புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

முயற்சி: அம்மாக்கள் நடத்தும் பள்ளி!

பள்ளியில் சந்தித்து நண்பர்களான அம்மாக்கள் மூவர் ஒன்று சேர்ந்து ஒரு பள்ளியைச் சென்னை கோபாலபுரத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களுடைய குழந்தைகளைப் பள்ளியில் கொண்டு போய்விடும்போது ஒருவரையொருவர் பார்த்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:07 pm

ந. ஜீவா

பள்ளியில் சந்தித்து நண்பர்களான அம்மாக்கள் மூவர் ஒன்று சேர்ந்து ஒரு பள்ளியைச் சென்னை கோபாலபுரத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களுடைய குழந்தைகளைப் பள்ளியில் கொண்டு போய்விடும்போது ஒருவரையொருவர் பார்த்துப் பழகி, அந்த அம்மாக்கள் நண்பர்களாகியிருக்கிறார்கள். அவர்களில் இருவர் பஞ்சாபி. ஒருவர் குஜராத்தி. அவர்கள் மூவருக்கும் நாமே ஒரு நல்ல பள்ளியை ஆரம்பித்தால் என்ன? என்று தோன்றியிருக்கிறது.

பள்ளியை எப்படி ஆரம்பித்தார்கள்? ஏன் ஆரம்பித்தார்கள்? என்று கேட்டோம். எல்லாரையும் முந்திக் கொண்டு பதில் சொல்ல வந்தார் பூஜா ஷா.

'சின்ன குழந்தைகளுக்கு எது முக்கியம்? எவ்வளவோ மாண்டிசோரி பள்ளிகள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் எழுத்தையும் எண்களையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்குத் தேவை, அம்மாவிடம் உள்ள நெருக்கம், அன்பு. அதைப் பல பள்ளிகள் தருவதில்லை. குழந்தைகளுக்கு வீட்டில் இருப்பதைப் போன்ற சூழ்நிலை பள்ளியில் இருக்க வேண்டும். நாங்கள் மூவரும் எங்கள் குழந்தைகளை எல்.கே.ஜி.யில் சேர்த்த பின்னால்தான் அவர்கள் படித்த பள்ளியில் இவை எல்லாம் இல்லாமலிருப்பது தெரிந்தது.

ஒரு வகுப்பில் 30-40 பிள்ளைகளை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி தேவைகள் இருக்கும். தனித்தனி திறமைகள் இருக்கும். நிறையக் குழந்தைகள் இருந்தால் அவற்றை ஆசிரியர்களால் தெரிந்து கொள்ள முடியாது. அப்படியானால் அந்த குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி தடைபட்டுவிடும்.

குழந்தைகளைச் சிறிய வயதிலேயே நன்றாக வளர்த்தால்தான் அவர்கள் பெரியவர்களாகும் போது மிகச் சிறந்த மனிதர்களாக ஆவார்கள். எனவே குழந்தைகளுக்குப் பல்வேறு திறமைகளை ஏற்படுத்தும் துவக்கப் புள்ளியாக ஆரம்பப் பள்ளிகள் இருக்க வேண்டும் என நினைத்தோம். அப்படி ஒரு பள்ளியை நாமே ஆரம்பித்தால் என்ன என்று நினைத்தோம்'' என்றார்.

குழந்தைகளுக்கான பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதற்காக நீங்கள் ஏதாவது பயிற்சி பெற்றிருக்க வேண்டுமே? என்று கேட்டோம். 'நாங்கள் மூவருமே மாண்டிசோரிப் பயிற்சி பெற்றோம். ஆனால் நாங்கள் ஆல்ப்ஸ் என்ற பெயரில் சென்னை கோபாலபுரத்தில் நடத்தும் பள்ளியில் வெறும் மாண்டிசோரி முறையில் மட்டும் வகுப்புகளை நடத்துவதில்லை. விளையாட்டுப் போல கல்வி, மாண்டிசோரி முறை இரண்டையும் கலந்து நாங்கள் எங்கள் பள்ளிக்கான தனிப் பாடத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்'' என்ற ரிச்சா டிக்மானியின் பூர்விகம், ராஜஸ்தான். திருமணமாகிய பின்புதான் சென்னைவாசியாகியிருக்கிறார் அவர்.

'எல்லாப் பள்ளிகளையும் போலவே நாங்கள் குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றுத் தருகிறோம். அதே சமயம் படம் வரைதல், கதை சொல்லுதல் போன்றவற்றையும் கற்றுத் தருகிறோம். குழந்தைகளுக்கு வெறும் சொற்களைக் கற்றுக் கொடுத்தால் மட்டும் போதாது. ஆப்பிள் என்ற சொல்லுடன் ஆப்பிள் என்ற பொருளையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் நேரடியாக எதையும் பார்த்துத் தெரிந்து கொள்ள உதவுகிறோம்.'' என்று சொல்கிறார் மகிழ்ச்சியுடன்.

