எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சேவை: திறமைகளின் களஞ்சியம்!

படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் திடீரென்று தங்களின் படிப்பை நிறுத்திவிடுவது நகர்ப்புறங்களைவிட கிராமங்களில் தான் அதிகம். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதன்மையான காரணம் ஊருக்கு வெகு தொலைவில் இர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:08 am

ரவிக்குமார்

படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் திடீரென்று தங்களின் படிப்பை நிறுத்திவிடுவது நகர்ப்புறங்களைவிட கிராமங்களில் தான் அதிகம். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதன்மையான காரணம் ஊருக்கு வெகு தொலைவில் இருக்கும் பள்ளிகள். நாற்கர சாலைகள் பெருகிவிட்டாலும், குக்கிராமங்களிலிருந்து பள்ளிக்குச் செல்லும் பேருந்து போன்ற எந்த வாகன வசதியும் இல்லாததாலேயே படிப்பதற்கு முழுக்கு போடும் குழந்தைகள் ஏராளம். இந்த நிலையை மாற்றும் வகையில் 5 கி.மீட்டர் தொலைவிலிருக்கும் குக்கிராமங்களிலிருந்து குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கும், படித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவதற்கும் இலவசமாக இரண்டு வேன்களை ஓட்டுகின்றது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்!

கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி கற்கும் திறனையும், அவர்களின் உடல் நலனைக் காக்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடன் கடந்த 2006-ல் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்திற்கு அருகிலிருக்கும் கல்பட் கிராமத்தில் செயல்பட்டு வருகின்றது களஞ்சியம் தன்னார்வத் தொண்டு நிறுவனம். அதன் இயக்குநர் முனுசாமி ரவிராஜிடமும், நிர்வாக அறங்காவலர் அனு லஷ்மியிடமும் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து நாம் பேசியதிலிருந்து...

""மதுராந்தகத்தைச் சுற்றியிருக்கும் இருபது கிராமங்களிலிருக்கும் பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி, சுகாதாரத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் களஞ்சியத்தைத் தொடங்கினோம். இதற்காக அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களையே கொண்ட கிராமக் குழுக்களை ஆரம்பித்தோம். இந்த சமயத்தில்தான் கிராமங்களில் செயல்பட்டு வந்த ஓர் ஆசிரியரைக் கொண்ட பள்ளிகளை அரசு மூடும் நிலை பரவலாக எழுந்தது. இதற்காக அந்தந்த கிராமத்திலேயே இருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்கும் ஆண்களையும் பெண்களையும் ஓர் ஆசிரியரை மட்டுமே கொண்டு செயல்படும் பள்ளிகளுக்கு உதவியாளர்களாக்கினோம். அவர்கள் குழந்தைகளின் கல்வி கற்கும் திறனையும் சிறு வயதில் கடைபிடிக்கவேண்டிய நல்ல பழக்கவழக்கங்களையும், ஒழுக்கத்தையும், சுற்றுப்புர சுகாதாரத்தின் அவசியத்தையும் உணர்த்தத் தொடங்கினர். கழிப்பிட வசதி இல்லாத இரண்டு பள்ளிகளுக்கு கழிப்பிட வசதிகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். இரண்டு மஹிந்திரா வேன்களைக் கொண்டு குக்கிராமங்களிலிருக்கும் குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்து வந்து மீண்டும் மாலையில் அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் சேவையை இலவசமாகச் செய்துவருகிறோம். நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடுதான் இத்தகைய காரியங்களை எங்களால்  செய்யமுடிகின்றது'' என்றார் அறக்கட்டளையின் இயக்குநர் முனுசாமி ரவிராஜ்.

அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசினார் களஞ்சியத்தின் நிர்வாக அறங்காவலரான அனு லஷ்மி.

""கல்வி, ஒழுக்கம் இவற்றோடு நமது பாரம்பரியக் கலைகளைக் காப்பாற்றும் பொறுப்பை மாணவர்களிடம் உருவாக்கும் வகையில் பாரம்பரியக் குழுக்களை பள்ளிகளில் அமைக்கும் பணியையும் களஞ்சியம் செய்து வருகின்றது. கிராமத்தின் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் நகரத்தின் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் பாலமாக, இந்த பாரம்பரியக் குழுக்கள் இருக்கவேண்டும் என்பதுதான் நோக்கம். இந்த அடிப்படையில், பெரிய வெள்ளிக்காடு நடுநிலைப்பள்ளியிலும், ஜமீன் எண்டாத்தூர் உயர்நிலைப் பள்ளியிலும் முறையே "கிராமியா', "சங்கமா' என்னும் பெயரில் பாரம்பரியக் குழுக்களை கடந்த ஆண்டு தொடங்கினோம். அந்த இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 80 மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் சென்னை, நுங்கம்பாக்கத்திலிருக்கும் அலையன்ஸ் ஃபிரான்கைஸ் அரங்கத்தில் நடந்தது.

கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் போன்ற கிராமியக் கலைகளில் புகழ்பெற்ற மணிகண்டன் என்பவரிடம் முறையாகப் பயின்றிருக்கின்றனர் இப்பள்ளி மாணவர்கள். கர்நாடக இசையையும் முறையாகப் பயின்றிருக்கும் இப்பள்ளி மாணவர்கள், கர்நாடக இசைப் பாடல்களையும் பாடினர்.

இத்தகைய கலாசார நிகழ்ச்சிகளை ஏற்படுத்துவதின் மூலம் குக்கிராமத்தின் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் அவர்களுக்கு முறையான பயிற்சிகளையும் வாய்ப்புகளையும் உண்டாக்கி தந்தால் அவர்களும் நகரத்தில் படிக்கும் மாணவர்களைப் போன்று தங்களின் திறமையை வெளிப்படுத்தமுடியும் என்பதை நிரூபித்தனர். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் அரசு சார்ந்த விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் இத்தகைய பாரம்பரியக் குழுக்களின் நிகழ்ச்சிகளுக்கு அரசு ஏற்பாடு செய்யவேண்டும் அப்போதுதான் அவர்களின் கலை வளரும். எங்களின் அமைப்பும் திறமையான மாணவர்களின் களஞ்சியமாக விளங்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.