கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உணர்வு: தமிழால் ஒன்றுபடுகிறோம்!

""தமிழில் பேசுவதற்கே கூட முடியாமல் இப்போதுள்ள குழந்தைகள் விழிக்கிறார்கள். அவர்கள் தமிழில் நன்கு பேசுவதற்குப் பயிற்சியளிக்கும்விதமாக பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். திருக்குறளை மனப்பாடம் ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:37 am

ந. ஜீவா

""தமிழில் பேசுவதற்கே கூட முடியாமல் இப்போதுள்ள குழந்தைகள் விழிக்கிறார்கள். அவர்கள் தமிழில் நன்கு பேசுவதற்குப் பயிற்சியளிக்கும்விதமாக பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் குழந்தைகளுக்குப் பரிசுகள் தருகிறோம். இலக்கண வகுப்புகளை நடத்துகிறோம்'' என்கிறார் பாலகன் ஆறுமுகசாமி. தமிழ்நாட்டில் எந்த ஊரில் பயிற்சி தருகிறார்கள் என்று கேட்கிறீர்களா? நீங்கள் கேட்பதும் நியாயம்தான். தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் குழந்தைகளின் நிலையும் தமிழில் பயிற்சி பெற வேண்டிய நிலையில்தானே இருக்கிறது? ஆனால் தமிழ்ப் பயிற்சிகள் அளிக்கப்படுவது இங்கல்ல. அமெரிக்காவில். அங்குள்ள வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாலகன் ஆறுமுகசாமி அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார்.

""நான் 1988-ஆம் ஆண்டுதான் அமெரிக்காவுக்குப் போனேன். அதற்கு முன்பு சென்ட்ரல் பேங்கில் 18 ஆண்டுகளாக வேலை செய்தேன். இப்போது அமெரிக்காவில் ஆடிட்டராக வேலை செய்கிறேன். அது தவிர, மேரிலாண்ட், வெர்ஜினியா, சென்னை ஆகிய இடங்களில் எனக்கு அலுவலகங்கள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள கணக்கு வேலைகளைச் சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்தில் செய்து கொடுக்கிறோம். இங்கிருக்கும் வரை பெரிய அளவுக்குத் தமிழ்ப் பற்றோ, ஆர்வமோ எனக்கிருந்ததில்லை. ஆனால் பல்லாயிரம் மைல்கள் கடந்து வெளிநாட்டுக்குப் போன பின்பு, தாய்மொழி மீதும், தாய் மண்ணின் மீதும் பற்று அதிகமாகிவிட்டது. நான் மட்டுமல்ல, என்னைப் போன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எல்லாரும் என்னைப் போலத்தான் பற்றுடன் இருக்கிறார்கள். சாதி,மதம் இவற்றிற்கு அப்பாற்பட்டு தமிழால் ஒன்று படுகிறோம். அதன் விளைவாகத் தோன்றியவைதான் அமெரிக்காவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள். நான் வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராக இருக்கிறேன்'' என்கிறார் சிரிப்புடன்.

அமெரிக்காவில் சுமார் எவ்வளவு தமிழ்ச்சங்கங்கள் இருக்கின்றன? என்று கேட்டோம்.

