எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

முன்னேற்றம்: வெல்டிங் வேலை செய்யும் பெண் தொழில் முனைவோர்!

சொந்தத் தொழிலா? வேண்டவே வேண்டாம். எதற்குத் தேவையில்லாத ரிஸ்க்? எங்கேயாவது வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பதே நல்லது என்று ஆண்களே ஒதுங்கிப் போகும் காலம் இது. ஆனால் திருச்சியில் பெண்கள் சொந்தத் தொழில்கள் செ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:52 am

ந. ஜீவா

சொந்தத் தொழிலா? வேண்டவே வேண்டாம். எதற்குத் தேவையில்லாத ரிஸ்க்? எங்கேயாவது வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பதே நல்லது என்று ஆண்களே ஒதுங்கிப் போகும் காலம் இது. ஆனால் திருச்சியில் பெண்கள் சொந்தத் தொழில்கள் செய்கிறார்கள். பாக்கு மட்டை செய்வது, ஆயத்த ஆடைகள் செய்வது, ஊறுகாய் செய்வது, சானிட்டரி நாப்கின் செய்வது போன்ற தொழில்களை மட்டுமல்ல, ஆண்கள் போல வெல்டிங் பட்டறைகள் கூட வைத்திருக்கிறார்கள். பெண்கள் இந்த அளவுக்குத் துணிந்து தொழில்முனைவோர்களாக உருமாறியிருப்பதற்குத் தூண்டுகோலாக இருப்பவர் மணிமேகலை. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் மகளிர் இயல் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணிபுரியும் மணிமேகலையின் இன்னொரு அவதாரம்: தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தின் இயக்குநர், தலைவராக இருப்பது. இந்தச் சங்கத்தின் மூலம் நிறைய பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க பல்வேறு பணிகளை அயர்வில்லாமல் செய்துவரும் அவரிடம் பேசினோம்.

 ""எனது சொந்த ஊர் சேலத்திற்கு அருகில் உள்ள எடப்பாடி. சிசுக்கொலைக்குப் பெயர் பெற்ற ஊர். என் வீட்டில் இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்த என்னை நல்லவேளை, சிசுக் கொலை செய்யாமல் விட்டுவிட்டார்கள். தப்பிப் பிழைத்த நான், ஒவ்வொரு முறையும் என் படிப்பை நிறுத்த வேண்டும் என்று வீட்டில் சொல்லும்போது அதை எதிர்த்துப் போராடிப் போராடி படித்து பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியர் ஆனேன். 1998-இல் பெண் தொழில் முனைவோர் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். குறிப்பாக குறுந்தொழில்களில் பெண் தொழில்முனைவோர் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை அறியவே அந்த ஆராய்ச்சி. ஆராய்ச்சியில் இறங்கியவுடன் பெண் தொழில் முனைவோர்களைப் பற்றிய சிறு தகவலும் கூடக் கிடைக்காமல் திகைத்து நின்றுவிட்டேன். அதற்குப் பின்பு ஒவ்வொரு படியாக ஏறி இறங்கி ஆய்வு செய்து திருச்சியில் மட்டும் 550 பெண் தொழில்முனைவோர் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அவர்களில் 150 பேரை மட்டும் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து முடித்தேன். ஆய்வின் முடிவில் பெண் தொழில்முனைவோர் பற்றிய உண்மைகள் பல தெரிய ஆரம்பித்தன. குறைந்தது ரூ.5 ஆயிரம் முதலீட்டோடுதான் பெண்கள் தொழில் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதையும், அதையும் அவர்கள் வட்டிக்கு வாங்கித்தான் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. பெண்கள் சம்பந்தப்பட்ட ஊறுகாய் தயாரித்தல், மசாலாப் பொடிகள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்ற தொழில்களையே அவர்கள் செய்து வந்தது தெரிய வந்தது. என் ஆராய்ச்சி வெறும் ஆராய்ச்சிக்காக அல்ல, அதில் கண்ட முடிவுகளின் அடிப்படையில் நிறையச் செயல்களைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன் '' என்கிறார் மணிமேகலை பெருமிதத்துடன்.

 மகளிர் தொழில்முனைவோர் சங்கம் எப்படி ஆரம்பித்தீர்கள்? என்று கேட்டோம். ""பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் மகளிர் இயல் துறை ஆரம்பிக்க பல்கலைக் கழக மானியக் குழுவின் அனுமதி கிடைத்தது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தை 2006-இல் மார்ச்-8 இல் ஆரம்பித்தோம். மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள உறுப்பினர்களை வைத்து ஆரம்பித்தோம். ஆனால் 2006-ஆம் ஆண்டு இறுதிக்குள்ளேயே 100 பேர் உறுப்பினராகிவிட்டார்கள்'' என்ற மணிமேகலையிடம்,

 பெண்கள் தொழில்கள் தொடங்கி நடத்த, நீங்கள் எந்தெந்தவிதங்களில் உதவுகிறீர்கள்? என்று கேட்டோம்.

