கல்வி: குறைந்த மதிப்பெண்களா? கவலைப்படாதீர்கள்!
இப்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. கல்லூரிகளில் சேர்வதற்கு அலைமோதும் மாணவர்கள் கூட்டம். நிறைய மதிப்பெண்கள் பெற்றவர்கள் எப்படியும் பொறியியல் படிப்போ, மருத்துவப் படிப்போ கிடைக்கும் என்ற நம்பிக்கை


இப்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. கல்லூரிகளில் சேர்வதற்கு அலைமோதும் மாணவர்கள் கூட்டம். நிறைய மதிப்பெண்கள் பெற்றவர்கள் எப்படியும் பொறியியல் படிப்போ, மருத்துவப் படிப்போ கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்க, சிறிது மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் என்ன படிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்கிறார்கள்.
வசதியுள்ளவர்கள் பணம் செலவு செய்து எந்தப் படிப்பிலும் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்க, வசதியில்லாத மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதே எட்டாத கனவாக உள்ளது. வசதி குறைவான, மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்களுக்கு உகந்த படிப்புகள் எவை என்று கல்வித்துறையில் 46 வருடங்கள் அனுபவம் உள்ள கிரி ரங்கசாமியிடம் கேட்டோம்.
கிரி ரங்கசாமி விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தின் கல்லூரியான ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரியில் உயிரியல்துறையில் டீனாகப் பணியாற்றுகிறார். இனி அவரிடம் பேசியதிலிருந்து...
நீண்ட காலமாகக் கல்வித்துறையில் இருக்கிறீர்கள். கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி?
நான் 1964 இல் முதன்முதலில் விரிவுரையாளராகச் சேர்ந்து கல்வித்துறைக்கு வந்தேன். ஆசிரியர் பணி வெறும் சம்பளத்திற்காக வேலை செய்யும் பணியல்ல. இந்தத் துறை ஒன்று மட்டும்தான் பிறரை வளர வைப்பது. ஆசிரியர் பிறரின் வளர்ச்சிக்கு உதவுவதோடு தானும் அதனால் வளர்கிறார்.
ஆரம்பத்தில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே குரு- சிஷ்யன் உறவு உள்ள குருகுல முறைப்படியான படிப்புதான் இருந்தது. குருவைப் பார்த்து கல்வியை மட்டுமல்ல, நல்ல பழக்க, வழக்கங்களையும் வாழும் முறைகளையும் மாணவர்கள் கற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு வெறும் தகவல்களை, உண்மைகளை மாணவர்களுக்குப் புத்தகங்களின் மூலமாகவும் கரும்பலகையில் எழுதிப் போடுவதன் மூலமாகவும் கற்றுக் கொடுக்கும் பழக்கம் வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்புதான் தொழில்சார்ந்த படிப்புகள் வர ஆரம்பித்தன. தொழில்நுட்பக் கல்விகள், மருத்துவப் படிப்புகள், வேளாண்மை படிப்புகள், மேலாண்மை படிப்புகள் பெரிய அளவுக்கு மாணவர்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தன.
இப்போது எதைப் படிப்பது என்ற விழிப்புணர்வு பெரிய அளவுக்கு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் இதைப் படி என்று தங்களுடைய பிள்ளைகளுக்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக, பிள்ளைகள் இதைத்தான் படிக்கப் போகிறோம் என்று பெற்றோரிடம் சொல்கிறார்கள். இது பெரிய மாற்றம். பிளஸ் டூ படிக்கிற மாணவர்களே பலவிதமான கல்லூரிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பிள்ளைகளுக்குச் சொத்து சேர்க்க வைப்பதற்காக முன்பெல்லாம் பெற்றோர் முயற்சி செய்தார்கள். இப்போது பிள்ளைகள் உயர் கல்வி கற்பதற்காக பெற்றோர் பாடுபடுகிறார்கள்.
இப்போது சமூகத்தின் தேவைக்கேற்ப தொழிற்கல்வி வந்துவிட்டது. பல பல்கலைக் கழகங்களில் பாட அமைப்புக் குழுவில் தொழில்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கிறார்கள். எங்களுடைய நிறுவனங்களில் வேலை செய்ய இப்படிப்பட்ட திறமை வாய்ந்தவர்கள் தேவை. அதற்குப் பொருத்தமான கல்வியை மாணவர்களுக்குத் தாருங்கள் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். பல நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் பல புதிய புதிய படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. உதாரணமாக, எங்களுடைய விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் மெக்கட்ரானிக்ஸ் போன்ற படிப்புகள் வந்துவிட்டன. மெக்கானிக்கல் என்ஜினியரிங்கையும், எலக்ட்ரானிக்ûஸயும் இணைத்த படிப்பு அது.
சில குறிப்பிடத்தக்க சிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேர அதிக மதிப்பெண்கள் வேண்டுமே?
நிறைய மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குப் பொறியியல் படிப்புகளில் சேர இடம் கிடைக்கும் என்பது உண்மையே. ஆனால் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர 45 சதம் மதிப்பெண்கள் இருந்தால் போதும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் பெரிய அளவில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அப்படியும் சில மாணவர்களுக்குச் சேர முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அப்படிப்பட்ட மாணவர்கள் படிப்பதற்கென்றே நிறைய தொழில் சார்ந்த படிப்புகள் இப்போது வந்துவிட்டன. முதலில் எல்லாம் தொழில்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டு வந்தன. இப்போது படிப்பின் அடிப்படையில் தொழில்கள் செய்யப்படுகின்றன. ஓரிரண்டு ஆண்டுகளில் படித்து முடிக்கப்படும் பட்டயப் படிப்புகள் வந்துவிட்டன.
பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கு என்ன படிப்புகள் உள்ளன?
பிளஸ் டூ வில் அதிக மதிப்பெண்கள் இல்லையென்று மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. வசதியில்லை என்று வருந்தவும் வேண்டியதில்லை. டையிங், ஜுவல்லரி மேக்கிங்,ஜெம்மாலஜி, மேடைப் பேச்சுக் கலை, செய்தித்தாள்களுக்கான புகைப்படக் கலை, கராத்தே, பரதநாட்டியம், யோகா ஆகியவற்றில் டிப்ளமா படிப்புகள் இப்போது வந்துவிட்டன. எல்லாரும் என்ஜினியர்களாக ஆக முடியாது. ஆனால் தங்களுக்கு எதில் திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ற படிப்புகளைப் படிக்கலாம். தங்களுடைய பொருளாதாரநிலைக்குப் பொருத்தமான கல்வியைத் தேர்ந்தெடுக்கலாம்.
முன்பெல்லாம் மைக்ரோ பயாலஜி படித்தால் என்ன வேலை வாய்ப்பு உள்ளது? என்று கேட்பார்கள். இப்போது பெரிய பெரிய உணவு விடுதிகளில் "டிப்ளமா இன் மைக்ரோ பயாலஜி' படித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உள்ளது. அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பது, உணவுகளின் தரத்தைப் பாதுகாப்பது போன்ற பணிகளில் மைக்ரோ பயாலஜி படித்தவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கேட்டரிங் டெக்னாலஜி படித்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் நிறைய காத்திருக்கின்றன. வருங்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கும். ஏனென்றால் வீட்டில் உள்ள ஆணும் பெண்ணும் வேலைக்குப் போகும் இக்காலத்தில் வீட்டிற்குத் தேவையான உணவை வெளியில் இருந்து வாங்கிச் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இது விளம்பர உலகம். பந்தல், ஒலி, ஒளி அமைப்பு,மேடை அமைப்பு, அரங்க அமைப்பு
தொடர்பான படிப்புகளுக்கும் இப்போது வாய்ப்புகள் பெருகி வருகின்றன. ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஒரு தனித்துறையாக வளர்ந்து வருகிறது.
இப்போது கம்ப்யூட்டர் துறை சார்ந்த படிப்புகளுக்கு மிகுந்த தேவை உள்ளது. முதலில் "கார் இல்லாவிட்டால் கால் இல்லாததைப் போல' என்பார்கள். இப்போது கம்ப்யூட்டர் இல்லையென்றால் கை இல்லை என்று சொல்லும்நிலை உருவாகிவிட்டது.
கம்ப்யூட்டர் மூக்கை நுழைக்காத துறையே இப்போது இல்லை எனலாம். கட்டுமானத்துறையில் இருந்து வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் கம்ப்யூட்டர் இல்லாமல் எதுவும் நடக்காது என்றநிலை ஏற்பட்டுள்ளது. மல்ட்டி மீடியா துறையில் கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. கம்ப்யூட்டரின் உதவியோடு புதிய புதிய ஃபார்முலாக்களை உருவாக்கி மருந்துகளைக் கண்டுபிடிக்கிறார்கள். டெக்ஸ்டைல் துறையில் புதிய புதிய டிசைன்களை உருவாக்க கம்ப்யூட்டர் பயன்படுகிறது. கம்ப்யூட்டர் படிப்பு என்றால் பொறியியல் பட்டப்படிப்புதான் படிக்க வேண்டும் என்றில்லை. சாதாரணமாக போட்டோ ஷாப், பேஜ் மேக்கிங் போன்றவற்றைப் படித்தாலே நிறைய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
சில மாணவர்களுக்குப் படிப்பை விட விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளனவா?
முதலில் எல்லாம் மாணவர்கள் படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூடாது என்று கூறப்பட்டது. இப்போது மாணவர்கள் படிப்பைத் தவிர வேறு திறமைகளையும் அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவும், படித்த பின்பு வேலை கிடைக்கவும் விளையாட்டுக்கென தனி ஒதுக்கீடுகள் வங்கிகளில், தனியார் நிறுவனங்களில் எல்லாம் இருக்கின்றன. "சும்மா விளையாடிக் கொண்டே இருக்காதே' என்று பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைப் பார்த்து இனி கூற முடியாது.
கேம்பஸ் இன்டர்வியூக்கள் எல்லாம் பெரிய பெரிய கல்விநிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்குத்தானே பயன்படுகின்றன?
அப்படிச் சொல்ல முடியாது. வேலைக்குப் பணியாளர்கள் தேவைப்படும் நிறுவனங்கள் கல்விநிறுவனங்களுக்கு வந்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்ந்தெடுப்பது சமீப காலங்களில் அதிகரித்துவிட்டது. கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கிறது. ஆனால் அது இப்போது இது பள்ளி அளவுக்கே வந்துவிட்டது. பிளஸ் டூ படிக்கும் மாணவர்களைத் தொழில் நிறுவனங்கள் வேலைக்குத் தேர்ந்து எடுக்கிறார்கள். அவர்களுடைய தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளையும் அவர்களே தருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...