பதிவு: தன்னலமில்லாத கறுப்பு ரோஜா!
கல்விக் கண் திறந்தவர் காமராஜர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் அதிகம். கல்விக் கூடங்கள்..


கல்விக் கண் திறந்தவர் காமராஜர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் அதிகம். கல்விக் கூடங்கள் அதிகம். ஏற்படுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டங்கள் அதிகம். இன்றைய வளர்ச்சிக்கு அன்றே அடித்தளம் இட்டவர் காமராஜர்.
""விடுதலைப் போராட்டக் காலத்தில் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் காமராஜர். தமிழகத்தில் அவர் ஆட்சியிலிருந்த போது தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் அதிகம். ஆனால் காமராஜரைப் பற்றிய உருப்படியான ஓர் ஆவணப்படம் கூட இதுவரை எடுக்கப்படவில்லை. இது எனக்கு ரொம்ப வருத்தத்தைத் தந்தது. காமராஜரைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் காமராஜரின் வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சியில் இறங்கினேன்'' என்கிறார் ஆர்.பிரபாகரன். அவர் "கறுப்பு ரோஜா' என்கிற காமராஜ் பற்றிய தொலைக்காட்சித் தொடரின் தயாரிப்பாளர்.
""காமராஜர் பற்றிய தொலைக்காட்சித் தொடர் எடுக்கப் போகிறார்கள் என்றதுமே நான் உற்சாகமாகிவிட்டேன். காமராஜர் பிறந்த ஊரான விருதுநகருக்கு முதன் முதலில் போனோம். அன்று அவருக்குப் பிறந்த நாள். ஊரில் ஊர்வலம், மீட்டிங் என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அங்கேயிருந்து ஆரம்பித்தோம். காமராஜர் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தாரோ அந்த இடங்களுக்கெல்லாம் போய் படம் பிடித்து இருக்கிறோம்'' என்கிறார் மோனிகா. கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பவராகவும் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர் மோனிகா. இந்தத் தொடரின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.
""காமராஜரின் தங்கை மகன்கள் மோகன், ஜவஹரிடம் பேட்டி எடுத்திருக்கிறோம். காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் தங்கையின் குடும்பத்திற்காக அரசு உதவிகள் எதையும் செய்ததில்லை. ஒருமுறை நியாயமான முறையில் தங்கையின் மகன்கள் டெண்டர் ஒன்றை எடுக்க முயன்றபோது, "நீங்கள் டெண்டர் எடுத்தால் நான்தான் அதற்கு உதவி செய்தேன் என்பார்கள். எனவே வேண்டாம்' என்று காமராஜ் தடுத்திருக்கிறார். தங்கையின் குடும்பத்தினர் தொழில் செய்வதற்கோ, அரசு வேலைகளுக்கோ அவர் ஒருபோதும் சிபாரிசு செய்ததில்லையாம். இப்போதுள்ள அரசியல் தலைவர்களை நினைத்துப் பாருங்கள்'' என்கிறார் நெகிழ்ச்சியுடன் பிரபாகரன்.
காமராஜரைப் பற்றிய இந்தத் தொடர், வரும் 2011 - ஜனவரி மாதத்திலிருந்து பொதிகைத் தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் ஒளிபரப்பாக இருக்கிறது.
""காமராஜர் விவசாயத்திற்குச் செய்தவை ஏராளம். கேரள எல்லையில் உள்ள தொட்டிப்பாலம் என்ற இடத்துக்குப் போய் படம் பிடித்தோம். இரண்டு மலைகளையும் இணைக்கும் அந்தப் பாலத்தின் வழியாகத் தண்ணீர் வருகிறது. அந்தப் பகுதி மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக காமராஜ் மேற்கொண்ட திட்டம்தான் அது'' என்று சொல்லும் எம்.நிர்மல் இந்த ஆவணப்படத்தின் இயக்குநர். பொறியியல் படிப்பு முடித்தவர்.
""காமராஜின் மதிய உணவுத் திட்டம் ஆரம்பித்த இடம் எட்டயபுரம் பள்ளி ஒன்றில்தான். நாங்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டோம். பின்னர் அந்தப் பள்ளி நிர்வாகிகளுடன் பேசினோம். இது மறக்க முடியாத அனுபவம்'' என்கிறார் மோனிகா.
