பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மருத்துவம்: தேவையான வடிவத்தில் எலும்பை வளர்க்க முடியும்!

முன் எப்போதைக் காட்டிலும் இப்போது பல நவீனமுறைகள் எல்லாத்துறைகளிலும் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றன. பல் மருத்துவம், முகச் சீரமைப்பு மருத்துவம் போன்றவையும் இதற்கு விதிவிலக்கல்ல. பல் சொத்தை நீ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:27 pm

ந. ஜீவா

முன் எப்போதைக் காட்டிலும் இப்போது பல நவீனமுறைகள் எல்லாத்துறைகளிலும் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றன. பல் மருத்துவம், முகச் சீரமைப்பு மருத்துவம் போன்றவையும் இதற்கு விதிவிலக்கல்ல. பல் சொத்தை நீக்குவது போன்ற சாதாரண சிகிச்சையாகட்டும், பிறவியிலேயே உள்ள முக எலும்பு வளர்ச்சிக் குறைபாடாகட்டும் அவை எல்லாவற்றிலும் நவீனமுறைகள் வந்துவிட்டன.

"எலும்பு புரதப் பதியமுறை' மூலம் முகச் சீரமைப்பு சிகிச்சையை இந்தியாவிலேயே முதன்முதலில் செய்தவர் பல் மற்றும் முகச் சீரமைப்பு மருத்துவர் எஸ்.எம்.பாலாஜி. பெரிய அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை எல்லாரும் அவரிடம் மருத்துவம் செய்து கொள்கிறார்கள். டாக்டர் பி.சி.ராய் தேசியவிருது பெற்ற அவர் முகச் சீரமைப்புத் துறையில் பி.எச்டி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாலாஜி பல் மற்றும் முகச் சீரமைப்பு மருத்துவமனையில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

பல் மருத்துவத்தில் இப்போதுள்ள நவீன சிகிச்சைகள் எவை?

இப்போது பல் மருத்துவத்துறையாகட்டும், முகச் சீரமைப்பு மருத்துவமாகட்டும் பெரிய அளவில் நவீனமாகிவிட்டது.

முதலில் எல்லாம் பல் சொத்தை என்று டாக்டரிடம் போனீர்கள் என்றால் அவஸ்தைப்பட்டுவிடுவீர்கள். சொத்தையை ஒரு சிறிய கிரைண்டிங் வீலை வைத்துச் சுரண்டி எடுப்பார்கள். அப்போது ஏற்படும் பயங்கரமான வலி, கூச்சம் தாங்க முடியாததாக இருக்கும். அப்படிச் சுத்தம் செய்யப்பட்ட பல்லில் கிருமி சிறிது இருந்தால் மீண்டும் பல் சொத்தை ஏற்பட்டு பல்லையே எடுக்க வேண்டியது வரும்.

ஆனால் இப்போது பல் சொத்தைக்கு லேசர் மூலம் சிகிச்சை அளிக்கும் முறை வந்துவிட்டது. இதனால் எந்த வலியும் இல்லை. ரத்தம் வருவதில்லை. அதே சமயம் பல் சொத்தைக்குக் காரணமான கிருமிகளை லேசர் நன்கு ஊடுருவிச் சென்று அழித்துவிடுகிறது. பல் சொத்தைக்காக மருத்துவரிடம் செல்ல இப்போது யாரும் பயப்படத் தேவையில்லை.

லேசர் சிகிச்சை தவிர, பல் சொத்தையை நீக்கும் கெமிக்கலும் இப்போது பயன்படுகிறது. சொத்தைப் பல்லில் இந்தக் கெமிக்கலைப் பயன்படுத்தி சொத்தையை நீக்கலாம். கெமிக்கல் சொத்தையால் பாதிக்கப்பட்ட பகுதியை அப்படியே கரைத்துவிடுகிறது.

சிலருக்கு முகம் கோணலாக இருக்கும். முகச் சீரமைப்பு மருத்துவமுறை மூலம் அதைச் சரி செய்ய முடியுமா?

எல்லாருக்கும் இருப்பதைப் போல இல்லாமல் சிலருக்கு முகம் ஒருபக்கம் திரும்பிக் கொண்டோ, கோணலாகவோ இருக்கும். இதற்குக் காரணம் முக எலும்புகள் முழுமையாக வளர்ச்சியடையாததே. அல்லது தேவையான எலும்புகள் வளராமற் போவதே. தற்போதுள்ள முகச் சீரமைப்பு சிகிச்சை மூலம் இதை எளிதாகச் சரி செய்துவிடலாம்.

பிறவியிலேயே இத்தகைய குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, விபத்தின் காரணமாக சிலருக்கு முக எலும்புகள் உடைந்து சேதமடைந்தாலும் அதைச் சரி செய்துவிடலாம். புற்றுநோய் காரணமாக சிலருக்கு தாடை எலும்பில் பாதிப்பு ஏற்பட்டு தாடை எலும்பே இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்டவர்களுக்கும் முகச் சீரமைப்பு மருத்துவத்தின் மூலம் சரி செய்ய முடியும்.

எலும்பில் பாதிப்பு என்றால் உடம்பில் வேறு ஓர் இடத்தில் இருந்து எலும்பை எடுத்து இன்னோர் இடத்தில் பொருத்தித்தானே சிகிச்சை அளிப்பார்கள்?

அப்படித்தான் நீண்ட காலமாகச் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது முகச் சீரமைப்பு மருத்துவ அறிவியல் முன்னேறிவிட்டது. நமது உடம்பில் எலும்பை வளரச் செய்யும் எலும்புருவாக்கப் புரதத்தைக் கொண்டு இப்போது தேவையான இடத்தில் தேவையான வடிவத்தில் எலும்பை உருவாக்க முடியும். இந்தச் சிகிச்சைக்கு எலும்பு புரதப் பதியம் உதவுகிறது.

