எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இது புதுசு: பொறுமையைக் கேட்டால் என்ன தருவாய்?

தாளில் உங்கள் நண்பரின் ஓவியம். அதைச் சுற்றிலும், ஓவியம் முழுவதிலுமே பொடிப் பொடியான எழுத்துக்களில் உங்கள் நண்பர் எங்கே பிறந்தார்? அவர் உங்களுக்கு எப்படி அறிமுகமானார்? எத்தனை வருடங்களாக உங்களிடையே நட்பு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:27 am

ரவிக்குமார்

தாளில் உங்கள் நண்பரின் ஓவியம். அதைச் சுற்றிலும், ஓவியம் முழுவதிலுமே பொடிப் பொடியான எழுத்துக்களில் உங்கள் நண்பர் எங்கே பிறந்தார்? அவர் உங்களுக்கு எப்படி அறிமுகமானார்? எத்தனை வருடங்களாக உங்களிடையே நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய நட்பில் மறக்கமுடியாத தருணங்கள், உங்களுக்காக அவரும் அவருக்காக நீங்களும் உருகிய நெகிழ்ச்சியான தருணங்கள்.... இப்படி அனைத்தும் எழுத்துக்களில் எழுதியிருக்கின்றன... அதைப் பெரிதாக்கிக் காட்டுவதற்கு ஒரு பூதக் கண்ணாடியையும் சேர்த்து அந்த ஓவியத்தை உங்களின் நண்பருக்குப் பரிசளித்தால்... அவர் அடையும் இன்ப அதிர்ச்சிக்கு அளவே இருக்காதுதானே! இந்த முறை ஓவியத்திற்குப் பெயர் ஐகோனொரைட்!

""எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஒருவர் பொருளாதார ரீதியாக நிலை நிறுத்திக் கொள்வதற்கு தன்னால் உதவமுடியும்'' என்கிறார் சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த ராபின்சன். "ஐகோனொரைட்' என்னும் ஓவிய முறையை கடந்த 2006-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி, அதை பள்ளி மாணவர்களிடையே பிரபலப்படுத்தி வரும் ராபின்சன் இந்த ஓவிய முறையின் தனித் தன்மையைக் குறித்து நம்மிடம் பேசியதிலிருந்து...

""புகைப்படம் ஓவியம் எதுவாக இருந்தாலும் அதில் இருக்கும் வெற்றிடங்களை எப்படிப் பயன்படுத்துவது? அதையும் பார்ப்பதற்குரியதாக ஆக்கினால்தானே, அந்தப் புகைப்படத்தைப் பார்ப்பதில் நூறு சதவீதப் பயன் நமக்குக் கிடைத்ததாக அர்த்தம்? ஒருவரின் புகைப்படத்தில் இருக்கும் வெற்றிடங்களை அவரைக் குறித்த விவரங்களைக் கொண்டே நிரப்பினால் எப்படி இருக்கும்... இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை நான் யோசித்த போது எனக்குக் கிடைத்த பதில்தான் இந்த ஐகோனொரைட்.

ஒரு பொருளை நாம் பார்ப்பது அந்தப் பொருளின் எல்லையிலிருந்து தொடங்கி, அந்தப் பொருளின் மையத்தில் முடிகிறது. அப்பொழுதுதான் அக்குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிய பொருளை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள இயலும்.

எல்லைக்குள் அடங்கியிருக்கும் ஒரு பொருளை அல்லது ஒருவரின் உருவத்தை நாம் புகைப்படம் எடுப்பது பாஸிட்டிவ். அந்தப் புகைப்படத்தின் எல்லைக்கு வெளியே இருக்கும் வெற்றிடத்தை எழுத்துக்களைக் கொண்டு நிரப்பினால் அதை நெகட்டிவ்வாகத் தோன்றும். இதைத் தவிர மூன்றாவதாக ஒரு பரிமாணத்தைக் கொடுப்பதுதான் ஐகோனொரைட். இந்த முறையில் புகைப்படத்திலிருப்பவரைப் பற்றிய செய்திகளை, புகைப்படத்தின் எல்லையின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் எழுதும்போது அந்தப் புகைப்படத்தின் பயன் முழுமையாகிறது.