""காமராஜர் எதையும் திட்டமிட்டுச் செயல்பட்டார். உதாரணமாக தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி தந்தார் என்றால், அதற்குத் தேவையான மின்சாரத்திற்காக மின்நிலையங்களை ஆரம்பித்தார். அந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஆட்கள் வேண்டுமே? அவர்களுக்குக் கல்வி வேண்டுமே? அதற்காக ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்து கல்வி கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். அதுபோல தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அவருக்குத் தெரிந்திருந்தது. பிஎச்இஎல் தொழிற்சாலையை எங்கே ஆரம்பிக்கலாம் என்று அதிகாரிகள் குழம்பிக் கொண்டிருந்தபோது, திருச்சிக்கு அருகில் திருவெறும்பூரில் ஆரம்பிக்கச் சொன்னார். அந்த ஊரில் தொழிற்சாலைக்குத் தேவையான எல்லா வசதிகளும் இருப்பதைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். காமராஜ் போன்ற தலைவர்களை இப்போது பார்ப்பது அரிது'' என்கிறார் பிரபாகரன்.
""காமராஜருடன் அரசியலில் ஈடுபட்டவர்கள், அவருடன் பழகியவர்கள், அவருக்குக் கீழ் வேலை செய்தவர்கள் என நிறையப் பேரை அணுகி காமராஜைப் பற்றிய விவரங்களைக் கேட்டுப் பதிவு செய்திருக்கிறோம். நெடுமாறன், நெல்லை கண்ணன், பழ.கருப்பையா, குமரி அனந்தன் என நிறையப் பேரின் நேர்காணல்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றிருக்கின்றன'' என்கிறார் இந்தத் தொடரின் இயக்குநர் எம்.நிர்மல். நிர்மலுக்கு இந்தத் தொடரை இயக்குவது புது அனுபவம். நிர்மலின் தந்தை எஸ்.கே.முருகன் இந்தத் தொடருக்கானத் தகவல்களைத் தொகுத்துத் தந்ததோடு வசனமும் எழுதியிருக்கிறார்.
""காமராஜரின் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தது நெகிழ்ச்சியான அனுபவம். தாய்மாமன் என்ற முறையில் தங்கை மகன்களின் திருமணத்தை காமராஜே நடத்தி வைத்திருக்கிறார். அதே சமயம் அவர்கள் உதவி என்று கேட்டுப் போனபோது உதவி செய்யாமல் விரட்டி அடித்திருக்கிறார். தனது தாயைப் பார்க்கக் கூட அவர் நேரம் ஒதுக்கியதில்லையாம்'' என்று சொல்லும் மோனிகா, அவர் எதிர்பாராத ஒரு சம்பவம் படப்பிடிப்பின் போது நடந்தது என்றார்.
சென்னை மெரினா கடற்கரையில் இந்தத் தொடருக்கான படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் காமராஜைப் பற்றிக் கேட்டிருக்கிறார் மோனிகா. அந்தச் சிறுமி கொஞ்சமும் தயங்காமல் பள்ளியில் முதன் முதலில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் காமராஜ் என்று சொன்னாராம். ""காமராஜைப் பற்றி இளம் தலைமுறைக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக ஆவணப் படத் தொடர் எடுக்கும் எங்களுக்கு அந்தச் சிறுமியின் பதில் இனிய அதிர்ச்சியாக இருந்தது'' என்கிறார் மோனிகா சிரிப்புடன்.
""காமராஜ் போன்ற தலைவர்கள் பிறப்பது அரிது. சுயநலம் அதிகமாகிவிட்ட இக்காலத்தில் அவரைப் போன்ற தலைவர்களைப் பற்றிய பதிவுகள் மிக அவசியம். அப்போதுதான் வருங்காலத்திலாவது இன்றைய சீர்கெட்ட நிலைமைகள் மாறும். காமராஜ் உண்மையில் என்னவெல்லாம் செய்தார் என்பதை இந்த ஆவணப்படத்தில் தொகுத்துத் தந்திருக்கிறோம். இந்த ஆவணப்படத்தை எடுப்பதால் எங்களுக்கு பணரீதியாக எந்த லாபமும் இல்லாமற் போகலாம். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தோம் என்ற மனதிருப்தி இருக்கிறது'' என்று சொல்லும் பிரபாகரன், ""காமராஜ் பற்றிய ஆவணப் படம் எடுக்கப் போகிறோம் என்று சொன்னபோது அதற்குப் பலரிடமும் கிடைத்த வரவேற்பு எங்களை நெகிழ வைத்துவிட்டது'' என்கிறார்.
""தொலைக்காட்சிகளில் வழக்கமாக ஒளிபரப்பப்படும் கண்ணீர்த் தொடர்களுக்கு மத்தியில் நான் இயக்கிய "கறுப்பு ரோஜா' மிக மிக வித்தியாசமானதாக இருக்கும். அதே சமயம் வழக்கமான பல ஆவணப்படங்களைப் போல பார்ப்பவர்களுக்கு அலுப்பூட்டாது'' என்கிறார் உறுதியாக நிர்மல்.
ஜனவரியில் ஒளிப்பரப்பாக இருக்கும் காமராஜைப் பற்றிய தொடரைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிட அவர்களிடமிருந்து விடைபெற்று வந்தோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...