பதிவுகள்: கவி சொல்லும் கல்வெட்டு!
மனிதர்கள் வாழும் காலம் மிகக் குறுகியது. ஆனால், தான் வாழ்ந்ததைப் பதிவு செய்துவிட்டுப் போகவே எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். ராஜராஜ சோழனாகட்டும், இன்றைய அமைச்சர்களாகட்டும் தங்களுடைய பெயர் கல்வெட்டில் பொறிக


மனிதர்கள் வாழும் காலம் மிகக் குறுகியது. ஆனால், தான் வாழ்ந்ததைப் பதிவு செய்துவிட்டுப் போகவே எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். ராஜராஜ சோழனாகட்டும், இன்றைய அமைச்சர்களாகட்டும் தங்களுடைய பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். கல்வெட்டில் பொறித்த செய்திகள், பெயர்கள் காலங்காலமாக நீடித்திருக்கும் என்றும் நம்புகிறார்கள். இருத்தலை மட்டும் அல்ல, மரணத்தையும் கூட கல்லறையில் உள்ள கல்வெட்டுகளில் பதிக்கிறார்கள்.
1910 ஆம் ஆண்டுக்கு முன்பு சென்னையில் வி.கே. அண்ட் சன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், ஆரம்பத்தில் கல்லறைகளில் கல்வெட்டுகளைப் பதிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருந்தது. அதை ஆரம்பித்த வி.கே.நரசிம்மனும், அவருடைய சகோதரரும் அதற்கு முன்பு கல்தச்சர்களாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
வி.கே.நரசிம்மன் 1948-இல் காலமானதை அடுத்து அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முன் வந்தார் அவருடைய மகன் வ.ந.புருஷோத்தமன். அப்போது அவருக்கு வயது 19. இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தை அவர் நடத்தத் துவங்கியபோது கல்லறைக்கான கல்வெட்டுகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், பாதை மாறி பயணிக்க நினைத்தார்.
""அப்படி நான் நினைத்துக் கொண்டு இருந்த போது திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மட அதிபர் காசிவாசி அருள்நந்தி தம்பிரான் சுவாமிகள் என்னை அழைத்து முதன்முதலில் கோயில்களில் கல்வெட்டுகளை அமைக்கச் சொன்னார். ஓதுவார்கள் கோயிலில் பாடும் தேவாரத்தை கல்லில் பதிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்குத் தமிழில் அவ்வளவு புலமை இல்லை. தேவாரத்தைக் கல்லில் பதிக்கும்போது தவறு நேர்ந்துவிடக் கூடாதே என்று கவலைப்பட்டேன். அப்போது எனக்குக் கைகொடுத்தவர் தமிழ்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் பேரன் சுப்பிரமணிய அய்யர். அவர் நான் கல்லில் செதுக்குவதற்காக எழுதி வைத்திருக்கும் தேவாரத்தைப் பார்த்து, பிழைகளைத் திருத்திக் கொடுத்தார்.
அவருடைய துணையுடன் நாங்கள் கல்லில் பக்தி இலக்கியங்களைப் பதிக்கும் வேலையை ஆரம்பித்தோம்'' என்கிறார் புருஷோத்தமன். அவருக்கு இப்போது வயது 82.
எந்த எந்தக் கோயில்களில் தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களைக் கல்லில் பதிய வைத்தீர்கள்? என்று கேட்டோம்.
""தமிழ்நாட்டின் முக்கியமான எல்லாக் கோயில்களிலும் எங்களுடைய கல்வெட்டுகள் இருக்கின்றன. ஒன்றிரண்டை மட்டும் சொல்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொற்றாமரைக் குளத்துக்குப் பக்கத்தில் உள்ள சுவரில் 1956 ஆம் ஆண்டு திருக்குறளைக் கல்லில் பதித்தோம். கும்பகோணத்தில் உள்ள கோயில்களில் திருப்பாவையையும், திருவெம்பாவையையும் பதித்தோம். சிதம்பரம் நடராஜர் கோயில் குளக்கரைக்கருகில் மாணிக்கவாசகரின் திருவாசகம் முழுவதையும் கல்லில் பதிய வைத்தோம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் திருப்பாவை, விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியவற்றைக் கல்லில் பதித்தோம். மயிலாப்பூர் கற்பகாம்பாள் சன்னதி பின்புறத்தில் அபிராமி அந்தாதியைப் பதித்து வைத்தோம். திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் சாலையில் உள்ள ராமச்சந்திர சுவாமிகள் கோயிலில் பாம்பன் சுவாமிகள் பாடல்களைப் பதித்தோம். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் சன்னதி மகாமண்டபத்தில் மார்பிளில் பக்தி இலக்கியங்களைப் பதித்து வைத்தோம். பழனி தண்டாயுதபாணி கோயிலில் மலை மேல் சலவைக் கல்லில் அருணகிரிநாதரின் திருப்புகழ் உட்பட பல பக்தி இலக்கியங்களைப் பதித்து வைத்தோம். கும்பகோணம் சாரங்கபாணி கோயிலிலும் பக்தி இலக்கியங்களைப் பதித்தோம். சென்னையில் திருவேற்காடு, மாங்காடு, மயிலாப்பூர், பார்க்டவுன் கந்தசாமி கோயில் என நிறையக் கோயில்களில் எங்களுடைய கல்வெட்டுகள் இருக்கின்றன'' என்கிறார் பெருமிதத்துடன்.
