தன்னம்பிக்கை: கைகள் இரண்டும் மூலதனம்!

தளராத முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் ஊனம் ஒரு தடையல்ல என்பதை உண்மையாக்கியிருப்போர் பட்டியலில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மணலூரைச் சேர்ந்த ஊனமுற்ற இளைஞர் சிவன்முருகனையும் சேர்த
தன்னம்பிக்கை: கைகள் இரண்டும் மூலதனம்!

தளராத முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் ஊனம் ஒரு தடையல்ல என்பதை உண்மையாக்கியிருப்போர் பட்டியலில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மணலூரைச் சேர்ந்த ஊனமுற்ற இளைஞர் சிவன்முருகனையும் சேர்த்துவிடலாம்.

  இவரது தந்தை கன்னியப்பன் ஏழை விவசாய கூலித் தொழிலாளி.

  சிவன்முருகனுக்கு 2 வயதிருக்கும் போது மூளைக்காய்ச்சல் தாக்கியதால் கால்கள் செயலிழந்து போய்விட்டன. நல்ல நிலையில் கை, கால் இருக்கும்போதே சிலர் உழைக்க மனமில்லாமல் சுற்றித் திரியும் இந்தக் காலத்தில்,  உடல் குறைபாடு உள்ள இந்த நிலையிலும் உழைத்து வாழ்கிறார் சிவமுருகன்.

  சூம்பிய அந்தக் கால்களோடு, 3 சக்கர சைக்கிளில் அவர் நாளொன்றுக்கு 30 கிலோ மீட்டர் தொலைவு கைகளால் சைக்கிள் மிதித்து மாதம் மூவாயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.

  சைக்கிளைச் சுற்றி அட்டைப் பெட்டிகளை வைத்து அதில் கடலைமிட்டாய், சாக்லெட், பிஸ்கெட், ரொட்டி, சிறுவடிவிலான ஜிலேபி, மைசூர்பாகு,  அதிரசம் போன்ற குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் சகிதமாக அதிகாலை 6 மணிக்கு மணலூரைவிட்டு புறப்படுவார்.

  அங்கிருந்து பெரும்பத்தூர், நயினாபுரம், புளியம்பட்டி ஆகிய கிராமங்களிலுள்ள பெட்டிக் கடைகளுக்கு மிட்டாய்களைப் போட்டுவிட்டு மாலையில் சங்கரன்கோவில் எழில்நகர், தாமஸ்நகர், காமராஜர் நகர், கக்கன்நகர், காந்திநகர், கழுகுமலை சாலை பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு சரக்குகளைப் போடுவார்.

  வெயில், மழை என்று பார்க்கமாட்டார். நாள்தோறும் விடாமல் வந்து ""சரக்கு வேண்டுமா'' எனக் கேட்கும் சிவன்முருகனின் கடும் உழைப்பைக் கண்டு, அவரிடம் சரக்குகளை வாங்கும் பெட்டிக் கடைக்காரர்கள் உடனே அதற்கான பணத்தையும் கொடுத்துவிடுகின்றனர்.

  சைக்கிளை விட்டு இறங்க முடியாத அவருடைய நிலையைப் பார்த்து அவர்களாகவே கடையைவிட்டு வெளியேவந்து சிவன்முருகனிடம் சரக்குகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

  மாலை 6 மணிக்கு வியாபாரத்தை முடித்துவிட்டு திருவேங்கடம்சாலையில் உள்ள மொத்த வியாபாரக் கடைக்குச் சென்று மறுநாள் விற்பனை செய்வதற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இரவு சுமார் 8 மணிக்குதான் வீட்டுக்குச் செல்வார். பிறகு மறுநாள் காலை 6 மணிக்கு வியாபாரத்திற்குப் புறப்பட்டுவிடுவார். இப்படித்தான் ஓடுகிறது ஒவ்வொருநாளும் சிவமுருகனுக்கு.

  அவரை சந்தித்தபோது:

  ""தூத்துக்குடி ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம் மூலம் அங்கு 5-ம் வகுப்பு வரை படித்தேன்.

  பிறகு சிவகிரி ஸ்டெல்லா மேரீஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்தேன்.

  தொடர்ந்து படிக்க இயலாத கஷ்டமான சூழ்நிலை. வீட்டில் இருந்து கொண்டே சிறுசிறு வேலைகளை செய்து வந்தேன்.

  இருந்தாலும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க விரும்பவில்லை. சுயமாகத் தொழில் செய்து முன்னேறினால் யாரையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று நினைத்தேன்.

  அதனால் எனது தந்தையிடம் ரூ. 5000 மட்டும் கடன் வாங்கித் தருமாறு கேட்டேன். அந்தக் கடனை செலுத்தி ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்று மாதம் ரூ. 3000 ஆயிரம் சம்பாதிக்கிறேன்.

  கடைக்காரர்கள் எனக்கு ஆதரவு தருகிறார்கள். பணத்தையும் உடனே கொடுத்துவிடுகிறார்கள்'' என்றார் அவர்.

  உழைப்பின் இலக்கணமாய் திகழும் சிவன்முருகன் சோம்பிக் கிடப்பவர்களுக்கு ஒரு பாடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com