கைத்திறன்: சிரட்டையிலும் நகை செய்யலாம்
"சுயதொழில் ஒன்றை கற்றுக்கொள்...கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற புதுமொழியை மனதில் ஆழப்பதித்து அதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர் இன்றைய பல இளம்தொழில்முனைவோர்கள். அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளார்


"சுயதொழில் ஒன்றை கற்றுக்கொள்... கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற புதுமொழியை மனதில் ஆழப்பதித்து அதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர் இன்றைய பல இளம்தொழில்முனைவோர்கள். அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளார் புதுவை அரியான்குப்பத்தைச் சேர்ந்த லியாகத் அலிகான் .
குப்பையில் இருந்து செல்வம் எடுப்பது போல தேங்காய் சிரட்டையைப் பயன்படுத்தி பெண்களைக் கவரும் அணிகலன்களைத் தயாரித்து வருகிறார் லியாகத் அலிகான்.
கொண்டை ஊசி, வளையல், தோடு, கழுத்தில் அணியும் டாலர், சாவிக் கொத்து போன்றவற்றைத் தனது கலைநயத்தால் மிளிரவைக்கிறார் இவர்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இடம்பெற்ற கைவினைப் பொருள் கண்காட்சியில் தனது படைப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்த அவரைச் சந்தித்தோம்.
தேங்காய் சிரட்டையில் இருந்து அணிகலன்கள் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற என்ன காரணம்?
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநராக இருந்தேன். எனது மகன் படிக்கும் பள்ளியில் கைவினைப் பொருள் கண்காட்சிப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டியில் பங்கேற்க எனது மகன் இம்மானிக்கான் ஆசைப்பட்டான். ஏதாவது ஒரு கைவினைப் பொருளை செய்துதரும்படி அவன் என்னிடம் கேட்டபோது, ஏதாவது வித்தியாசமான ஒரு பொருள் செய்துகொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அப்போது தான் என் கண்ணெதிரே கிடந்தது ஒரு தேங்காய் சிரட்டை. இந்த சிரட்டையின் மூலம் ஒரு பொம்மை செய்து என் மகனிடம் கொடுத்தேன்.
அந்த கைவினைப் பொருள் கண்காட்சிப் போட்டியில் எனது மகன் மாவட்ட அளவில் மூன்றாவது பரிசு பெற்றான்.
இந்த மூன்றாவது பரிசு கிடைத்த ஊக்கத்தில் தான் தேங்காய் சிரட்டையின் மூலம் பல்வேறு வடிவங்களில் பெண்களின் அணிகலன்களான தோடு, வளையல், நெக்லஸ், சாவி கொத்து போன்றவற்றை செய்யத் துவங்கினேன்.
உங்களது முழு நேரத் தொழில் என்ன?
ஆட்டோ ஓட்டுநராக இருந்த நான், தற்போது தேங்காய் சிரட்டையின் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களை விற்பனை செய்வதை முழுநேரத் தொழிலாக செய்து வருகிறேன்.
இதுவரை எத்தனை விதமான அணிகலன்களைத் தயாரித்துள்ளீர்கள்?
தினமும் ஏதோ ஒன்று அல்லது இரண்டு புதிய வடிவங்கள் செய்ய முயற்சிப்பேன். அதில் சில நல்ல வடிவங்கள் கிடைக்கும். இதுவரை 100-க்கும் மேற்பட்ட வடிவங்களில் வளையல், தோடு, நெக்லஸ் போன்றவற்றை செய்துள்ளேன். இதுமட்டுமின்றி இந்திய வரைபடம், தேசியப் பறவை மயில், ஆங்கில எழுத்துகள் என பல்வேறு புதிய வடிவங்களில் அணிகலன்கள் செய்துள்ளேன்.
இதை அணிவதால் பின்விளைவுகள் ஏற்படுமா?
÷பழங்கால மனிதர்கள் உணவு உண்பதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் இந்த தேங்காய் சிரட்டையை தான் பயன்படுத்தி வந்தனர். இன்றைய காலத்தில் கூட சில கிராமங்களில் தேங்காய் சிரட்டையைத் தண்ணீர் குடிக்க, தேநீர் பருக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எந்த ஒரு பின்விளைவும் ஏற்படவில்லை.
அதனால் இதில் தயாரிக்கப்படும் அணிகலன்களால் எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது.
பெண்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு எப்படி உள்ளது?
இன்றைக்கு தங்கம், வெள்ளி போன்றவை யானை விலைக்கு விற்கிறது. பணக்காரர்கள் மட்டுமே தங்கத்தை வாங்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆக நடுத்தர மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகிவிட்டது. எனவே, இந்த அணிகலன்கள் வித்தியாசமான வடிவங்களிலும் பெண்களை கவரும் வகையிலும் இருப்பதால் பெண்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. வெளிநாட்டுப் பெண்கள் மற்றும் வட நாட்டுப் பெண்கள் மிகவும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இதுவரை எத்தûனை காண்காட்சி அரங்குகளில் அரங்குகள் வைத்திருக்கிறீர்கள்?
கொச்சியில் உள்ள அகில இந்திய தேங்காய் வளர்ச்சி வாரிய கண்காட்சி அரங்கில் இடம்பெற்றுள்ளன. மேலும், தில்லியில் உள்ள காதி கண்காட்சி அரங்கில் எனது கைவினைப் பொருட்கள் இடம் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...