புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாதனை: தொலைக்காட்சியில் ஆவணப் படங்களுக்கு இடம் தர வேண்டும்!

ஜெமினி டிவியில் ஒரு தொலைக்காட்சித் தொடர் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. "சுந்தர காண்டா' என்ற அந்தத் தொடர் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது. அதில் சிம்ரன் நடித்திருக்கிறார். அந்தத் தொடரைத் தயாரித்த

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 12:44 pm

ந. ஜீவா

ஜெமினி டிவியில் ஒரு தொலைக்காட்சித் தொடர் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. "சுந்தர காண்டா' என்ற அந்தத் தொடர் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது. அதில் சிம்ரன் நடித்திருக்கிறார். அந்தத் தொடரைத் தயாரித்த "ஜி 3 த ஸ்டுடியோ' நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ஒரு பெண். வெளிநாட்டிற்குச் சென்று அந்தத் தொடருக்கான படப்பிடிப்பு நடத்துவதற்கு அனைத்துப் பணிகளையும் செய்திருக்கிறார். அது மட்டுமல்ல, மைசூரில் உள்ள "இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்' தனது ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் தேவைக்காக ஆவணப்படங்களைத் தயாரிக்கிறது. அதற்காக ஆறு ஆவணப் படங்களையும் இயக்கியிருக்கிறார். அவர் சுஜாதா கோபால்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப் படிப்பிற்காகத் தங்கப் பதக்கம் பெற்றவர். பத்தாண்டுகள் சிட்டி பேங்க்கில் பணிபுரிந்தவர். பன்முகத் திறமையுள்ள அவரைச் சந்தித்துப் பேசினோம்.

நிறையத் தொலைக்காட்சித் தொடர்கள் வருகின்றன. உங்களுடைய "சுந்தர காண்டா' எந்தவிதத்தில் வேறுபடுகிறது?

எங் க ளுடைய "சுந்தர காண்டா' தொடரைப் பார்ப்பவர்கள், முதலில் சொல்வது, இது தொலைக்காட்சித் தொடர் போலவே இல்லை, சினிமா போல் இருக்கிறது என்பதுதான். தொலைக்காட்சித் தொடர்களில் ஏதோ ஒன்றிரண்டு பாடல் காட்சிகள் இடம் பெறும். ஆனால் எங்களுடைய தொடரில் சினிமாவைப் போல நிறையப் பாடல் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்ல, சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை இந்தத் தொடரில் சொல்லியிருக்கிறோம்.

ஆந்திராவில் நடுத்தர வர்க்கத்தவரிடையே அமெரிக்க மாப்பிள்ளை மோகம் அதிகம். தங்களுடைய பெண்ணை அமெரிக்க மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்து தருவதை மிகப் பெருமையாக அவர்கள் நினைக்கிறார்கள். உள்ளூர் மாப்பிள்ளை என்றால் திருமணத்திற்கு முன்பு ஓராயிரம் தடவை விசாரிப்பார்கள், அமெரிக்க மாப்பிள்ளை என்றால் கண்ணை மூடிக் கொண்டு பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மிக அதிகம்.

ஏற்கனவே அமெரிக்காவில் திருமணமான ஒருவன், இங்குள்ள ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பலவிதங்களில் தொல்லை கொடுக்கிறான். ஒருகட்டத்தில் பணத்திற்காக அவளை இன்னொருவனின் படுக்கையறையில் தள்ளவும் முயற்சிக்கிறான். அதற்கு உடன்படாத அந்தப் பெண், அதனால் ஆத்திரமடைந்து அவனைக் குத்திவிடுகிறாள். அவள் கைது செய்யப்படுகிறாள். அவளை எப்படி மீட்பது என்று தெரியாமல் இங்குள்ள பெற்றோர் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் வழக்கறிஞராக உள்ள சிம்ரன், அந்தப் பெண்ணுக்கு உதவுகிறார். கதைப் போக்கில் அமெரிக்க மாப்பிள்ளைக்குப் பெண் கொடுப்பதானால் என்ன என்ன விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்? என்னென்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்? என்பது போன்ற நிறையத் தகவல்களைச் சொல்லியிருக்கிறோம். வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், மக்களுக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லியிருப்பதுதான் இந்தத் தொடரின் வித்தியாசமான தன்மை என்று நான் நினைக்கிறேன்.

ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறீர்களாமே?

இந் திய மொழிகளின் நடுவண் நிறுவனம் மைசூரில் உள்ளது. இங்கு பயிலும் ஆராய்ச்சி மாணவர்களின் படிப்பிற்கு உதவும்வகையில் நிறைய ஆவணப் படங்களைப் பல மொழிகளிலும் தயாரிக்கிறார்கள். அவர்களுக்காக நான் வில்லுப்பாட்டு, தோற்பாவைக் கூத்து, மறைந்த மாநகரங்கள், தமிழர் நாக வழிபாடு, எம்.ஜி.ஆர்., ஆகிய ஆவணப் படங்களைத் தமிழில் இயக்கியிருக்கிறேன்.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும் வகையில் எடுப்பதென்றால், எடுக்கும் விஷயம் தொடர்பான ஆழமான அறிவு தேவைப்படுமே?

