
ருளோடு பொருளும் அள்ளித்தரும் அரனார் விரும்பி உறையும் தலங்களுள் பல சோழ தேசத்திற்கே உரியவை. அவ்வகையில் அரியதோர் தலமாய் அருள் பரப்புகின்றது திருத்தெளிச்சேரி என்னும் கோவில்பத்து.
மணம் மிகுந்த மலர்ப்பொழில் சூழ விளங்கிய இப்பதி தேர் போகும் அகன்ற வீதிகளையும் கொண்டு திகழ்ந்துள்ளது.
ஆதியில் பிரம்மனோடு ஏனைய தேவாதி தேவர்களும் இங்கு ஈசனை நோக்கி தவமிருந்து, பூஜித்து, அருள்பெற்றுள்ளனர்.
தவம்புரிய உகந்த இப்பகுதியில் உமையவளும் திருமண வரம் வேண்டி, பரமனைக் குறித்து கடுந்தவமிருந்து, அவர் கருணையைப் பெற்றுள்ளாள்.
பிரம்மவனம், முக்திவனம் என்றழைக்கப்பட்ட இப்பதி ஈசரை, சூரியன் வணங்கியதால் பாஸ்கரலிங்கம் எனப் போற்றப்படுகின்றார். அம்பரீஷ் மன்னன் வழிபட்டதால் ராஜலிங்கம் எனவும் அழைக்கப் பெறுகின்றார்.
அளப்பிலா அருட்திறம் கொண்ட இப்பதி திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப் பெற்ற சோழநாட்டின் காவிரித் தென்கரைத் தலங்களில் 50 வது திருத்தலமாகப் பேரோங்கி புகழ் பரப்புகின்றது.
சம்பந்தர் இத்தலம் நோக்கி வரும்போது ""பர சமய கோளரி வந்தார்'' என அடியார் பெருமக்களால் புகழாரம் சூட்டப்பட்டு, வரவேற்பு அளிக்கப்பட்டது. இது கண்டு பொறுக்காத பெüத்த சமயத்தவர்கள் ஆளுடைய பிள்ளையாரை தெளிச்சேரிக்கு வரவிடாது தடுத்தனர். உடன் சம்பந்தர் பெருமான் பார்வதி ஈசனை நோக்கி பதிகம்பாடி பெüத்தர்கள் தலையில் இடி விழச் செய்தார். எதிர்த்தோர் மாண்டு விழ, ஏனையோர் திருநீறு பூசி, சைவத்தில் சேர்ந்தனர். இது இங்கு நடந்த அற்புதமாகும்.
சம்பந்தர் தனது பாடல்வரிகளில் மூன்று காலங்களிலும் தேவர்கள் வணங்கும் தெளிச்சேரியென்றும், அடியவர்களின் குறைகளைத் தீர்த்து, வேண்டிய வரங்களைத் தந்தருளி, மகிழ்ச்சியில் திளைக்கச் செய்பவர் இவரென்றும் சுட்டியுள்ளார். சிவனின் வீரச் செயல்களைப் போற்றியும் உமையம்மையை இங்கு பூஜித்தது பற்றியும் பாடியுள்ளார்.
மேற்கே திருமுகம் கொண்டு ஆலயம் அழகாய் அருள் பொழிகின்றது. எதிரே சாலையின் மறுபுறம் நீர் நிரம்ப, அலை மிகுந்த அகண்ட திருக்குளம் சூரிய புஷ்கரணியென்னும் பெயர்தாங்கி விளங்குகிறது. சக்தி தீர்த்தம் என்றும் இதை அழைப்பர்.
நுழை வாயிலுள் நுழைந்து சென்றதும் உள்ளே ஐநிலை ராஜகோபுரம் ஐவண்ண ஜொலிப்பில் மின்னுகிறது. மேலும் செல்ல ஒரே பெரிய மகாமண்டபம் மூடுதளத்துடன் திகழ ஆங்காங்கே சாளரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அம்பாள் சன்னிதி தென் திசையில் நோக்க, ஸ்வாமி சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது.
கருவறையுள் கருத்தை நிறைக்கும் கண்கவர் லிங்கமூர்த்தியாய் நமக்கு தரிசனமளிக்கிறார் ஸ்ரீ பார்வதீஸ்வரர். சுயம்பு மூர்த்தம்.
இங்கு விநாயகர், ஸ்கந்தர், கஜலக்ஷ்மி ஆகியோருக்குத் தனி சன்னிதிகள் உண்டு. மற்ற கோஷ்ட தெய்வங்களும் முறையே அமைக்கப்பட்டுள்ளன.
இறைவன் வேடுவக் கோலத்தில் வீற்றிருப்பதாகவும், இறைவி தவக் கோலத்தில் தயை புரிவதாகவும் ஐதீகம்.
தல விருட்சம், வன்னி.
தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். இரண்டு வேளை பூஜைகள் நடத்தப்படுகின்றன. அனைத்து சிவாலய விசேடங்களும் சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றன.
பங்குனி மாதம் 13 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சூரியனின் கிரணங்கள் இறைவனின் மேல் படர்கின்றன. அச்சமயம் இவ்வைபவத்தைக் கண்டு களித்திட மக்கள் வெள்ளமெனத் திரள்வர்.
ஒவ்வொரு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளிலும் விடியல் பொழுதில் இத்தல சூரிய புஷ்கரணியில் நீராடி, இறைவனை வன்னி இலைகளாலும், இறைவியைக் குங்குமத்தாலும் அர்ச்சித்து, முக்கனிகளை நிவேதனம் செய்து வழிபட்டு, திருமணத் தடைகளையும், முன்னேற்றத் தடைகளையும் களையும் அன்பர்களை இன்றும் நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது இந்த கோவில்பத்து.
ய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.