தமிழ்நாட்டைத் தவிர பிற இடங்களில் உள்ள கோயில்களில் பக்தி இலக்கியங்களைக் கல்வெட்டுகளில் பதித்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ""இமயமலையில் ரிஷிகேசத்திலிருந்து 250 கி.மீ. தூரத்தில் உள்ள கேதார்நாத்தில் 1990- ஆம் ஆண்டு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் அங்கே தேவாரத்தைப் பதித்து வைத்தோம். இதற்காக நான் கேதார்நாத் போய் வந்தேன். கேதார்நாத் 12 ஜோதிர்லிங்கத்தில் ஒன்று. அதற்காக என்னைப் பாராட்டி பொன்னாடை எல்லாம் போர்த்தினார்கள். அதுமட்டுமல்ல, மலேசியாவில் தைப்பிங்கில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோவிலில் அபிராமி அந்தாதியைக் கல்வெட்டில் பதிய வைத்தோம் '' என்கிறார் நினைவுகள் மலர்ந்த மகிழ்ச்சியோடு.
புருஷோத்தமனின் மகன் அருள்நந்தி தனது தந்தைக்குத் துணையாக இந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
கோயிலில் கல்வெட்டுகளைப் பதிப்பது தவிர வேறு என்ன செய்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டோம்.
""கோயில் கல்வெட்டுகளைச் செய்யும் அந்த நேரத்திலும் கூட நாங்கள் அரசாங்கத்துக்காகவும், தனியாருக்காகவும் நிறையக் கல்வெட்டுகளைச் செய்து தந்திருக்கிறோம். ஒரு கட்டடத்தின் அடிக்கல் நாட்டுவிழாவாகட்டும், திறப்பு விழாவாகட்டும் உடனே எங்களுக்கு ஆர்டர் வந்துவிடும். அண்ணாசதுக்கத்தில் உள்ள கல்வெட்டு எங்களுடைய உருவாக்கம்தான். சென்னையில் உள்ள அண்ணாசிலைக்குக் கீழ் உள்ள எழுத்தைப் பொறிக்கச் சொல்லி எம்.ஜி.ஆர். எங்களை வரச் சொல்லி, நேரடியாக உத்தரவிட்டார்'' என்கிறார் பெருமையுடன்.
""ஒருவர் ஆசை ஆசையாக வீடு கட்டுவார். அந்த வீட்டின் முன்புறம் வீட்டின் பெயரைக் கல்வெட்டில் பொறித்து பதிக்க நினைப்பார். அவர் உடனே எங்களை அணுகி கல்வெட்டைச் செய்து கொண்டு போவார்.'' என்ற அருள்நந்தியிடம்,
நுட்பமான இந்தத் தொழிலை எல்லாரும் செய்ய முடியாது. அதனால் உங்களுக்கு ஆர்டர்கள் நிறைய இருக்குமே? என்று கேள்விக்கணையைத் தொடுத்தோம்.
"" அப்படியில்லை... எங்களிடம் வேலை கற்றுக் கொண்டவர்கள் தமிழ்நாடு முழுக்க இத்தொழிலைச் செய்து வருகிறார்கள். எனவே கல்வெட்டு தேவையுள்ளவர்கள் அந்தந்தப் பகுதியில் செய்து கொள்கிறார்கள்'' என்கிறார் அவர்.
""இப்போது மார்பிள், கிரானைட் போன்றவற்றைச் செய்வதில் நிறையப் புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். கல்வெட்டுகளைச் செய்வதிலும் கூட இயந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் எங்களுடைய கல்வெட்டுகளின் தரத்திற்கும், பிறரின் கல்வெட்டுகளின் தரத்திற்கும் நிறைய வேறுபாடுகளைப் பார்க்க முடியும். அதனால்தான் நிறைய வாடிக்கையாளர்கள் எங்களிடம் மட்டுமே எப்போதும் கல்வெட்டுகளைச் செய்யும்படி கூறுகிறார்கள். நாங்கள் சென்னை கபாலி கோயிலில் சலவைக்கல்லில் எழுத்துகளை முதலில் செதுக்கிவிட்டு எழுத்தில் துளை போட்டு அதைக் காரீயத்தை வைத்து மேடாக்கினோம். பின்னர் கிரைண்டிங் மிஷின் மூலமாக காரீயம் இருந்த இடத்தைச் சமனாக்கினோம். இப்படி எந்த வேலை செய்தாலும் அதை கவனத்துடன் செய்கிறோம்'' என்கிறார் அருள்நந்தி தொடர்ந்து.
முன்பைப் போல கல்லறைக்காக கல்வெட்டுகளைச் செய்யச் சொல்லி ஆர்டர்கள் வருகின்றனவா? என்று கேட்டதற்கு, ""இப்போது கல்லறை வேலைகள் அதிகம் வருவதில்லை. ஏனென்றால் புதைக்கும் இடம் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே பல இடங்களில் கல்லறை கட்ட அனுமதிப்பதில்லை. எனவே கல்லறை வேலைகள் இப்போது குறைவுதான்'' என்கிறார் புருஷோத்தமன்.
நீங்கள் கல்வெட்டுகளைச் செய்வதற்கு அதிகக் கட்டணம் வாங்குவீர்களா? என்று கேட்டோம் சீரியஸôக.
""எங்களிடம் கோயில் கல்வெட்டுகளை முதன்முதலில் செய்யச் சொன்ன திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மட அதிபர் காசிவாசி அருள்நந்தி தம்பிரான் சுவாமிகள் அடிக்கடி எங்களிடம், நீ செய்கிற வேலை சிவன் வேலை. அதற்கு அதிகக் காசு வாங்கக் கூடாது. சிவன் சொத்து குல நாசம் என்பது உனக்குத் தெரியாதது அல்ல என்று அடிக்கடி எச்சரிப்பார். அதனால் நாங்கள் இதுவரை அதிகக் காசு எங்கேயும் வாங்கியதுமில்லை. இனிமேல் வாங்கப் போவதுமில்லை'' என்கிறார் புருஷோத்தமன் உறுதியாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...