

திருநெல்வேலிகாரர்களுக்கு டவுன் என்றாலே அலர்ஜி. காரணம் கூட்ட நெரிசல். கடை வீதி, வாகன நெருக்கடி இத்யாதிகள்தான். அந்தப் பகுதியில் ஒருவரது வீட்டு விலாசத்தை கண்டுபிடித்து செல்வது என்றால் சற்று சிரமம்தான்.
டவுன் லட்சுமி தியேட்டர் வழியாக தெற்கு மவுண்ட் ரோட்டில் சென்று எண்ணாயிரம் பிள்ளையார் கோவில் தெருவில் நின்று கொண்டு "கமலசேகரன் சார்' வீடு எது எனக் கேட்டால் முழிக்கத்தான் செய்வார்கள். "அவர் தமிழ் வாத்தியாருங்க' என்று கூடுதலாக ஒரு தகவலை சொன்னால் சட்டென்று புரிந்து கொண்டு "ஓ... திருக்குறள் சார்வாள் வீடா' என்று முகம் மலர்ந்து விலாசத்தை கூறுகின்றனர்.
""அதாண்டே, வீட்டுக்கு மேல வள்ளுவரு சிலையை வச்சி "திருவள்ளுவர் இல்லம்'னு எழுதியிருக்குமே, வாசல்ல கூட ஒரு குறளை எழுதி வச்சிருப்பாரே, அவர் வீடுதான்'' என அருகில் நிற்பவர்களிடமும் விளக்கம் கூறிவிட்டு செல்ல வேண்டிய பாதையை விளக்கமாக கூறுகின்றனர். திருவள்ளுவரும், திருக்குறளுமே கமலசேகரனுக்கு விலாசம்!
1989 வரை உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர் 61 வயதாகும் மா. கமலசேகரன். தமிழ் மீது ஏற்பட்ட காதலால் தமிழ் பயின்று தமிழாசிரியர் ஆனார். 17 ஆண்டுகள் அரசு பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றுள்ளார்.
ஓய்வு என்பது வேலைக்குத்தானே தவிர தான் ஏற்றுக் கொண்ட திருக்குறள் பணிக்கு அல்ல என்று கூறும் அவரைச் சந்தித்துப் பேசினோம்.
* திருக்குறள் மீதான ஆர்வம் எப்படி பிறந்தது?
மறைமலை அடிகளின் மகன் மறை திருநாவுக்கரசு தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு சென்னையில் தமிழ்த் தொண்டு செய்து கொண்டிருந்தார். அவருடன் நட்பு ஏற்பட்டது. வாழ்வில் எதைக் குறிக்கோளாக கொள்ளப் போகிறீர்கள் என என்னிடம் கேட்டுவிட்டு திருக்குறள் படிக்கும்படி கூறினார். அவரது அறிவுரையின்படி திருக்குறளைப் படிக்கத் தொடங்கினேன். அதையே வாழ்க்கையின் குறிக்கோளாகவும் கொண்டுள்ளேன்.
* திருக்குறளைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?
1976-ல் கி.ஆ.பெ. விஸ்வநாதனை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் இப்படித்தான் கேட்டார். கேட்டுவிட்டு அவரே பதிலையும் சொன்னார். திருக்குறளின் புகழை நாம் பரப்ப வேண்டியதில்லை. அதற்கு பேரும், புகழும் உள்ளது. அதை பரப்ப வேண்டியதும் இல்லை. அதன் புகழ் தானாகவே பரவும். வேண்டுமானால் நாம் ஒரு சிறிய தொண்டு செய்யலாம் என்றார். அதையேதான் நானும் கூறுகிறேன்.
திருக்குறளை பரப்ப வேண்டாம். அதன் நெறிப்படி நாம் வாழ முயற்சித்தாலே போதும். அதைப் பார்க்கும் குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள் என நாலு பேர் பின்பற்றினால் அதுவே பெரிய தொண்டு. இது விதை விதைக்கிற மாதிரி. நல்ல விதையை விதைத்தால் நல்ல பலனைத்தான் தரும். எதிர்கால சமுதாயத்திற்கு இந்த விதையை விதைக்காமல் இருந்தால் அதுவே பெரிய தீங்கு.
சரி, திருக்குறள் தொண்டாக என்னென்ன செய்கிறீர்கள்?
இலக்கிய கூட்டங்களில் திருக்குறள் குறித்துப் பேசுகிறேன்.
நான் தமிழாசிரியராகப் பணியாற்றிய பள்ளிகளில் திருக்குறள் மன்றம் தொடங்கி அதில் மாணவர்களை சேர்த்து திருக்குறள் சொல்லிக் கொடுத்தேன். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தொடங்கிய உலக திருக்குறள் பணிக்களத்தில் திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளராகவும் பணியாற்றி இங்கு 30 கிளைகளைத் தொடங்கினேன். திருவள்ளுவர் தினத்தன்று குழந்தைகளை அழைத்து வந்து முற்றோதுதல் நடத்தி வருகிறேன். பள்ளிகளுக்கு சென்று திருக்குறள் வகுப்புகளை நடத்துகிறேன். விலை ரூ. 5 மதிப்புள்ள திருக்குறள் புத்தகங்களை முடிந்த அளவுக்கு வாங்கி விநியோகம் செய்கிறேன்.
* இந்த தொண்டுக்கு என்ன பிரதிபலனை எதிர்பார்க்கிறீர்கள்?
பிரதிபலனை எதிர்பார்த்தால் அதற்குப் பெயர் தொண்டு அல்ல. ஒரு நம்பிக்கையில் "விதைத்துக்' கொண்டிருக்கிறேன். அறுவடை செய்வது எனது கையில் இல்லை. அது காலத்தின் கையில்தான் உள்ளது. எனது பணி உழைப்பு, விதைப்பு மட்டுமே.
வீட்டு உச்சியில் திருவள்ளுவர் சிலையை வைத்திருக்கிறீர்கள். வீட்டுக்கு "திருவள்ளுவர் இல்லம்' என பெயர் சூட்டி இருக்கிறீர்கள். வாசலில் திருக்குறளை எழுதி வைத்திருக்கிறீர்களே!
இது ரசிகர் மன்றம் மாதிரிதான்.
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து
என்ற குறளை எழுதி வைத்துள்ளேன். நன்மை செய்வதால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும் என்பது அதன் பொருள். அதன்படி வாழ முயற்சிக்கிறேன்.
இந்தச் சிலையையும், குறளையும் பார்த்துச் செல்பவர்களில் சிலர் விவரம் கேட்பார்கள். விவரம் சொல்வேன். சிலர் கேலி செய்வார்கள், சிலர் பாராட்டுவார்கள். "இவர் திருக்குறள் அபிமானி' எனத் தெரிந்து கொண்டு சிலர் வந்து "திருக்குறள் சேவை' செய்வதாக கூறி என்னிடம் பணமும் பெற்று செல்வார்கள். அப்படி ஏமாந்தும் இருக்கிறேன். எப்படி இருந்தால் என்ன, ஏதோ ஒரு வகையில் திருக்குறள் தொண்டு நடந்தால் சரி என எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
தொண்டு...தொண்டுதான். வேறொன்றுமில்லை.
படங்கள் : பூ. வீரமணிகண்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.