ஆமாம். உதா ரணமாக வில்லுப்பாட்டு பற்றிய ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்றால், அது தொடர்பாக ஏற்கனவே ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களை அணுகுவேன். அவர்களைப் பலமுறைச் சந்தித்துப் பேசி நிறையத் தெரிந்து கொள்வேன். வில்லுப்பாட்டு தொடர்பான புத்தகங்களை நிறையப் படிப்பேன். அதன் பின்பு என்ன எடுக்கப் போகிறோம் என்பதை இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பேன். அவர்கள் அதைப் பரிசீலனை செய்து எவற்றையெல்லாம் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். பின்பு அது தொடர்பான படப்பிடிப்புகளை நடத்தி அந்த ஆவணப் படத்தை முடித்துக் கொடுப்பேன்.

தொலைக்காட்சித் தொடர் எடுப்பதை விட ஆவணப் படங்கள் எடுப்பது எளிதுதானே?

அப் ப டிச் சொல்லிவிட முடியாது. இரண்டிலுமே சிரமமான விஷயங்கள் இருக்கின்றன. ஆவணப் படம் எடுக்கும்போது நமக்குத் தேவையான காட்சிகளை எடுப்பது மிகவும் கடினம். உதாரணமாக மறைந்த மாநகரங்கள் பற்றிய ஆவணப் படம் எடுக்கும்போது எனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது. சோழர் காலத்தின் நகரங்களான பழையாறை, வல்லம் போன்றவற்றின் பெயர்களைக் கேட்கும்போதும், அதைப் படிக்கும்போதும் நமது மனதில் நல்ல இனிமையான கற்பனை ஓடும். ஆனால் அந்தப் பழையாறை போன்ற பழைய நகரங்களைத் தேடிப் படம்பிடிக்கப் போனால் அங்கே ஒன்றுமே இருக்காது. அது அழிக்கப்பட்டு இப்போது வெறும் கிராமமே இருக்கும். அப்புறம் எப்படி அந்தப் பழைய நகரைப் படம்பிடிப்பது? இப்படிப்பட்ட சிரமங்கள் ஏற்படும்.

வில்லுப்பாட்டு பற்றி ஆவணப்படம் எடுக்கும்போது சுப்புஆறுமுகம் போன்றவர்களை அணுகினோம். சுப்புஆறுமுகத்தின் வில்லுப்பாட்டில் கற்பனை கலந்திருக்கும். அவர்கள் வில்லுப்பாட்டின் மூலமாக சமகாலத்தில் மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஊட்டும்விதமான கருத்துகளைப் பரப்புகிறார்கள். ஆனால் கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் பழைய வில்லுப்பாட்டு அப்படியே இருக்கிறது. சுடலை மாடன் வழிபாடு போன்ற சிறு தெய்வ வழிபாட்டிற்காக வில்லுப்பாட்டு பயன்படுத்தப்படுகிறது. எனவே வில்லுப்பாட்டின் பல்வேறுவிதமான வடிவங்களைப் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும். வில்லுப்பாட்டை நிகழ்த்துகிறவர்களைப் படம் பிடித்துக் காட்டினால் மட்டும் கல்விக்கான ஆவணப்படம் நிறைவு பெறாது.

வில்லுப்பாட்டு எல்லாக் காலங்களிலும் இருந்ததா? சங்ககாலத்தில் வில்லுப்பாட்டின் வடிவம் இருந்ததா?

போன்ற ஆராய்ச்சிக்கு உதவும் விஷயங்கள் இணைக்கப்பட வேண்டும். எனவே ஆவணப்படம் எடுப்பது என்பது எளிதான வேலையல்ல.

ஆவணப்படங்களுக்குப் பொதுவாக வரவேற்பு குறைவாக இருக்கிறதே?

வர வேற்பு குறை வாக இருக்கிறது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? நமது தொலைக்காட்சிகளில் ஆவணப்படங்களுக்கு இதுவரை போதிய இடம் அளிக்கவேயில்லை. இம்மாதிரியான படங்களை மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

ஆனால் மக்கள் ரசிக்கும்விதமாக ஆவணப்படங்களை எடுக்க முடியும். வாரத்தில் ஓர் அரை மணி நேரம் ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒளிபரப்பினால் போதுமானது. சீரியல் பார்க்கும் பெண்களுக்குத் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சித்தர் இலக்கியம், தெருக்கூத்து போன்றவை பற்றிய ஆவணப்படங்களை எடுத்தால் மக்கள் பார்க்கமாட்டார்களா? மக்களுக்குத் தேவையானதை நாம் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

இந்தத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

எனது மாம னார் ஜி.தியா க ராஜன் ஓர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி. அவர் ஓய்வு பெற்றதும் அலக்நந்தா அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட் என்ற விளம்பர நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் தென் மாநிலப் பிரிவை எனது கணவர் அருண்கோபால் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் சிட்டி பேங்கில் செய்து வந்த வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு வந்தேன். விளம்பர நிறுவனப் பணிகளில் ஈடுபட்ட நான் மெல்ல ஆவணப் படங்களை இயக்கும் அளவுக்கு உயர்ந்தேன். "ஜி 3 த ஸ்டுடியோ' நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட்டாகவும் பணிபுரிகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.