 ""முதலில் மகளிர் தொழில்முனைவோர் சங்கம் ஆரம்பித்தவுடன் ஆயத்த ஆடைகள் செய்ய 25 தொழிற்கூடங்களை முதலில் ஆரம்பிக்க உதவி செய்தோம். பெண்களுக்கு வங்கிக் கடன் கிடைக்க ஏற்பாடு செய்தோம். அதன் பின்பு பாக்கு மட்டைத் தயாரிப்பு, சணல் தொழில்கள் போன்ற தொழில்களைச் செய்ய பயிற்சிகள் தந்தோம். உதவிகள் செய்தோம். அழகுக் கலைப் பயிற்சியும் பெண்களுக்கு அளித்தோம். ஆனால் இவற்றால் எல்லாம் நாங்கள் திருப்தியடையவில்லை. பெண்கள் இம்மாதிரியான தொழில்களை மட்டும் ஏன் செய்ய வேண்டும்? ஆண்கள் செய்வதைப் போல இன்ஜினியரிங் தொழில்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். பிஎச்இஎல் நிறுவனம் நிறைய வேலைகளை வெளியே கொடுத்துச் செய்து வருகிறது. அவர்களிடம் பேசி வெல்டிங் வேலைகளுக்கான சப் காண்ட்ராக்ட் எடுத்தோம். இப்போது 32 வெல்டிங் யூனிட்கள் இயங்குகின்றன. இந்த யூனிட்களை நடத்தும் பெண்களுக்கு வெல்டிங் பயிற்சி அளித்தோம். உள்ளூர் பட்டறைகளிலும் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். வங்கிக் கடன் வசதி கிடைக்கச் செய்தோம். இப்போது மிகச் சிறப்பாக அந்த வெல்டிங் யூனிட்கள் செயல்படுவதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.'' என்கிறார் சிரிப்புடன்.

 வங்கிக் கடன்கள் வாங்கித் தொழில் நடத்த பெண் தொழில் முனைவோர் ஆர்வமாக இருக்கிறார்களா? என்று கேட்டோம்.

 ""அப்படிச் சொல்ல முடியாது. பெரும்பாலான பெண்கள் வங்கிக் கடன் பெறத் தயங்கவே செய்கிறார்கள். கடனை வாங்கிவிட்டுக் கட்ட முடியாவிட்டால் என்ன செய்வது? என்று தயங்குகிறார்கள். நாங்கள் அவர்களை எதற்காகவும் வற்புறுத்துவதில்லை. அவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு ஊக்கம் அளிக்கிறோம். அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை மட்டுமே நாங்கள் அளிக்கிறோம். அப்போதுதான் அவர்கள் சொந்தக் காலில் நிற்பார்கள் என்று நம்புகிறோம்.

 எங்கள் மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தில் 5 ஆம் வகுப்பு படித்த பெண்களிலிருந்து எம்.ஏ., எம்.காம். வரை படித்த பெண்கள் இருக்கிறார்கள். எல்லாருமே சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர்கள்'' என்கிறார் பெருமையாக.

 வேறு என்ன தொழில்கள் செய்ய பயிற்சி தருகிறீர்கள்? என்று கேட்டோம்.

 ""சொல்ல மறந்துவிட்டேன். இப்போது பெண்கள் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவது அதிகமாகிக் கொண்டு வருகிறது. ஆனால் அவற்றின் விலை அதிகமாக இருக்கிறது. ஏழைப் பெண்கள் இதனால் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். எனவே ஏழைப் பெண்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு சானிட்டரி நாப்கின் 2 ரூபாய் விலையில் தயாரிக்க முடியும். அதற்கு நாங்கள் பயிற்சி தருகிறோம். பத்தாயிரம் ரூபாய் இருந்தால் இதற்குத் தேவையான இயந்திரத்தை வாங்கிவிடலாம். திருச்சி தவிர, சென்னையிலும் ராணிப்பேட்டையிலும் கூட இதற்காகப் பயிற்சிகள் தரப்படுகின்றன'' என்கிறார்.

 தொழில் தொடங்குவதைவிட அத்தொழிலினால் செய்யப்படுகிற பொருட்களை விற்பனை செய்வது, சந்தைப்படுத்துவது சிரமமாயிற்றே? அதனால்தானே எல்லாரும் சொந்தத் தொழில் செய்ய யோசிக்கிறார்கள்? என்று கேட்டோம்.

 ""நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அதற்கும் நாங்கள் வழி கண்டுபிடித்திருக்கிறோம். உதாரணமாக திருப்பூரில் இருந்து பனியன் வேஸ்ட்டில் இருந்து நூலைப் பிரிக்கும் வேலையை இங்குள்ள பெண்கள் செய்கிறார்கள். இந்த நூலைப் பிரிக்கும் வேலையை இயந்திரம் மூலமே செய்ய வேண்டும். பனியன் வேஸ்ட்டை வாங்குமிடத்திலேயே பிரிக்கப்பட்ட நூலையும் திருப்பிக் கொடுத்துவிடலாம். அதுபோல பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரத்தைச் செய்யும் நிறுவனமே தயாரிக்கப்படும் பேப்பர் கப்களை வாங்கிக் கொள்கிறார்கள். இதுதவிர மகளிர் தொழில்முனைவோர் தயாரிக்கும் நைட்டி, பேக், ஹேர் ஆயில், சானிட்டரி நாப்கின், டவல், மசாலாப் பொருட்கள், ஊறுகாய் போன்ற பொருட்களை பெண்கள் கல்லூரிகளில் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்து தருகிறோம்.'' என்கிறார் மணிமேகலை உற்சாகமாக.

 உங்களுடைய பணிகளுக்கு மற்றவர்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு உள்ளது? என்று கேட்டோம்.

 ""கணவர் இல.அம்பலவாணன். அவரின் முழு ஒத்துழைப்பு உள்ளது. அவர் மக்கள் மேம்பாட்டு வினையகம் என்ற பெயரில் தன்னார்வ அமைப்பு வைத்துச் செயல்படுகிறார். மகள் கவின்மலர் படித்துக் கொண்டிருக்கிறார். எனது பணிகளுக்கு எல்லாரும் முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

 மணிமேகலை தமிழறிஞர் இலக்குவனாரின் மருமகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.