இந்த ஐகோனொரைட் முறைக்கு இந்திய காப்புரிமையும் நான் பெற்றிருக்கிறேன். இந்தத் தலைமுறைக்கு எதற்கும் அர்த்தம் தெரிகிறது. ஆனால் பொறுமைக்கு அர்த்தம் தெரிவதில்லை. பொறுமையைக் கேட்டால் என்ன தருவாய்? என்றால், ஐகோனொரைட்டால் எழுதப்பட்ட ஓவியத்தைக் கொடுக்கலாம். இந்த ஐகோனொரைட் முறையை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் போது, ஹைப்பர் ஆக்டிவிடி பாதிப்பு இருக்கும் குழந்தைகள் கூட பொறுமையாக இந்த விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதைப் பார்த்தேன். கேந்திரிய வித்யாலயாவின் தென் பகுதிக்கான கல்வி அதிகாரியான எஸ்.விஜயகுமாரிடம் இந்த முறையைப் பற்றி விளக்கினேன். பொறுமையாக நான் சொல்வது முழுவதையும் கேட்ட அவர், ""எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் வகுப்புகள் பாதிக்காத அளவில் முறையான திட்டங்களை வகுத்துக் கொண்டு இந்த ஐகோனொரைட் பற்றிய பயிற்சி வகுப்புகளை நீங்கள் தாராளமாக எடுங்கள்...'' என்று அனுமதி கொடுத்திருக்கிறார். இப்போதைக்கு சென்னையில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இந்தப் பயிற்சி முறையை அறிமுகப்படுத்தி வருகிறேன்.

ஐகோனொரைட் முறையில் ஆப்பிள் பழத்தின் எல்லையை ஒரு பக்கத்தில் வரைந்து அந்த எல்லைக்குள் நேர்க்கோட்டில், ஆப்பிள் என்ற சொல்லை,சிவப்பு நிறப் பென்சிலைக் கொண்டு குழந்தையை எழுதச் சொல்லலாம். இப்போது அந்தக் குழந்தைக்கு ஆப்பிள் என்ற சொல் பழக்கமாவதுடன், ஆப்பிள் என்ற பழத்தின் உருவத்தை வரைவதையும் அந்தக் குழந்தை கற்றுக் கொள்ளும். இன்னும் வயதான மாணவனாக இருந்தால் அவனுக்கு உதவும் வகையில் ஆப்பிளைக் குறித்த பலவிதமான தகவல்களையும் கூட அந்தப் பக்கத்தில் எழுதலாம்.

ஒவ்வொருவரின் வீட்டுச் சரித்திரத்தையும் நமது மூதாதையர்களின் படத்தைக் கொண்டு இத்தகைய ஐகோனொரைட் முறையில் எழுதிவைக்கலாம். நம்முடைய வருங்காலச் சந்ததியினர்களுக்கு நமது முந்தைய சந்ததியினரைப் பற்றிய ஒரு ஆவணத்தை நாமே உண்டாக்கி வைக்கலாம். ஒவ்வொருவரின் வீட்டுச் சரித்திரமும் எழுதப்படவேண்டிய ஒன்று. அதை அந்தந்த வீட்டிலிருப்பவர்களே எழுதலாம். புகைப்படத்திலிருப்பவரை பார்க்கும் அதேநேரத்தில் அவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் வழிசெய்வதுதான் ஐகோனொரைட்டின் நோக்கம்.

ஐகோனொரைட் பாணி ஓவியங்களை எந்த மொழி தெரிந்தவர்களும் அவர்களுடைய மொழியில் கொண்டுவரலாம். நான், இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின், தோனி, சேவாக் ஆகியோரின் ஓவியங்களை ஐகோனொரைட் பாணியில் வரைந்து அனுப்பியிருக்கிறேன். எதிர்காலத்தில் இந்த வகையான ஐகோனொரைட் புத்தகங்கள் நூலகங்களை அலங்கரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.