ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஐம்பதுக்கும் மேல் வாயுவின் ஆதிக்கம்!

என் வயது 48. எடை 80 கிலோ. மாதவிலக்கு நின்ற பிறகு அதிகப்படியான களைப்பும் சோர்வும் இருக்கிறது. இதயம் படபடப்பாக இருக்கிறது. தொலைபேசியில் ஏதாவது உறவினரின் மரணச் செய்தி கேட்டால் 8-10 மணி நேரங்களுக்குக் களை
Updated on
2 min read

என் வயது 48. எடை 80 கிலோ. மாதவிலக்கு நின்ற பிறகு அதிகப்படியான களைப்பும் சோர்வும் இருக்கிறது. இதயம் படபடப்பாக இருக்கிறது. தொலைபேசியில் ஏதாவது உறவினரின் மரணச் செய்தி கேட்டால் 8-10 மணி நேரங்களுக்குக் களைப்பும் படபடப்பும் இருக்கிறது. எனக்கு இதயப் பலவீனம் இருக்குமா? மாதவிலக்கு நின்று போனதால் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களால் இப்படி ஏற்படுகிறதா?

(பாத்திமா, உறையூர், திருச்சி.)


மனிதர்கள் பால்யம்,யெüவனம், முதுமை ஆகிய மூன்று நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. நிலம் மற்றும் நீரின் ஆதிக்கம் கொண்ட கபதோஷத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் மனித உடல் போஷணையுடன் சுமார் 20 -25 வயது வரை வளர்கிறது. அடுத்த 25-50 வயது வரை நெருப்பின் ஆதிக்கம் கொண்ட பித்த தோஷத்தின் சீரான செயல்பாடுகளால் உடலில் வளர்ச்சியும் அழிவும் ஒரே சீராக அமைகின்றன. 50 வயதுக்கு மேற்பட்டு வாயு மற்றும் ஆகாயத்தின் ஆதிக்கம் கொண்ட வாயு தோஷத்தின் வழியாக முதுமையில் வளர்ச்சி பெறுவதற்கும் மேலாக உடல் தேய்வு அதிகமாகிறது.

மாதவிலக்கு ஏற்பட்டுள்ள உங்களுக்கு வாத தோஷத்தின் குணங்களாகிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, கரடு, உடலில் நுண்ணிய இடங்களிலும் கூட நுழையும் தன்மை மற்றும் ஓரிடத்தில் நிற்காத நிலையற்ற தன்மை ஆகியவற்றால் கருப்பையைச் சார்ந்த முட்டை உற்பத்தி ஆகும் பகுதியில் அதன் ஆவேசத்தின் விளைவாகத் தேய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து சுரந்து கொண்டிருந்த என்ட்ரோஜன் ஹார்மோன் 50 % அளவும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு 66% அளவும் குறைந்துவிட்டன.

இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை இந்த ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அளிக்கிறது. நல்ல கொழுப்பாகிய ஹெச்டிஎல் அளவை அதிகமாகவும், கெட்ட கொழுப்பாகிய எல்டிஎல் அளவைக் குறைத்தும் ரத்தத்திலுள்ள ட்ரைகிளிசரடைஸ் எனும் கொழுப்பின் அளவை நல்ல கட்டுப்பாட்டிலும் வைக்கக் கூடிய இந்த ஈஸ்ட்ரோஜன் சுரப்பு வாயுவின் ஆதிக்கத்தினால் இழந்துள்ள உங்களுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

சோயா பீன்ஸில்  ஐசோஃபிளவோன் எனும் சத்துப் பகுதியில் அதிக அளவில் இந்த ஈஸ்ட்ரோஜன் புதைந்திருப்பதால் அதை உணவாகக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் கருத்தை நீங்களும் ஏற்று பொடி செய்த சோயா பீன்ஸ் 5 கிராம், எள்ளு (கறுப்பு)ப் பொடி 5 கிராம், தேன் 10-15 மி.லி. குழைத்து வைத்துக் கொண்டு ஒரு நாளில் சிறிது சிறிதாகச் சாப்பிட்டு வரவும். 1.2 கிராம் கால்சியம், வைட்டமின் ஏ, சி மற்றும் இ போன்றவற்றை  அன்றாடம் உணவில் சேரும்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். தேங்காய், மாங்காய் சுண்டலில் இந்தச் சத்துகள் கிடைக்கும். கேரட், நெல்லிக்காய், பச்சை மிளகாய்களில் முறையே ஏ, சி மற்றும் இ சத்துகள் உள்ளன.

