள் தெரியும். ஹிந்தி, இங்கிலீஷ் நன்றாகத் தெரியும்.

சினிமாவில் முதன்முதலில் பாடிய பாடல்?

2007 இல் விஜய் ஆன்டெனி சாரின் இசையில் "நான் அவனில்லை' படத்திற்காக  "காக்க.. காக்க.. கன்னம் காக்க' என்ற பாடலைப் பாடினேன். அதுதான் எனது முதல் திரைப்படப் பாடல். அதைக் கர்நாடக இசைப் பாடல் என்று சொல்ல முடியாது. மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்த பாடல் என்று சொல்லலாம்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் "அர்ஜுனனின் காதலி' படத்தில் பாடியிருக்கிறேன். சபேஷ் முரளி இசையில் "முத்துலக்ஷ்மி', "ரேணிகுண்டா' படத்திற்காகவும் பாடியிருக்கிறேன்.

ரெஹானா இசையில் "என்னை ஏதோ செய்துவிட்டாய்' படத்திலும் பாடியிருக்கிறேன்.

சொல்ல மறந்துவிட்டேனே, கன்னடத்தில் விஜய் ஆன்டெனி சார் இசையில் "புத்தி வந்த்தா' படத்திலும் பாடியிருக்கிறேன்.

கர்நாடக சங்கீதத்தில் ஆர்வமுள்ள நீங்கள் திரைப்படப் பாடலைப் பாடுபவராக அறியப்படுவது பற்றி?

கர்நாடக சங்கீதமும் திரையிசைப் பாடல்களும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. கர்நாடக சங்கீதத்தில் தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடி அதற்குத் தமிழில் அர்த்தமும் சொல்வேன். நான் ரெண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

சிலர் கர்நாடக சங்கீதத்துடன் நின்று கொள்வார்கள். கர்நாடக சங்கீதத்தை ரசிக்க பயிற்சி, பழக்கம் அவசியம். எல்லா மக்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க மாட்டார்கள். கர்நாடக இசையின் ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது கர்நாடக இசையின் மேன்மையை ரசிக்க முடியும். கர்நாடக இசையையும் மெல்லிசையையும் இணைப்பதே என்னுடைய இசைப் பயணத்தின் நோக்கம்.

பெற்ற விருதுகள் பற்றி?

2004 இல் "யுவகலா பாரதி' என்ற விருதை பாரத் கலாச்சார் கொடுத்தது. வைரமுத்து அதில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

2008 ஆம் ஆண்டு "எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி என்டோவ்மென்ட் விருது' நாரத கான சபா கொடுத்தது.

"இளம் இசைக் கலைஞர் விருதை' 2 வருடங்களாக கிருஷ்ணகான சபா கொடுத்தார்கள்.

"சிறந்த பாடகி விருதை' பார்த்தசாரதி சபா கொடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.