புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

முகங்கள்: இதோ இன்னொரு ஜி.டி. நாயுடு!

மெத்தையை வாங்கினேன். தூக்கத்தை வாங்கவில்லை என்பார்கள். இந்தக் காலத்தில் நன்றாகத் தூங்குவதற்கு மெத்தையை வாங்கினால் மட்டும் போதாது. கொசுவிரட்டியையும் சேர்த்து வாங்க வேண்டும்.     மாதம்தோறும் தேவையே இல்ல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:36 pm

ந. ஜீவா

மெத்தையை வாங்கினேன். தூக்கத்தை வாங்கவில்லை என்பார்கள். இந்தக் காலத்தில் நன்றாகத் தூங்குவதற்கு மெத்தையை வாங்கினால் மட்டும் போதாது. கொசுவிரட்டியையும் சேர்த்து வாங்க வேண்டும்.

    மாதம்தோறும் தேவையே இல்லாமல் நாம் செலவு செய்கிறோம் என்றால் அது கொசுவிரட்டிகளுக்காகத்தான். அப்படி நாம் வாங்கிப் பயன்படுத்தும் கொசுவிரட்டிகளில் இருந்து வரும் புகையை முகர்ந்து பலவிதமான உடல்நலப் பிரச்னைகளும் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.

கேடுகள் தராத இயற்கை கொசுவிரட்டிகளைக் கண்டுபிடித்தால் என்ன என்று ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்குத் தோன்றியது. தனக்குத் தெரிந்த பலரிடமும் கேட்டுத் தெரிந்து கடுமையாக முயற்சி செய்து அந்த மாணவர் ஓர் இயற்கை கொசுவிரட்டி திரவத்தைக் கண்டுபிடித்தார்.

அது எந்தவிதமான உடல் நலக் கேடுகளையும் உண்டு பண்ணவில்லை. தயாரிப்புச் செலவும் மிக மிகக் குறைவு. அந்தக் கண்டுபிடிப்புக்காக சென்னை ஐஐடியில் உள்ள ஓர் அமைப்பு "இளம் விஞ்ஞானி'விருது கொடுத்து அவரைக் கெüரவித்திருக்கிறது.

கொசுவிரட்டி திரவத்தைக் கண்டுபிடித்த அந்த மாணவர் பெயர் மோகன். அவர் இப்போது கரூர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா படிக்கிறார்.  மோகனின் கண்டுபிடிப்புப் பயணம் இதோடு நின்றுவிடவில்லை.

    செல்போனை எடுத்துச் செல்வதற்குத் தடைவிதிக்கும் கல்லூரிகள், பள்ளிகள், நிறுவனங்களுக்குள் பிறருக்குத் தெரியாமல் செல்போனை பலர் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். அப்படி எடுத்துச் செல்வதைக் கண்டுபிடித்துத் தரும் கருவி ஒன்றையும் அவர் உருவாக்கியிருக்கிறார்.

ஸ்பீட் பிரேக்கர்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டமொன்றையும் கைவசம் வைத்திருக்கிறார். இப்படி புதிய புதிய கண்டுபிடிப்புகளில் எப்போதும் படு ஆர்வமாக இருக்கும் அவரின் குடும்பப் பின்னணியோ மிக எளிமையானது.

தந்தை கருப்பசாமி டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாளர். அம்மா லட்சுமி  இல்லத்தரசி. பொறியியல் படிக்கும் அண்ணன் விஸ்வநாதன் ஒருவர்தான் கல்வியில் இவருக்கு முன்னோடி.    

எப்போதும் துடிப்புடன் செயல்படும் அந்த இளம் விஞ்ஞானி மோகனுடன் பேசினோம்:

"" நான் பள்ளிக் கல்வியை கரூர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள டிஎன்பிஎல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில் படிக்கும்போதுதான் இந்த இயற்கைக் கொசுவிரட்டித் திரவத்தைக் கண்டுபிடித்தேன்.

    நான் எதையாவது சாதித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் சந்தித்த தோல்விகள்தான். எல்லாமே எனக்குத் தோல்வியில்தான் ஆரம்பித்திருக்கும்.

