எச்சரிக்கை: வேலை விளம்பரங்கள்... ஜாக்கிரதை!

வேலை வாய்ப்பு மட்டுமல்ல, மருத்துவம், வீட்டுவசதி என பல்வேறு துறைகளிலும் இத்தகைய அடையாளம் தெரியாத நிறுவனங்களின்
எச்சரிக்கை: வேலை விளம்பரங்கள்... ஜாக்கிரதை!
Published on
Updated on
3 min read

மிக மிக அதிகமாக படித்தாலே வேலை கிடைக்காமல் திண்டாடும் காலம் இது. எட்டாவது படித்தவர் முதல் எம்.பி.ஏ., படித்தவர் வரை வேலை தருகிறோம் என்று ஒரு விளம்பரம் வந்தால் யார்தான் ஆசைப்படமாட்டார்கள்? அதுவும் மாதச் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் வரை என்றால் ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் கூட அந்த வேலையை விட்டுவிட்டு இதில் சேர்ந்துவிடலாமே? என்று நினைப்பார்கள். முழுநேர வேலை, பகுதி நேர வேலை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் வேலை என்று உங்கள் வசதிப்படி வேலை தருகிறோம் என்ற அறிவிப்பு வேறு. இல்லத்தரசிகள், கல்லூரி மாணவ, மாணவியர் எல்லாரும் அணுகலாம். வேலை இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, ஐஎஸ்ஓ 9001 சான்றிதழ் பெற்ற நிறுவனத்தில் என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த விளம்பரங்கள் எங்கே செய்யப்படுகின்றன என்று கேட்கிறீர்களா? நமது தமிழ்நாட்டில், சிங்காரச் சென்னையில்தான்.

 சென்னை மாநகரில் ஓடும் பேருந்துகள், மின்சார ரயில்கள், மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன இந்த விளம்பரங்கள்.

 வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். பெண்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட செல்போன் எண்களில் தொடர்புக் கொள்ளவும் என குறிப்பிட்டு சில செல்போன் எண்களுடன் இப்படிப்பட்ட விளம்பரங்கள் ஒட்டப்படுகின்றன.

 ஏதேதோ காரணங்களால் பிழைப்புத் தேடி சென்னைக்கு வரும் பலருக்கும், சென்னையிலேயே பிறந்து வளர்ந்து வேலையில்லாமல் திண்டாடும் பலருக்கும் இத்தகைய விளம்பரங்கள் கலங்கரைவிளக்கமாகவே காட்சியளிக்கின்றன.

 முகவரி எதுவும் இந்த விளம்பரங்களில் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், தொடர்புக்கு என அதில் குறிப்பிடப்படும் செல்போன் எண்கள் மட்டும் அடிக்கடி மாறி வருகின்றன. சுமார் 20-க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இப்படி மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள், வேலை கிடைக்க என்ன செய்வது என்று தெரியாதவர்களைக் குறிவைத்தே இந்த விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய விளம்பரங்கள் எதிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகவரியை மறந்தும் தந்திருக்க மாட்டார்கள். என்ன வேலை? எங்கே வேலை? என்பது போன்ற விவரங்கள் எதுவும் தரப்படுவதில்லை.

 இதில் குறிப்பிடப்படும் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு பேசினோம். சென்னையில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு, ""அந்த இடத்துக்கு வந்துவிடுங்கள். நாங்களே உங்களை எங்கள் இடத்துக்கு அழைத்துச் செல்கிறோம்'' என்று மர்மக் கதை திரைப்படத்தில் வருவது போலக் கூறுகிறார்கள். வேலை தொடர்பான விவரங்களையோ, தங்கள் நிறுவனம் எங்குள்ளது என்பது தொடர்பான விவரங்களையோ அவர்கள் தெரிவிப்பதில்லை.

 அப்படி நேரடியாகச் சென்ற சிலரிடம், ""உங்கள் தகுதிக்கு மாதம் 5000 ரூபாய் சம்பளத்தில்தான் வேலை இருக்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். என்ன வேலை என்று இப்போது சொல்ல முடியாது'' என்கிறார்கள். டெபாசிட் தொகையைத் திருப்பித் தருவதைப் பற்றிக் கேட்டால், ""நீங்கள் டெபாசிட்டைக் கட்டிவிட்டு வேலைக்குச் சேருங்கள். டெபாசிட்டை நிச்சயம் திருப்பித் தருவோம்'' என்று மழுப்பலாகச் சொல்கிறார்கள். 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்குத்தான் இந்த டெபாசிட்டாம். 25 ஆயிரம் சம்பளம் வேலைக்கு எவ்வளவு கேட்பார்கள் என்று தெரியவில்லை.

 இதோ போல வேலை தேடிச் சென்ற இளம்பெண் ஒருவரை மேலும் கீழுமாகப் பார்த்து, ""எந்த வேலை என்றாலும் ஓ.கே.வா?'' என்று ஒரு மாதிரியாகக் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பெண் சற்றுச் சுதாரித்து, ""நாளைக்கு வருகிறேன்'' என்று சொல்லி தப்பித்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணைப் போலச் சுதாரிக்காமல் எத்தனை இளம்பெண்கள், இல்லத்தரசிகள் இவர்களிடம் போய் மாட்டிக் கொண்டார்களோ? இதனால், இப்படிப்பட்ட விளம்பரங்களின் மீதான சந்தேகம் வலுத்து வருகிறது.

