சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திட்டம்: குளம் இணைக்க குடி உயரும்!

சரித்திரம் படிக்கும்போது, அசோகர் மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார் என்றுதானே இருக்கும்? குளம் வெட்டுவதும் மரம் நடுவதும் அத்தனை பெரிய சாதனையா என்றுதான் ஆரம்பத்தில் தோன்றியிருக்கும். இப்போது மரங்கள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:55 am

சரித்திரம் படிக்கும்போது, அசோகர் மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார் என்றுதானே இருக்கும்? குளம் வெட்டுவதும் மரம் நடுவதும் அத்தனை பெரிய சாதனையா என்றுதான் ஆரம்பத்தில் தோன்றியிருக்கும். இப்போது மரங்கள் குறைந்ததால் புவியின் வெப்பமும், மழையின்மையும் ஏற்பட்டதோடு, குளங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் நீராதாரம் குறைந்து விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் வெட்டப்பட்டு வருவதும், வளர்ந்த நாடுகள் வெளியேற்றும் கார்பனின் அளவு அதிகரித்து வருவதால் புவியின் வெப்பம் அதிகரித்து ஒருபுறம் வறட்சி, மறுபுறம் வெள்ள பாதிப்புகளை உலகம் அனுபவித்து வருகிறது.

வளர்ந்துவிட்ட நாடுகள் வெளியேற்றும் கார்பனின் அளவைக் குறைக்க முடியாததால், வளரும் நாடுகளில் வெளியேறும் கார்பன் அளவை கட்டுப்படுத்த வற்புறுத்தியும், அந்நாடுகளில் மரங்களை வளர்க்க (கார்பன் கிரெடிட் முறையில்) ஊக்கப்படுத்தி நிதி வழங்கும் சூழல் உருவாகி உள்ளது.

நீராதாரங்களை இணைப்பதற்கு வழிகாட்டியாக, முன்னோடி மாவட்டமாக "இயற்கையை மீட்போம்' என்ற பெயரில் செயல்படும் இத் திட்டம் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சி யர் மா.வள்ளலாரிடம் கேட்டோம்.

""இந்திய நிலப்பரப்பில் 33 சதவீதமாக இருந்த காடுகளின் அளவு, பல்வேறு காரணங்களால் மரங்கள் வெட்டப்படுவதும் அதற்கு ஈடாக மரங்களை நடவு செய்யாமல் போனதாலும் இன்று 22 சதவீதமாக குறைந்து போனது. ஆண்டுக்கு ஒரு கோடி மரம் நடும் திட்டத்தை அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.

இது மட்டுமின்றி தேசிய அளவில் நதிகளை இணைப்பது என்பது கேள்வியாகி உள்ளது. எனவே நீராதாரங்களை இணைக்க மாவட்ட அளவில் உள்ள குளங்களை இணைக்கும் புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது. நீராதாரம் உள்ள இடங்கள் எல்லாம் ஒரே மாதிரியான அளவில் இல்லாமல் நீர்பிடிப்புத் தன்மைக்கு ஏற்ற வகையில் ஏரிகளாகவோ, குளங்களாகவோ, குட்டைகளாகவோ தான் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் அளவில் உள்ள குளங்களையும், கண்மாய்களையும் இணைப்பதன் மூலம் நீராதாரத்தைப் பெருக்க முடியும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த முயற்சி. இதை செயலாக்கும் வண்ணம் முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் ஆர். கோம்பை கிராமம் மெத்தப்பட்டி நீராதாரப் பகுதி திட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக, அன்றைய பிரிட்டிஷ் அரசின் வருவாய் பதிவேடுகளில் உள்ள நில வரைபடம், ஜியோ மேப்பிங் முறையில் செயற்கைகோள் மூலம் 15 ஆயிரம் மற்றும் 9 ஆயிரம் அடி உயரங்களில் இருந்து எடுக்கப்பட்ட படங்களைக் கொண்டு சூப்பர் இம்போசிங் முறையில் வரைபடம் தயாரிக்கப்பட்டது. இவற்றைப் பார்க்கும் போது அன்று குளங்களாக இருந்த பகுதிகளில் சில, இன்று வயல்களாகவும் வரப்புகளாகவும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரியவந்தது. எனவே, உள்ளூரைச் சேர்ந்த முதியவர்களின் உதவியுடன் குளங்கள் இருந்த பகுதி, குளங்கள் நிரம்பிய காலத்தில் வழிந்தோடிய வாய்க்கால்களின் வழித்தடம் அறிந்து, இயற்கையின் பாதையை உருவாக்கும் திட்டம் வரையப்பட்டது. இத்திட்டத்தை செயலாக்குவதற்கு முன் திட்டம் குறித்தும் அதன் பலன்கள், நோக்கம் குறித்தும் உள்ளூர் மக்களிடம் விவாதிக்கப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவர்களைக் கொண்டே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 1.44 லட்சம் மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 5 ஊராட்சிகளின் வழியாக 18 கிமீ நீளமுள்ள வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு, 25 குளங்கள் இணைக்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்காக ரூ. 1.44 கோடி செலவிடப்பட உள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நிதி ஒரு பிரச்னையாக இருக்காது.

25 குளங்கள் இணைக்கப்படுவதால் கிடைக்கும் மழை நீரைக் கொண்டு 2,441 கனஅடி நீர் சேமிக்க முடியும். இதனைத் தொடர்ந்து, இப்பகுதிகளில் உள்ள 700 கிணறுகள் மற்றும்

500-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளின் நீர்மட்டம் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் முடிவடைவதற்கு முன்னரே, மாவட்டத்தில் உள்ள மற்ற ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள குளங்களை இணைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே மாவட்டத்தில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதால், மழையின் அளவு கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மழைக்காலத்தில் நீர் சேகரிக்கப்பட்ட பின்னர், மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை குறையும் என்பது திண்ணம்''என்றார் மாவட்ட ஆட்சியர்.

தேசிய அளவில் நதிகளை இணைக்க வேண்டும், மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிகளை இணைக்க வேண்டும், அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதைவிட மனித உழைப்பு, நிதி ஆதாரங்கள் மாவட்ட நிர்வாகங்களின் கையிலேயே உள்ளதால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீராதாரங்களை அவரவர் முன் முயற்சியெடுத்து இணைப்பதன் மூலம், ஜீவாதாரமான தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, விவசாயம் செழிக்க வழி கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.