ஆறாவது முதல் எட்டாவது வரை விளையாட்டில் ரொம்ப ஆர்வம். ஆனால் 7 வது படிக்கும் வரை ஒருமுறை கூட ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற முடியவில்லை. தோல்விதான், எட்டாவது படிக்கும்போது இந்தத் தடவை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி வந்தது. அதனால் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஓடுவதற்குப்  பயிற்சி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். இதனால் அந்த ஆண்டு பரிசு கிடைத்தது. இது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. அதுவரை வெறும் காலுடன் ஓடிக் கொண்டிருந்த எனக்கு என் பெற்றோர் ஷூ வாங்கிக் கொடுத்தார்கள்.

அதுபோல பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறும். எட்டாவது படிக்கும் வரை அறிவியல் கண்காட்சிகளில் பங்கு பெற்றாலும் எந்தவொரு  பரிசையும் பெறவில்லை. இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. அப்போது எனக்கு ஆசிரியையாக இருந்த அமுதா, ""நீயே எதையாவது புதிதாகக் கண்டுபிடித்து எக்ஸிபிஷனில் வை '' என்று ஆலோசனை சொன்னார். அது எனக்கு மிகுந்த ஊக்கம் கொடுத்தது.

எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறியோடு அலைய ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் எங்கள் வீட்டில் கடையில் விற்கும் கொசுவிரட்டியை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இரவில் அதிலிருந்து வரும் நெடி ஒருபுறம். காலையில் எழுந்தால் கண்கள் சிவந்திருக்கும். இம்மாதிரியான தீங்குகள் இல்லாத கொசுவிரட்டியைக் கண்டுபிடித்தால் என்ன எனத் தோன்றியது. அதன்பின்பு என் தாத்தா, பாட்டி எனப் பலரையும் விசாரித்தேன்.

அவர்கள் சொல்லியதை வைத்தும் நானாகச் சிலவற்றைச் சேர்த்தும் கொசுவிரட்டித் திரவத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன். அதற்கு என் அம்மா மிகவும் உதவினார். வேப்பம் தழை, வேப்பம் எண்ணெய், யூகலிப்டஸ் இலை, நீலகிரித் தைலம் போன்ற நிறைய மூலிகைகளை அம்மியில் வைத்து அரைத்து அதிலிருந்து எண்ணெய் எடுத்து கொசுவிரட்டி திரவத்தைத் தயாரித்தேன்.

தயாரித்த கொசுவிரட்டித் திரவத்தை ஏற்கனவே பயன்படுத்தி காலியாக இருந்த செயற்கை கொசுவிரட்டிக் கருவியில் ஊற்றிப் பயன்படுத்திப் பார்த்தேன். எந்தப் புகையும் இல்லாமல், நெடியும் இல்லாமல் கொசுவை விரட்டியது நான் கண்டுபிடித்த கொசுவிரட்டித் திரவம். அன்று இரவு முழுக்க என்னால் தூங்கவே முடியவில்லை. மிகவும் சந்தோஷமாக இருந்தது. சாதாரணமாகக் கடையில் வாங்கும் கொசுவிரட்டித் திரவத்தை விட என் கண்டுபிடிப்பின் விலை மிகவும் குறைவு. 25 மி.லி. வெறும் மூன்று ரூபாய்தான் ஆகும். அதே சமயம் எந்த பக்கவிளைவும் இல்லாதது.

அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கொசுவிரட்டித் திரவத்தை பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வைத்தேன். பரிசு கிடைத்தது.

    அதன்பிறகு என் கண்டுபிடிப்பை திருச்சி எம்ஐடி கலை அறிவியல் கல்லூரியில் நடந்த கண்காட்சியில் வைத்தேன். அதில் எனக்கு மாநில அளவில் சிறந்த கண்டுபிடிப்புக்கான முதல் பரிசு கிடைத்தது.

அந்தக் கண்காட்சிக்கு வந்திருந்த பார்வையாளர் ஒருவர் என்னை மிகவும் பாராட்டினார். இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாமிற்குத் தெரிவிக்கச் சொன்னார். நானும் உடனே அப்துல்கலாமுக்கு ஒரு கடிதமும், என் கண்டுபிடிப்பான இயற்கைக் கொசுவிரட்டித் திரவத்தையும் அனுப்பி வைத்தேன்.