நீங்கள் எளிதில் செரிக்கக்கூடிய அதே சமயத்தில் உடல் வலிவைத் தரக்கூடியதும், தோலின் மென்மையையும், வழ வழப்பையும் பாதுகாக்கக் கூடியதும், மனதில் கொந்தளிப்பும், தடுமாறுதலும் ஏற்படுத்தாத வகையில் உணவை அமைத்துக் கொள்ளுதல் நலம். வாயுவின் சீற்றத்தை அதிகப்படுத்தும் காரம், துவர்ப்பு, கசப்புச் சுவையுள்ள இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை சற்றுக் கூடுதலாகச் சேர்க்கலாம். உப்புச் சுவையில் சாதாரண உப்பைவிட இந்துப்பு நல்லது.

மிளகு, மிளகாய், சுண்டை வற்றல், அத்திப் பிஞ்சு, பாகற்காய் முதலியவற்றை மிகக் குறைந்த அளவில் சேர்க்கலாம். முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கோவை, தூதுவளை,வல்லாரை, மிதிபாகல் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, காராக்கருணை, மணத்தக்காளி வற்றல் போன்றவை உணவில் அதிகம் சேர்க்கத்தக்கவை. உப்பிட்ட ஊறுகாய்களில் நார்த்தை, இஞ்சி,களாக்காய் சாப்பிட உகந்தவை.

பால், நெய், தயிர், வெண்ணெய், இனிப்பு மாதுளை, மாம்பழம், வாழைப்பழம், திராட்சைப் பழம், அரிசி, கோதுமை, உளுந்து உணவிற்கு ஏற்றவை. அதிக உடற்பயிற்சி, இரவில் கண்விழித்தல் தவிர்க்கவும். புலாலுணவு, முட்டை, மீன் முதலியவற்றாலான உணவு, உடல் உட்புற வறட்சி நீக்கி எண்ணெய்ப் பசை தருவதாக இருந்தால் நல்லது.  வறட்சி, காரம் மிக்கது ஏற்றதல்ல.

மாதவிலக்கு நின்று போனதால் ஏற்பட்ட ஹார்மோன் குறைபாடுகளால் பெண்களுக்கு மனசைச் சார்ந்த சத்வம் எனும் குணம் பலவீனம் அடைந்து ரஜஸ் எனும் மனதின் தோஷம் கூடுவதற்கு வாய்ப்பிருக்கிற வாயுவின் சஞ்சாரம் மனதை வழி நடத்திச் செல்லும் குழாய்களில் சீற்றமாவதால் இவ்வாறு ஏற்படக் கூடும். அதுபோன்ற நிலையில் நீங்கள் குறிப்பிடும் களைப்பும், படபடப்பும் ஏற்படும். முன்குறிப்பிட்ட உணவு வகைகளால் வாயுவின் சீற்றத்தைக் குறைத்து ஹார்மோன் சுரப்பு மேம்படுமானால் உங்களுடைய உபாதைகள் குறைந்துவிடும்.

சதாவரீகுலம், குமார்யாஸவம், பலசர்ப்பிஸ், தான்வந்திரம் கஷாயம், தான்வந்திர தைலம், அசோகாரிஷ்டம், அசோககிருதம் போன்ற பெண்மையைப் போற்றும் ஆயுர்வேத மருந்துகளின் மூலம் நீங்கள் நிறைவான பலனை விரைவாகப் பெறலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com