""வட அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு தமிழ்ச் சங்கம் இருக்கிறது. இப்போது 28 தமிழ்ச் சங்கங்கள் இணைந்து "வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை' ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு டாக்டர் பழனிசுந்தரம் தலைவராக இருக்கிறார்'' என்கிறார். தொடர்ந்து, "" நாங்கள் தமிழ்ச் சங்கங்களின் மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தில் ஏப்ரல் மாதத்தில் சித்திரை விழா, ஜூலையில் முத்தமிழ் விழா, நவம்பரில் சிறுவர் விழா, ஜனவரியில் பொங்கல் விழா போன்றவற்றைச் சிறப்பாக நடத்துகிறோம். இது தவிர சிறு சிறு கூட்டங்களையும் நடத்துகிறோம். இந்த விழாக்களில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழில் பயிற்சி அளிக்கும்விதமாக நிகழ்ச்சிகளை வடிவமைத்திருக்கிறோம். பட்டிமன்றம், திருக்குறள் ஒப்பிக்கும்போட்டி, சங்க இலக்கியங்களைப் பற்றிய வினா - விடை நிகழ்ச்சி, சங்கப் பாடல்களை இசையமைத்துப் பாடும் நிகழ்ச்சி போன்றவற்றை நடத்துகிறோம். இதன் மூலம் நாங்கள் தமிழ்நாட்டில் இல்லாத குறையை நிவர்த்தி செய்து கொள்கிறோம்'' என்கிறார் பெருமையுடன்.

வெறும் மொழிப் பயிற்சி மட்டும் போதுமா? என்று கேட்டோம்.

""குழந்தைகளுக்கு மொழிப் பயிற்சி தருகிறோம். அமெரிக்காவில் வாழும் தமிழ்க் குடும்பங்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வுகளையும் நடத்துகிறோம். அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு மணப்பெண், மணமகன் தேடுவது ஒரு சிரமமான வேலை. அங்கு வாழ்பவர்கள், அமெரிக்கக் குடிமகனாகிவிட்டவர்கள் தாய்நாட்டிற்கு வந்து பெண், மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்வது சிரமம். எனவே அங்கே திருமண ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறோம். இதன் மூலம் மணப்பெண், மணமகன் தேடும் வேலை எளிதாகிவிடுகிறது'' என்கிறார்.

குழந்தைகளுக்குத் தமிழ்நாட்டின் பண்பாட்டைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அங்கே எப்படியிருக்கிறது? என்று கேட்டதற்கு, "" அதற்குத்தான் நாங்கள் அங்குள்ள குழந்தைகளுக்குப் பாட்டுப் போட்டி நடத்துகிறோம். பரதநாட்டியம் கற்றுத் தருகிறோம். பரதநாட்டியப் போட்டி நடத்துகிறோம். வாசிங்டனில் ராணி டேவிட் என்பவர் நாட்டியப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்'' என்றார்.

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையை எதற்காக ஏற்படுத்தியிருக்கிறீர்கள்? என்று கேட்டோம்.

""அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க இந்தக் கூட்டமைப்பு அவசியம். இந்தக் கூட்டமைப்பின் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆண்டுவிழாவைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 3 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டு விழாவில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் கலந்து கொள்கிறார்கள். வரக்கூடிய ஆண்டு விழாவுக்கு ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ஆண்டு விழாவில் 5 ஆயிரம் தமிழர்களைக் கலந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறோம். இந்த ஆண்டு விழாக்களில் தமிழ்நாட்டில் இருந்து சிறந்த தமிழறிஞர்களை, கவிஞர்களை, கலைஞர்களை அழைத்துச் சிறப்பு செய்கிறோம். தமிழ்ப் புத்தகங்களின் கண்காட்சியையும் நடத்துகிறோம். 20 அரங்குகள் அந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து வந்து பதிப்பகங்கள் அங்கே புத்தகக் கண்காட்சிகள் நடத்துகிறார்கள். 2012 இல் தமிழ்ச் சங்கங்களின் பேரவையின் வெள்ளி விழா வருகிறது. அப்போது பல சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்த நினைத்திருக்கிறோம்'' என்கிறார்.

என்ன திட்டங்கள்? என்றோம் ஆர்வமாக.

