ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: கெட்ட ரத்தத்தை நீக்க உதவும் அட்டைப் பூச்சிகள்!

எனக்குக் கடந்த 2 வருடங்களாக கை, கால், இணைப்புப் பகுதிகள் மிகுந்த வேதனையைத் தருகின்றன. "ஆர்த்ரைட்டிஸ்' உபாதை என்று கூறுகின்றனர். கைவிரல்களை மடக்க இயலவில்லை. பளு தூக்க முடியவில்லை. முழங்கை மூட்டு வீக்கம
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: கெட்ட ரத்தத்தை நீக்க உதவும் அட்டைப் பூச்சிகள்!
Updated on
2 min read

எனக்குக் கடந்த 2 வருடங்களாக கை, கால், இணைப்புப் பகுதிகள் மிகுந்த வேதனையைத் தருகின்றன. "ஆர்த்ரைட்டிஸ்' உபாதை என்று கூறுகின்றனர். கைவிரல்களை மடக்க இயலவில்லை. பளு தூக்க முடியவில்லை. முழங்கை மூட்டு வீக்கம், கால் பாத கணுக்கள் வீக்கம் உள்ளது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சைமுறைகள் எவை?

இ.முரளி, வேலூர்.

நெஞ்செரிச்சல் உண்டாக்கும் அவரை, நெல், நீர் வாழ் பிராணிகளின் மாமிசம், கொள்ளு, புளிப்புள்ளவையான மதுவகை, மோர், தயிர் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும், ஒன்றுடன் ஒன்று பொருந்தாத உணவைச் சாப்பிடுவதாலும், ரத்தத்தைக் கெடுக்கக் கூடிய உணவு, செயல் ஆகியவற்றாலும், உறக்கம், கண் விழிப்பு, புணர்ச்சி ஆகியவற்றை முறை மீறிச் செய்வதாலும், பெரும்பாலும் நளினமான இயல்புடையவர்களுக்கும், நடமாட்டமற்றவர்களுக்கும் இந்த உபாதை ஏற்படும். அடிபடுதல், குடல் சுத்தம் செய்து கொள்ளாதிருத்தல் ஆகியவற்றால் ரத்தம் கெட்டிருக்கும்

நிலையில், வாயுவைக் கோபிக்கச் செய்யும் குளிர்ச்சியானவற்றால், வாயு கோபமடைகிறது.

இதனால் உறுப்புத் தளர்ச்சி, முழங்கால், கணுக்காலுக்கு மேற்புறம், தொடை, இடுப்பு, தோள்பட்டை, கை, கால் மற்றுமுள்ள மூட்டுகள் இவற்றில் அரிப்பு, துடிப்பு, வீக்கம், குத்தல், வலி, பாரம், உணர்ச்சியின்மை ஆகியவை தோன்றித் தோன்றி மறைந்து, மீண்டும் தோன்றும்.

ரத்தமும் வாதமும் கேடடைவதால், இந்த நோய்க்கு ரத்த வாதம் அல்லது வாதரக்தம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. இதில் முக்கியமாக, கெட்டுப் போன ரத்தத்தை முதலில் வெளியேற்ற வேண்டும். அதற்கு குடலுக்குத் தேவையான நெய்ப்பைத் தரும் ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து, பலதடவை சிறிது சிறிதாக ரத்தத்தை வெளியேற்றி அதன் பிறகே வலி நிவாரணத்துக்கான மருந்துகளைத் தர வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

"ரத்தத்தைச் சுத்தப்படுத்தி வலியையும் குறைக்கும் மருந்துகள் ஏதேனும் உண்டா?' என்று நீங்கள் கேட்டால் பலாகுடூச்யாதி கஷாயம், பிருகத்யாதி கஷாயம், கோகிலாக்ஷம் கஷாயம், கந்தக பஸ்மம், பிண்ட தைலம் போன்ற பல மருந்துகள் இருக்கின்றன. ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றை நீங்கள் நீண்ட காலம் சாப்பிட வேண்டி வரலாம். பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுத்தாத தரமான மருந்துகள்தான் அவை என்றாலும், கெட்ட ரத்தத்தை அட்டைப் பூச்சிகளின் மூலமாகவும், கொம்பு, சுரைக்கை குடுக்கையின் உதவியாலும் நீக்கிய பிறகு அவற்றைச் சாப்பிடுவது உத்தமம். மறைந்துபோன இதுபோன்ற சிகிச்சைமுறைகளால், இன்று வெறும் வலி நிவாரண மருந்துகளைச் சாப்பிட வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

"இதுபோன்ற சிசிச்சை முறைகளை என்னால் தாங்க இயலாது, வேறு ஏதேனும் எளிய மருந்து இருந்தால் கூறவும்' என்று நீங்கள் கூற விரும்பினால், ஒரு சில கேள்விகள் முக்கியமாகக் கேட்க வேண்டும். பசி நன்றாக உள்ளதா? "ஆம்' என்றால், அடுத்ததாக குடலில் வாயு மற்றும் மலங்களின் தேக்கம் உள்ளதா? "ஆம்' என்றால் தசமூலஹரீதகீ எனும் லேகியத்தைச் சுமார் 10 கிராம் காலை, மாலை வெறும் வயிறாக இருக்கும்போது நக்கிச் சாப்பிடவும். இதனால் என்ன நன்மை? என்று கேட்டால், குடல் உபாதைகள் குறைவதுடன், மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் போன்றவையும் குறையும். இந்தக் கேள்விகளுக்கு இல்லை என்று நீங்கள் கூறினாலோ, ஒன்றுக்கு ஆம் மற்றதற்கு இல்லை என்றாலோ, கஷாய மருந்துகளை முதலில் சாப்பிட்டு, அவற்றைச் சீர் செய்த பிறகு, லேகியத்தைச் சாப்பிடலாம்.

பசி உள்ளது, சரியாகச் சாப்பிட முடிகிறது. ஆனால் மூட்டுகளில் வலியும் வீக்கமும் உள்ளது என்றால் பிண்ட தைலம் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை உடலெங்கும் வெதுவெதுப்பாகப் பூசி அரை அல்லது ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, காலையில் வெந்நீரில் குளிப்பது மிகவும் நல்லது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, வலி நிவாரணியாகவும் செயல்படும் சிறந்த தைலமிது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com