 வேலை வாய்ப்பு மட்டுமல்ல, மருத்துவம், வீட்டுவசதி என பல்வேறு துறைகளிலும் இத்தகைய அடையாளம் தெரியாத நிறுவனங்களின் விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன.

 குறிப்பாக, குள்ளமானவர்களை உயரமாக்குகிறோம், ஒல்லியானவர்களை பருமனாக்குகிறோம். பருமனாக உள்ளவர்களை ஒல்லியாக்குகிறோம் என்றும் எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கை மருத்துவம் என்றும் விளம்பரங்கள் ஒட்டப்படுகின்றன. ஆனால் அந்த இயற்கை மருத்துவ மையத்திற்கு முகவரி எதுவும் இருக்காது. செல்போன் எண்கள் மட்டும் தரப்பட்டிருக்கும்.

 இதற்கு அடுத்தபடியாக, வீட்டுமனை விற்பனையிலும் இது தொடர்கிறது. உதாரணமாக, 1200 சதுர அடி நிலத்தின் விலை 96 ஆயிரம் ரூபாய் என்றும். இந்தத் தொகையைக் கொடுத்து நீங்கள் நிலம் வாங்கினால், உங்களுக்கு மாதம் | 1,500 வீதம் 54 மாதங்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் விளம்பரங்கள் வருகின்றன. அதாவது 96 ஆயிரம் ரூபாயில் 81 ஆயிரம் ரூபாயை நான்கரை வருடங்களில் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். நிலத்தின் விலை வெறும் 15 ஆயிரம் ரூபாய்தான். வாங்கவே முடியாத அளவுக்கு அதிக அளவில் நிலம் விற்கும் விலையில் இது நடைமுறையில் சாத்தியமா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி.

 இருந்தாலும், இப்படிப்பட்ட விளம்பரங்கள் தங்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லையே, தங்களால் உயரமாக வளர முடியவில்லையே, தங்களால் சொந்தமாக வீடு வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருப்பவர்களை எளிதில் ஈர்த்துவிடுகின்றன. நம்ப வைத்துவிடுகின்றன.

 இவ்வாறு நம்புபவர்கள் இந்த விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்புக் கொண்டு அதன் பின்னணியில் இருப்பவர்களால் மோசடி செய்யப்பட்டால், பாதிக்கப்படுபவர்களால் போலீஸ், புகார் என்று எந்த அளவுக்கு நிவாரணம் பெற முடியும் என்பது தெரியவில்லை.

 இத்தகைய விளம்பரங்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல் பஸ்கள், பஸ் நிலையங்கள், ரயில்கள், ரயில் நிலையங்களில் ஒட்டப்படுகின்றன. இப்படிப்பட்ட விளம்பரங்களை அகற்றத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அகற்றப்பட்ட விளம்பரங்களின் இடத்தில் மறுநாளே ஆயிரக்கணக்கான விளம்பரங்கள் உடனே ஒட்டப்படுகின்றன.

 இந்த விளம்பரம் செய்பவர்களில் ஒரு சிலர் உண்மையிலேயே வேலை வாங்கித் தரலாம். ஆனால் பலர் ஏமாற்றுவதாகவே தெரிகிறது. எனவே காவல்துறை ஏன் இந்த விளம்பரங்களைச் சோதித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனைக் கேட்டோம்.

 ""இது தொடர்பாக எங்களிடம் இதுவரை புகார் எதுவும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தான் புகார் அளிக்க வேண்டும் என்பதில்லை, பொதுமக்கள் யாராவது இது தொடர்பாக புகார் அளித்தாலும் இத்தகைய விளம்பரங்கள் வெளியிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளது. நாங்களாக சோதனை நடத்தி இத்தகைய விளம்பரங்களை கண்டறிந்து, அவற்றின் பின்னணியில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை'' என்கிறார் அவர்.

 ""இவ்வாறு புகார் வரும் வரை காத்திருப்பது தேவையற்றது. இது தொடர்பான தகவல் தெரிய வந்தாலே போதும், அதனை உறுதி செய்துக் கொண்டு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.

 தங்களுக்கு தெரிவிக்கப்படும் தகவல் சரியானதுதானா என்பதை சரிபார்த்துக் கொண்டால் மட்டும் போதுமானது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது போலீஸôரின் கடமை'' என்கிறார் வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன்.

 யாரோ ஒருவர் வெளியிடும் சிறிய அளவிலான விளம்பரம் தானே என்று அதனைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சென்றால் பிரச்னையில்லை. ஆனால், எல்லாரும் அப்படிச் செல்லமாட்டார்கள்.

 மக்களை நம்ப வைத்து மோசடி செய்கிறவர்களை முளையிலேயே கிள்ளி எறியாமல்,அவர்களால் பெருமளவில் பலர் பாதிக்கப்பட்டு,பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுப்பது என்பது, வரும் முன் காக்கும் செயல் அல்ல. அதேசமயம் வருமுன் காக்க நடவடிக்கை எடுத்தால் உண்மையிலேயே வேலை தேடித் தரும் நிறுவனங்கள் காவல்துறையின் சோதனை என்கிற பெயரில் தொல்லைக்குள்ளாவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

 மக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்காமல் விழிப்பாக இருப்பது ஒன்றுதான் இதற்கு ஒரே தீர்வு என்று தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com