பிறவியிலேயே முகத்தில் எலும்புக் குறைபாட்டுடன் பிறந்தவர்களுக்காகட்டும், விபத்து, இதர நோய்களினால் பாதிக்கப்பட்டு எலும்பில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்காகட்டும், தேவையான இடத்தில் எலும்புருவாக்கப் புரதத்தை வைத்துவிடுவோம். அந்த இடத்தில் தேவையான அளவுக்கு எலும்பு சிறிது நாளில் வளர்ந்துவிடும்.

இன்னொரு சிகிச்சைமுறை டிஸ்ட்ராக்ஷன். உதாரணமாக தாடை எலும்பு வளரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். தாடை எலும்பை வெட்டி, தேவையான அளவுக்கு இடைவெளிவிட்டு வைத்துவிட்டால், இடைவெளியில் சிறிது நாளில் எலும்பு வளர்ந்துவிடும்.

முதலில் எல்லாம் தாடை எலும்பு போன்றவற்றிற்கு காலிலிருந்தோ உடம்பின் பிற பகுதியில் இருந்தோ எலும்பை வெட்டி அந்த இடத்தில் பொருத்தும் வழக்கம் இருந்தது. இதனால் உடம்பின் ஒரு பகுதியைச் சரிப்படுத்துவதற்காக இன்னொரு பகுதியைச் சேதப்படுத்த வேண்டியிருந்தது. இந்த நவீன சிகிச்சை முறைகள் மூலம் அப்படிப்பட்ட சேதங்கள் இப்போது இல்லை.

பல் மற்றும் முகச் சீரமைப்பு மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள நவீனமுறைகள் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. மருத்துவமனையில் நோயாளி அதிக நாட்கள் தங்கத் தேவையில்லை. வலி நிவாரண மருந்துகள் குறைவாகக் கொடுத்தால் போதும்.

இந்தச் சிகிச்சைக்கு அதிகம் செலவாகுமே?

வழக்கமான சிகிச்சைமுறைகளுக்குத் தேவையான கருவிகளைவிட இந்தச் சிகிச்சை முறைகளுக்கு அதிக விலையுள்ள கருவிகள் தேவைப்படுகின்றன. அதனால் பிற சிகிச்சை முறைகளை விட இதற்குச் சற்றுக் கூடுதல் செலவாகும். அதே சமயம் இந்தச் சிகிச்சை முறையில் நோயாளி அதிக நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியதில்லை. எனவே அதற்கான செலவு குறையும். மேலும் நோயாளியைப் பார்த்துக் கொள்ள வருகிறவர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளைப் பார்க்க முடியாது. லீவு போட வேண்டியிருக்கும். இப்படி எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது அதிக செலவு ஆகாது.

நமது நாட்டிற்கு எலும்பு புரதப் பதிய சிகிச்சை முறை எப்போது வந்தது?

இரண்டு வருடங்களுக்கு முன்புதான் நமது அரசு இந்தச் சிகிச்சைக்கான அனுமதியைக் கொடுத்தது. பிறந்து 3 மாதமேயான குழந்தைக்கு நான் வெற்றிகரமாக இந்தச் சிகிச்சையை இந்தியாவிலேயே முதன்முறையாகச் செய்தேன். அதற்குப் பிறகு ரியாஸ் என்ற 5 வயதுச் சிறுவனுக்கு தாடை அருகே கட்டி வந்து தாடை எலும்பு பாதிக்கப்பட்டது. அவனுக்கும் சிகிச்சையளித்தேன். இந்தியாவிலும், வெளிநாடுகளிலுமாக ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறேன்.

வெளிநாடுகளுக்குப் போய் சிகிச்சை அளிக்கிறீர்களா?

ஆமாம். மலேசியா, மாலத்தீவு, ஆப்ரிக்க நாடுகள், மொரிஷீயஸ்,பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்திருக்கிறேன். பெரும்பாலும் அந்நாடுகளின் அரசின் அழைப்பின் பேரிலேயே சென்றிருக்கிறேன். அங்குள்ள மருத்துவர்களுக்கு முடியாத சிக்கலான சிகிச்சைகளுக்காகவே பெரும்பாலும் சென்று இருக்கிறேன். உதாரணமாக ஒருவருக்கு முகத்தில் குண்டு பாய்ந்து கன்னாபின்னாவென்று சேதம் அடைந்து இருக்கும். குண்டை எடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். அம்மாதிரியான சூழ்நிலைகளில் அவர்கள் என்னை அழைக்கிறார்கள். அப்போது நான் அங்கு சென்று உரிய சிகிச்சை அளிக்கிறேன். ஈரான்,ஈராக் போன்ற நாடுகளில் இருந்து இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.

மாலத்தீவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக சிகிச்சையும் ஆலோசனையும் அளித்திருக்கிறேன். மாலத்தீவில் உள்ள மொழி உட்பட பல உலகமொழிகளில் நான் எழுதிய முகச் சீரமைப்பு மருத்துவ நூல்கள் வெளியாகியுள்ளன.

புத்தகங்களும் எழுதியிருக்கிறீர்களா?

தமிழில் பல் மருத்துவம், முகச் சீரமைப்பு தொடர்பான புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். என்னுடைய "Text book of Or al Maxillof a ci al Surgery' என்ற புத்தகம் முகச்சீரமைப்பு பயிலும் மாணவர்களுக்குப் பாடநூலாக உள்ளது. நான் எழுதிய மருத்துவப் புத்தகங்களுக்காக 3 தடவை தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. தமிழ்நாடு சயின்ட்டிஸ்ட் விருது உட்பட பல தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.