ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனம் தெளிவு பெற...

என் கணவர் போதைக்கு அடிமையானவர். அதனால் எப்படியோ என் மனநிலை பாதிக்கப் பட்டுள்ளது. சுத்தமான துணிகள் அழுக்காகத் தெரிகிறது. துணிகளை    அடிக்கடி துவைக்கிறேன். அடிக்கடி குளிக்கிறேன். யாரைப் பார்த்தாலும் அசு
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனம் தெளிவு பெற...
Updated on
2 min read

என் கணவர் போதைக்கு அடிமையானவர். அதனால் எப்படியோ என் மனநிலை பாதிக்கப் பட்டுள்ளது. சுத்தமான துணிகள் அழுக்காகத் தெரிகிறது. துணிகளை    அடிக்கடி துவைக்கிறேன். அடிக்கடி குளிக்கிறேன். யாரைப் பார்த்தாலும் அசுத்த மாகவும், அருவருப்பாகவும் தெரிகிறது. வீட்டில் அனைவரும் வெறுப்பாகப் பேசுகிறார்கள்.  மனநல டாக்டர் சாப்பிடச் சொல்லும் மருந்தையும் சாப்பிட மனம் வரவில்லை. இந்த உபாதை மாற வழி என்ன?

ஒரு வாசகி, சிதம்பரம்.

போதைக்கு அடிமையானவர்கள் பத்துவிதமான பாவச் செயல்களைச் செய்வதில் எந்தவிதத் தயக்கமும் காட்டமாட்டார்கள். உயிரினங்களைத் துன்புறுத்துதல், பிறர் உடமையைப் பறித்தல், முறையின்றி உடலுறவு கொள்ளுதல் என மூன்றும் உடலால் செய்யும் பாபச் செயல்கள். கோள் சொல்லுதல், மென்மையற்ற பேச்சு, நேர்மையற்ற பேச்சு, சம்பந்தமின்றி பேசுதல் என நான்கும் வாயால் விளைவிக்கும் பாவச் செயல்கள், உயிரினத்தில் எதையும் அழிக்கும் எண்ணம், பிறர் சிறப்புகளைக் கண்டு சகிப்பின்மை, பண்பாட்டிற்கு முரணான எண்ணம் என்று மூன்று மனத்தால் விளையும் பாபங்கள்.

இதைப் போன்ற செயல்பாடுகளை உங்கள் கணவரிடமிருந்து அடிக்கடி நீங்கள் பார்க்கவும் கேட்கவும் நேர்ந்திருந்தால் உங்களுக்கு நிச்சயம் மனநிலை பாதிப்பு ஏற்படும். சரகர் யாருடன் பழகினால் குடும்பத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்று ஒரு குறிப்பைத் தருகிறார்.

அறிவு, கல்வி, வயது, நற்பழக்கங்கள், மன உறுதி, ஞாபக சக்தி, ஆழ்ந்த சிந்தனை இவற்றுடன் முதிர்ந்தவர்களும், அப்படி முதிர்ந்தவர்களுடன் பழுகுபவர்களும், இயற்கைநிலை அறிந்தவர்களும், மன உறுத்தலற்றவர்களும், எல்லோரிடத்திலும் இனிதே பேசுபவர்களும், அடக்கமும், நன்னோக்கும் கொண்டவர்களும், நல்வழி கூறுபவர்களுமான நல்லோர்களுடன் பழக வேண்டும் என்கிறார். உங்கள் கணவருக்கு இதுபோன்ற ஒரு வாழ்க்கை முறை அமையாமல் தீய நண்பர்களின் சகவாசத்தால் ஏற்பட்ட அவரின் போதைப் பழக்கத்தினால் இன்று உங்கள் மனநிலையும் பாதிக்கப்பட்டு, வீட்டிலுள்ள மற்றவர்களும் வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஜஸ் மற்றும் தமஸ் எனும் மனத்தின் இரு தோஷங்களால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். அறிவுத் தடுமாற்றத்தைத் தரும் இந்த இரு தோஷங்களும் குறைய, மனத்தின் சத்வ குணம் வளர வேண்டும்.

அதற்கு உடலையும் மனத்தையும் பாதிக்க வல்லவை என அறிந்தே அதில் ஈடுபடும் தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும், நல்ல நினைவுடன், தேசத்திற்கும் காலத்திற்கும் தன் உடல்நிலைக்கும் ஏற்றவற்றை உணர்ந்து, நன்னடத்தையைத் தொடர்ந்து கையாள்வதொன்றே வழியாகும். இதை உங்கள் கணவர் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

சிறுவயது முதலே சுத்தமே சுகாதாரம் என்று உங்கள் வீட்டிலும் பள்ளியிலும் சொல்லிக் கொடுத்ததை ஆழமாக நீங்கள் மனதில் பதிய வைத்திருக்கக் கூடும். அது உங்கள் மனதில் அடம்பிடித்து அமர்ந்திருக்கிறது. நீங்கள் வளர்ந்து வந்த இந்த விதம், புகுந்த வீட்டிலும் எதிர்பார்த்திருக்கலாம். வேறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரும் அவர்கள் விஷயத்தில் சற்று அலட்சியம் கொண்டிருக்கலாம்.

அதுவே உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். உடல் வேகங்களை விட மன வேகங்கள் பொல்லாதவை. தக்க போக்கிடம் காட்டித்தானே அவை அடங்க வழி செய்வது நலம்.

எதிலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் சிறந்ததுதான். ஆனால் வீட்டில் மற்றவர்களிடமிருந்து அது கிடைக்காமல் போனால் அவர்களைக் கொதித்தெழுச் செய்யும் கொடுஞ் சொல், அளவிற்கு மீறிய வேகம் கொண்ட பேச்சு, அவர்களுடைய அசுத்தத்தையும் அப்பட்டமாகக் கூறுவது போன்றவற்றால் மற்றவர்களுக்கு உங்கள் மீது உள்ள அன்பு குறைந்து வெறுப்பாகப் பேசுவார்கள். இவற்றைத் தவிர்க்க நீங்கள் முயற்சி செய்வது நலம்.

மனதைச் சார்ந்த இந்த உபாதை மாற சில நல்ல ஆயுர்வேத மருந்துகள் உள்ளன. அவை உங்கள் கணவருக்கும் தேவைப்படலாம். அவருக்குத் தெரியாமலேயே இந்த மருந்தை உணவில் சேர்த்து ஆரோக்கியம் பெறலாம்.

மஹா கல்யாணகம் கிருதம் எனும் நெய் மருந்தை, சிறிய அளவில் கடுகு, ஓமம்,சீரகம் ஆகியவற்றுடன் தாளித்து தக்காளி ரசத்துடன் சேர்த்து, சூடான சாதத்துடன் சாப்பிட்டு வர மனம் தெளிவுறும். அமைதியுடன் கூடிய சாந்தமான மனநிலையை ஏற்படுத்தித் தரும். பதட்டமான செயல்பாடுகள் குறையும். உங்களுக்கும் இந்த மருந்து பயனளிக்கக் கூடும்.

வீட்டிலுள்ள தேங்காய் எண்ணெய்யில் சிறிது பிரம்மீ தைலத்தைக் கலந்து வைத்து, தலையில் தேய்த்து சுமார் அரை மணிநேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊறிக் குளிர்ந்த நீரில் தலைக்குக் குளித்து வர, தெளிவான சிந்தனையும், பேதலித்துப்போன  மனம் அமைதியுறவும் பயன்தரும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com