'கார்களைக் கழுவுவதை குழந்தைகள் பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்களையே கார்களைக் கழுவச் சொல்வோம். இதில் குழந்தைகள் விளையாட்டுப் போல மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறார்கள். வெளியிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து இசை, நடனம், உடற்பயிற்சி எல்லாம் கற்றுக் கொடுக்கிறோம். சொன்னால் நம்பமாட்டீர்கள். எங்கள் பள்ளியில் குழந்தைகளுக்கான ஜிம் உள்ளது. நீச்சல் குளம் உள்ளது. அதில் அவர்கள் ஜாலியாக நீந்திக் குளிப்பதை பார்க்க நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் பூஜா ஷா.

'எங்கள் பள்ளியில் ஒன்றரை வயதுக் குழந்தை முதல் நான்கரை வயதுக் குழந்தைகள் வரை படிக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு தீம் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு வாரம் சொல் பயிற்சி, இன்னொரு வாரம் நாடகம், அதற்கடுத்த வாரம் நாடகம், அடுத்த வாரம்

கதை சொல்லுதல் என்று நிறையத் தீம்களை வைத்திருக்கிறோம். இந்தத் தீம்களின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் வகுப்புகள் நடைபெறும்.'' என்கிறார் பூஜா குப்தா. இவரும் பஞ்சாபிதான். ரிச்சா டிக்மானியைப் போலவே திருமணமான பின்புதான் சென்னை மண்ணில் கால் வைத்திருக்கிறார்.

பூஜா ஷா சென்னையில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். நல்ல தமிழில் கொஞ்சம் வடக்கத்தி வாசனை வீச, எப்போதும் சிரிப்புடன் பேசுகிறார்.

'எங்கள் பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டு நடிகர் மாதவனின் பையனை எங்கள் பள்ளியில் சேர்த்தார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பையனும் எங்கள் பள்ளியில் படிக்கிறார். தமிழ்நாட்டின் முக்கியமான ஓர் அரசியல்வாதியின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையை எங்கள் பள்ளியில் சேர்க்க வந்தார்கள். நாங்கள் மிகவும் பணிவாக அதை மறுத்துவிட்டோம். ஏனென்றால் பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் குழந்தையுடன் எப்போதும் இரண்டு பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்று சொன்னார்கள். அப்படி இரு பாதுகாவலர்கள் எப்போதும் இருந்தால் அதைப் பார்க்கும் பிற குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படும் என்று மென்மையாகச் சொல்லிப் புரிய வைத்தோம்.''

'நாங்கள் நடத்தும் பள்ளியின் பெருமை என்று எதையாவது சொல்ல வேண்டுமென்றால், பெற்றோரை நாங்கள் மாதம் ஒருமுறை சந்தித்துப் பேசுவதுதான். அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி எங்களிடம் மிகவும் அக்கறையாகப் பேசுகிறார்கள். குழந்தை பேசமாட்டேன் என்கிறது என்பார்கள். அதிகமாகக் கோபப்படுகிறது என்பார்கள். சில குழந்தைகள் அதிகமாகப் பேசுவதாக அவர்களுடைய பெற்றோர் எங்களிடம் சொல்வார்கள். நாங்களும் குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொடுத்தோம். எவற்றில் எல்லாம் குழந்தைக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கிச் சொல்வோம். பிற பள்ளிகளில் பெற்றோருடன் இந்த அளவுக்கு தொடர்பு இருக்காது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்'' என்கிறார் கண்களில் உறுதியுடன் ரிச்சா டிக்மானி.

'இந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் காலை 9 மணிக்கு வந்து பகல் 12.45 க்கு அவர்களுடைய பெற்றோர் வந்து அழைத்துச் செல்வார்கள். ஆனால் இப்போது வீட்டில் உள்ள ஆண், பெண் இருவருமே வேலைக்குச் செல்வதால் மதிய வேளைகளில் அவர்களைப் பார்த்துக் கொள்ள பெரும்பாலான வீடுகளில் யாரும் இருக்கமாட்டார்கள். வீட்டில் வேலை செய்பவர்களை நம்பி குழந்தைகளை விட சில பெற்றோர் விரும்பமாட்டார்கள். எனவே குழந்தைகளை மாலை வரை பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்'' என்கிறார் பூஜா ஷா.

'ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக இப்போது இ-கிளப் சிஸ்டம் என்ற முறை கம்ப்யூட்டர் தொடர்புடையமுறை வெளிநாடுகளில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதையும் விரைவில் எங்களுடைய பள்ளியில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்'' என்கிறார்கள் நண்பர்கள் மூவரும் ஒரே குரலில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.