'யாரும் செய்யாத ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். பழைய தமிழ் இலக்கியப் பாடல்களுக்கு இதுவரை யாரும் ஓவியம் வரைந்ததில்லை. என் அம்மா கல்பனாவிடம் இதைப் பற்றிக் கேட்டேன். அவர் எம்.ஏ., எம்.ஃபில், பி.எட் படித்தவர். என்னையும், என் தங்கையையும் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் வேலைக்குப் போகவில்லை. நான் இப்படிக் கேட்டதும், திருக்குறளை ஓவியமாக வரையலாம் என்று சொன்னார். ஒவ்வொரு திருக்குறளுக்கும் அவர் பொருள் சொல்லச் சொல்ல அதை நான் மிகவும் கவனமாகக் கேட்பேன். பின்பு அந்தக் குறளுக்கு எப்படிப் படம் வரையலாம் என்று கற்பனை செய்து பார்ப்பேன். இறுதியில் வரைந்து விட்டேன். திருக்குறள் முழுவதற்கும் படம் வரைந்து முடிப்பதற்கு 3 மாதங்கள் தேவைப்பட்டன. அந்தக் கண்காட்சியை இறையன்பு ஐ.ஏ.எஸ். துவக்கி வைத்தார். என் ஓவியங்களைப் பார்த்துவிட்டு அவர் மிகவும் பாராட்டினார். அதற்குப் பின்பு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கும், ஆண்டாள் திருப்பாவையின் சில பாடல்களுக்கும் ஓவியம் வரைய விரும்பினேன்.'' என்கிறார் கீர்த்தி மகிழ்ச்சியுடன்.