

என் நண்பருக்கு வயது 52. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய் உடையவர். பல வருடங்களாக காலையில் வெறும் வயிற்றில் சீரகப்பொடி, வெந்தயப் பொடி 1 ஸ்பூன் சாப்பிட்டு வருகிறார். இதை மற்றவர்களும் சாப்பிடச் சொல்கிறார். இதனால் பயன் உண்டா?
எஸ்.ராஜகுமார், சிதம்பரம்.
சீரகம் மற்றும் வெந்தயத்தால் நீரிழிவு உபாதையும் இரத்த அழுத்தமும் சீராகிவிடும் என்பதற்கான ஆதாரங்களை ஆயுர்வேதம் எங்கும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை. இவை இரண்டும் வாதம் மற்றும் கப தோஷங்களின் சீற்றத்தால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை நீக்கக் கூடியவை. அந்த வகையில் கபத்தின் சீற்றத்தால் ஏற்படக்கூடிய நீரிழிவு உபத்திரவங்களாகிய பசிக்குறைவு, நாக்கில் ருசியின்மை, வாந்தி, அதிக அளவில் தூக்கம் வருதல், இருமல், மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற நிலைகளில், சீரகத்தை வறுத்தோ, வறுக்காமலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறு, கசப்பு நார்த்தைச் சாறு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் ஊற வைத்து, உலர்த்திப் பொடித்தோ, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, இந்த உபாதைகள் நீங்கி, பசி நன்றாக எடுக்கும். இதனுடன் வெந்தயப் பொடியைச் சேர்க்க வேண்டிய கட்டாயம் கிடையாது. மேலும் வெந்தயம் ஒரு கசப்பான பொருளாக இருப்பதால் அதைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதைப் பலரும் விரும்புவதில்லை. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறி மஞ்சள், இந்துப்பு இவற்றைச் சம அளவில் எடுத்து நெய்விட்டு வறுத்துப் பொடி செய்து சாதத்துடன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வர வாத தோஷத்தின் சீற்றத்தினால் ஏற்படும் நீரிழிவு உபாதைகளான வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், நரம்பு வலி போன்றவை குணமாகிவிடும்.
சீரகமும் வெந்தயமும் குடலிலுள்ள மலத்தை இறுக்கக் கூடியவை. அதனால் மலச்சிக்கலால் அவதியுறும் நீரிழிவு நோயாளிகளுக்கு இவற்றைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல.
வாத கப நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தலை சுற்றல், மயக்கம், நீரடைப்பு ஆகியவற்றிற்கு 30 கிராம் சீரகத்தை அரைலிட்டர் தண்ணீரில் போட்டு 125 மி.லி. ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி, சிறிது நெய்யுடன் கலந்து சாப்பிட, இந்த உபாதைகள் உடனே குறைந்துவிடும். அவர்களுக்குக் கடுங்குளிருடன் காய்ச்சல் ஏற்பட்டால், வெற்றிலையில் சீரகத்தைச் சுருட்டி வாயிலடக்கி மென்று சாப்பிடக் குளிர் நின்றுவிடும். சிறுநீர் எரிச்சல் ஏற்பட்டால், சீரகத்தையும் சிறிது கற்கண்டையும் மென்று சாப்பிடலாம். பசி உணர்ச்சி இல்லாத நிலையில் சீரகத்தையும் உப்பையும் மென்று சாப்பிடலாம்.
கர்ப்பம் தரித்தநிலையில் ஏற்படும் நீரிழிவு நோய் சில பெண்களுக்குப் பிரசவம் ஆன பிறகும் தொடர்ந்து இருக்கக் கூடும். அந்த நிலையில் அது வாத - கப நீரிழிவாக இருந்தால் சீரகமும் கருஞ்சீரகமும் சேர்த்துக் கஷாயம், நீரிழிவின் தாக்கம் குறையவும், கருப்பையைச் சுருங்க வைப்பதற்கும், தாய்ப்பால் பெருகவும், வயிற்றில் வாயு தங்காமலிருக்கவும், வயிற்றோட்டம் ஏற்படாதிருக்கவும் சாப்பிடலாம்.
அதுபோலவே கர்ப்பம் தரித்த 4-5 மாதங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் வறுத்த பெருஞ்சீரகத்தை வெந்நீரிலிட்டு ஊற வைத்து வடித்துச் சாப்பிட சிறுநீர் தாராளமாகப் பெருகும். உடல் லேசாக இருக்கும். அசதி, குமட்டல் இருக்காது. கருவும் நன்றாக வளரும். சர்க்கரையின் அளவும் கட்டுப்பட வாய்ப்பிருக்கிறது.
வாத கப நீரிழிவினால் உடல் நரம்புகள் பலவீனமாகக் கூடும். உடல் மெலிந்துவிடும். வெந்தய விதை பொதுவாக உடலுக்கும் தனித்து நரம்புகளுக்கும் நல்ல பலமளிக்கக் கூடியது. தாது புஷ்டி, பசி உண்டாக்கக் கூடியது. இதிலுள்ள குழ குழப்பும், நெய்ப்பும் குடலின் வேக்காளத்தையும் பரபரப்பையும் குறைக்க உதவுகின்றன. வெந்தயம் 1 பங்கு கோதுமை 8 பங்கு இவற்றை லேசாக வறுத்து இடித்து வைத்துக் கொண்டு நீங்கள் குறிப்பிடுவதுபோல, காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட, நல்ல பசி எடுக்கும். மலச்சிக்கல் இருக்காது. நீரிழிவு உபாதை இல்லாதவர்கள், இதில் சர்க்கரை சேர்த்து லட்டு தயாரித்துக் கொண்டு தினமும் சாப்பிட, நல்ல பசி எடுக்கவும் மலசுத்திக்கும் உதவும்.
ஆக, சீரகத்தை வெறும் வயிற்றிலும் சாப்பிட்டு, வெந்தயத்தை உணவுப் பொருட்களுடன் கலந்து சாப்பிடுவதாலும் நமக்கு ஏற்படும் நன்மைகள், பசிக்குறைவு, ருசியின்மை, வாந்தி, அதிக தூக்கம், இருமல், ஜலதோஷம், உடல் நடுக்கம், இதயப் பிடிப்பு, குடல்வலி, நரம்பு பலவீனம், குடல் வேக்காளம் போன்ற உபாதைகள் நீங்குவதுதான்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.