2007 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி என் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாள். அன்று குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து என்னைப் பாராட்டிக் கடிதம் வந்தது. அதுமட்டுமில்லாமல், குஜராத்திலுள்ள "நேஷனல் இனோவேடிவ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு அகில இந்திய அளவில் இளம் விஞ்ஞானி விருது தருவதாகவும் அதற்கு நான் விண்ணப்பிக்க வேண்டுமென்றும் ஆலோசனை கூறப்பட்டிருந்தது. நான் உடனே விண்ணப்பித்தேன்.  இந்தியா முழுவதும் என்னைப் போல விண்ணப்பித்தவர்கள் 35 ஆயிரம் பேர். அதனால் பரிசீலிக்கத் தாமதமாவதாகத் தற்போது தகவல் வந்துள்ளது.

சென்னை ஐஐடியில் உள்ள எல்ராம்ப் என்ற அமைப்பு ஆண்டுதோறும் இளம் விஞ்ஞானி விருது வழங்குகிறது. அந்த விருதும் எனக்குக் கிடைத்தது.  இருந்தாலும் என் கண்டுபிடிப்பு ஆர்வம் குறையவேயில்லை.

    ஒருமுறை திருச்சி மத்திய சிறைச்சாலையில் 50 செல்போன்களை மறைமுகமாக வைத்திருந்ததைக் கண்டுபிடித்ததாகச் செய்தித்தாளில் படித்தேன்.

சிறைச்சாலைக்குள் செல்போன்களைக் கொண்டு செல்கிறார்களா என்று அதை ஒருவர் எப்போதும் செக் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக செல்போனை எடுத்துச் சென்றால் அதைக் கண்டுபிடித்துவிடும் கருவியைக் உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செயல்படுத்தினேன். சிம்கார்டு இல்லாமல் ஒருவர் செல்போனைக் கொண்டு சென்று வீடியோ, ஆடியோ பதிவு செய்தாலும் என்னுடைய கருவி கண்டுபிடித்து விடும்.

இப்போது ஸ்பீட் பிரேக்கரின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவியைக் கண்டுபிடிக்கும் திட்டத்தை வைத்திருக்கிறேன். ஸ்பீட் பிரேக்கரை உறுதியான ரப்பரில் அமைத்தால் அதில் வாகனங்கள் ஏறிச் செல்லும்போது ஒருவித இயக்கம் ஏற்படும். அந்த இயக்கத்தைப் பயன்படுத்தி டைனமோவை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம் என்ற திட்டம் உள்ளது.

    என்னுடைய முயற்சிகளுக்கு என் அப்பா, அம்மா, அண்ணன் எப்போதும் ஊக்கம் தருகிறார்கள். உதவுகிறார்கள்.

    கரூர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டி.கே. பழனியப்பன், துறைத் தலைவர் செல்வம் எனக்கு பலவிதங்களிலும் ஊக்கம் அளித்து வருகிறார்கள். நான் ஒன்பதாவது படிக்கும்போது எனக்கு உற்சாகமூட்டிய ஆசிரியை அமுதா இல்லாவிட்டால் நான் இந்த அளவுக்கு உற்சாகமாகச் செயல்பட்டிருக்க முடியாது.

    இப்படி அறிவியலில் எனக்கு ஆர்வம் இருந்தாலும் ஐஏஎஸ் படித்துக் கலெக்டராக வேண்டும் என்பதே என் விருப்பம்.

அதற்காக இப்போதிருந்தே காலையில் தினம்தோறும் இரண்டு செய்தித்தாள்களைப் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்கிறேன். அதிகமாக டிவி பார்ப்பதில்லை. இன்டர்நெட்டில் எனக்குத் தேவையான தகவல்களைத் தேடிப் பிடிப்பதே எனது பொழுதுபோக்கு. நேரத்தை வீணாகச் செலவு செய்வதில்லை. எதைப் படித்தாலும் அதைப் புரிந்து கொண்டு படிக்கிறேன்.

நான் எதையாவது சாதித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம், ஒரு தோல்வி வரும்போது அதற்காகக் கலங்காமல் அதை எப்படி வெற்றி கொள்வது என்று சிந்தித்து அதற்காகக் கடுமையாக உழைப்பது ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.