"" தலைநகர் வாஷிங்டனில் உலகத் தமிழ் மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அந்த மையத்தில் இயல், இசை, நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு எங்களால் ஆன எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அளவுக்கு அமெரிக்காவில் உள்ள தமிழ் மாணவர்களும் தமிழ் இலக்கணம், இலக்கியங்களில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அந்த மையத்தில்

பல்வேறு மாகாணங்களில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு கோடை விடுமுறையின்போது பயிற்சி தரும் திட்டமும் உள்ளது. இப்போது பல்வேறு நாடுகளில் அமெரிக்கத் தூதுவரகங்கள் உள்ளன. இந்தத் தூதுவரகங்களில் வேலை செய்பவர்களுக்கு எந்த நாட்டில் வேலை செய்கிறார்களோ அந்த நாட்டின் மொழி தெரிய வேண்டிய அவசியம் உள்ளது. தமிழ்நாட்டில் வேலை செய்யக் கூடியவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி கொடுக்க வேண்டியது அவசியம். அதுபோல தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களுக்குத் தேவை. அப்போது அதற்கான தகுதி வாய்ந்த நபர்களைத் தேடி எங்களிடம்தான் வருகிறார்கள். அவர்களுக்கு எங்களுடைய தமிழ் மையம் மூலமாக உதவும் திட்டமும் உள்ளது.

அமெரிக்காவில் வாழும் தமிழ்க் குடும்பங்களில் உள்ள முதியவர்கள் பல நேரங்களில் தனியாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. ஏனென்றால் அவர்களுடைய பிள்ளைகள் வேலை காரணமாக அதிகத் தொலைவு உள்ள இடங்களில் வாழ நேரிடுகிறது. மேலும் அங்குள்ள அபார்ட்மென்ட்டில் 3 பேருக்கு மேல் வாழக் கூடாது. இதனாலும் தனியாக வாழ நேரிடுகிறது. அவர்களுக்கான முதியோர் இல்லத்தைத் தமிழ் மையத்தில் அமைக்க  இருக்கிறோம்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் தமிழர்கள் தங்குவதற்கான அறைகளையும் கட்டப் போகிறோம். கம்யூனிட்டி ஹால், திருமண மண்டபம் என அங்கு வாழும் தமிழர்களுக்காக நிறையத் திட்டங்களை வைத்திருக்கிறோம்'' என்கிறார் ஏக்கத்துடன்.

தமிழ்ச் சங்கங்களாகட்டும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையாகட்டும் அவை நடத்தும் நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? என்று கேட்டோம்.

""தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகும் ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தா தர வேண்டும். ஆனால் அது போதுமானதில்லை. எனவே தமிழ்நாட்டில் உள்ளவர்களின் நிதியுதவியைப் பெற்றே நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இங்குள்ள தொழில் அதிபர்கள் நன்கு உதவுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள வங்காளி, தெலுங்கு அமைப்புகளுக்கு முறையே இந்தியாவில் உள்ள மே.வங்கம், ஆந்திரா போன்ற மாநில அரசுகள் உதவுகின்றன. அதுபோல தமிழக அரசும் எங்களுக்கு உதவ வேண்டும். கட்டடங்கள் கட்ட, நூலகம் அமைக்க, தமிழ் கற்றுக் கொடுக்க நிதி உதவி உட்பட பலவிதங்களிலும் தமிழக அரசு உதவ முடியும்'' என்கிறார் நம்பிக்கையுடன்.

தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்காகச் செயல்படுவது, விழாக்கள் நடத்துவது மட்டும் போதுமா? தமிழ் மக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும் போது அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் எப்படிச் செயல்படுகின்றன? என்று கேட்டோம்.

"" இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு முள் வேலிக்குள் அடைக்கப்பட்ட கொடூரத்தைக் கண்டிக்கும் வகையில் இலங்கையில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் பொருட்களை வணிகர்களே விற்காதீர்கள்; அமெரிக்க மக்களே அந்தப் பொருட்களை வாங்காதீர்கள்; புறக்கணியுங்கள் என்று கேட்டுக் கொள்ளும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டங்களை, அறவழிப் போராட்டங்களை எங்களுடைய தமிழ்ச் சங்கங்களின் சார்பாக நடத்தியிருக்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவியிருக்கிறோம்'' என்கிறார் பெருமையாக பாலகன் ஆறுமுகசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.