/

விளையாட்டு: படிப்பு மட்டுமே உலகமல்ல!

பல விளையாட்டுகளில் பெண்கள் சாதனைபுரிந்து வரும் காலமிது. முன்பெல்லாம் உடல் உழைப்பு இல்லாத கேரம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்திவந்த பெண்கள், தற்போது உடலை வருத்தி விளையாடும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:44 am

பல விளையாட்டுகளில் பெண்கள் சாதனைபுரிந்து வரும் காலமிது.

முன்பெல்லாம் உடல் உழைப்பு இல்லாத கேரம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்திவந்த பெண்கள், தற்போது உடலை வருத்தி விளையாடும் விளையாட்டுக்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்துவரும் மாணவி ஏ. காயத்திரி, வாலிபால் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்று, பள்ளிக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவரது வெற்றி பயணம் குறித்து கேட்டபோது:

வாலிபால் விளையாட்டில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

நான் 7-ம் வகுப்பு படிக்கும்போது எனது அண்ணன் அருண்குமார் வாலிபால் விளையாடுவார். விடுமுறை நாள்களில் அவர் விளையாடுவதை வேடிக்கைப் பார்க்கச் சென்றபோது, அந்த விளையாட்டை நாமும் விளையாடினால் என்ன என எண்ணி, விளையாடத் தொடங்கினேன். எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட பள்ளித் தலைமை ஆசிரியை எஸ். ராஜசௌந்திரி பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, ரமேஷ் மற்றும் கோப்பெரும்தேவி ஆகியோர் எனக்கு வாலிபால் விளையாட்டில் பயிற்சி அளித்தனர்.

முதலில் நீங்கள் விளையாடிய போட்டி எது? அதைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் 8-ம் வகுப்பு படிக்கும்போது, சிவகாசி அருகே விளாம்பட்டியில் நடைபெற்ற மாணவிகளுக்கான ஜூனியர் பிரிவில் எங்கள் பள்ளி அணி கலந்துகொண்டது. அந்த அணியில் உள்ள 12 பேரில் நானும் இடம் பெற்றிருந்தேன். அந்தப் போட்டியில் எங்களது பள்ளி அணி முதலிடம் பெற்றது. இந்த வெற்றி எனக்குள் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியது. பின்னர், இந்த விளையாட்டில் மேலும் தனிக்கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

மாநில அளவிலான போட்டியில் எப்போது கலந்து கொண்டீர்கள்?

நான் 8-ம் வகுப்பு படிக்கும்போது, விருதுநகரில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான மண்டல அளவில் நடைபெற்றப் போட்டியில், எங்கள் பள்ளி அணி முதலிடம் பெற்றது.

இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் எங்கள் பள்ளி அணி கலந்துகொண்டு மூன்றாமிடம் பெற்றது.

வேறு எந்தெந்தப் போட்டிகளில் கலந்து கொண்டீர்கள்?

10-ம் வகுப்பு படிக்கும்போது, தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில், தமிழக அணிக்கு நான் தேர்வு செய்யப்பட்டேன். இதையடுத்து, பஞ்சாபில் உள்ள தரங்தாரன் என்னும் ஊரில் நடைபெற்ற பைகா போட்டியில் கலந்து கொண்டு (16 வயதுக்குள்பட்ட பிரிவு) 4-ம் இடம் பெற்றோம்.

காரைக்குடியில் நடைபெற்ற குடியரசு தின விழா போட்டியிலும், 2009-ம் ஆண்டு நாமக்கல்லில் நடைபெற்ற பாரதியார் தின விழாப் போட்டியிலும் கலந்துகொண்ட எங்கள் பள்ளி அணி மூன்றாமிடம் பெற்றது.

11-ம் வகுப்பு படிக்கும்போது 16 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள திருச்சியில் தகுதித் தேர்வு நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட நான், கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் விளையாடினேன்.

2010-ல் வேலூரில் நடைபெற்ற பாரதியார் தின விழாப் போட்டியில் (மாநில அளவில்) கலந்துகொண்ட எங்கள் பள்ளி அணி மூன்றாமிடம் பெற்றது.

பின்னர் பிளஸ் 2 படிக்கும்போது, தேசிய அளவிலான மினி வாலிபால் போட்டிக்குத் தகுதித் தேர்வு சென்னையில் நடைபெற்றது. இதில், நான் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டேன்.

சென்னையிலேயே நடைபெற்ற தேசியஅளவிலான மினி வாலிபால் போட்டியில் விளையாடி நான் தங்கப் பதக்கம் பெற்றேன். அப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

வாலிபால் விளையாடும் மாணவிகளுக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

பெற்றோர் பிள்ளைகளை விளையாடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

படிப்பு மட்டுமே உலகமல்ல. தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆர்வம் உள்ள மாணவிகளைக் கண்டறிந்து, முறையான பயிற்சி அளிக்கவேண்டும். பெண் பிள்ளைக்கு எதற்கு விளையாட்டு என யார் கூறினாலும், அதனைக் கண்டுகொள்ளக்கூடாது.

தோல்வி அடைந்துவிட்டால், அடுத்த முறை வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை வேண்டும்.

உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?

பொறியியல் படிப்பு படிக்கவேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடி வெற்றி பெறவேண்டும். இது முடியுமா, முடியாதா என நான் யோசிப்பதில்லை.

என்னை மேம்படுத்திக்கொள்ள இதுபோன்ற எண்ணங்கள் உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.