
பாசமுள்ள அண்ணன்
ஈரோட்டுப் பெரியார் மாளிகையில் மூத்த மகனாக விளங்கியவர் அண்ணா. இறுதிக் காலத்திலும் அண்ணா, ""அந்தப் பெருமை ஒன்றுதான் எனக்கு நிலையானது, நிறைவானது'' என்று சொன்னார். குடியரசுப் பணியிலிருந்து விடுபட்டாலும் அண்ணா ஈரோடு வரத் தவறுவதில்லை, அதிலும் தம் தம்பி சம்பத்தை அவரால் ஒரு முழு வாரம் பிரிந்திருக்க முடியாது. சம்பத் குடும்பத்தாரிடமும் தனிப்பாசம் காட்டுவார் அண்ணா. ஈரோட்டு மாளிகையில் அண்ணாவும் சம்பத்தும் ஒன்றாகவே உண்பார்கள். இருவரும் ஒரே இலையில் உண்ட காட்சிகளும் உண்டு.
சம்பத் - சுலோச்சனா திருமணம் முடிந்ததும் முதல் விருந்து, காஞ்சியில் அண்ணா இல்லத்தில். எது எது சம்பத்துக்குப் பிடிக்கும் என்பதை ராணி அம்மையார் ஆலோசித்து மணம் செய்து கொடுத்த தன் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் விருந்து வைப்பது போல் பட்டாடை அளித்து விருந்திட்டு உபசரித்தார்.
சம்பத் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தபோது குழந்தையோடு 10 நாட்கள் வந்து காஞ்சியில் தம்முடைய இல்லத்தில் தங்கியிருந்துவிட்டுச் செல்லலாம் என்று சம்பத் தம்பதிகளை அழைத்தார் அண்ணா. 10 நாட்களும் அண்ணாவும் சம்பத்தும் காஞ்சியிலேயே அகமகிழ்ந்திருந்தனர். சுலோச்சனாவை அழைத்து, தம் மகளிடம் கேட்பதுபோல், ""உனக்கு என்னென்ன வேண்டும், கேள் வாங்கித் தருகிறேன், எங்காவது சுற்றுலா செல்வதானாலும் சொல். எல்லோரும் போய்வருவோம்'' என்று கேட்டார். அதற்கு சுலோச்சனா, ""நான் சினிமா ஷுட்டிங் பார்க்க வேண்டும். இவரிடம் பலமுறை கேட்டும் மறுத்துவிட்டார்'' என்றார்.
இதனைக் கேட்டதும் அண்ணா, ""அது என்ன பெரிய விஷயம், இன்றே மெட்ராஸ் போகலாம்'' என்று சம்பத் தம்பதிகளை அழைத்துக்கொண்டு நெப்டியூன் ஸ்டுடியோவிற்கு வந்துவிட்டார். அன்று எம்.வி. ராஜம்மா, பந்துலு முதலான கலைஞர்களின் படப்பிடிப்பு. அரை மணி நேரத்திற்கெல்லாம் திருமதி சம்பத், போரடிக்கிறது போகலாம் என்றார். அதற்கு அண்ணா, ""இவ்வளவு கஷ்டப்படுகிறாயே, நடிக நடிகயைர் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்'' என்றார். நட்சத்திரங்களை அறிமுகம் செய்துவைத்தார்.... இப்படி எத்தனையோ சொல்லலாம். அண்ணாவின் பாசமிகு நிகழ்ச்சிகள் ஏராளம், ஏராளம்.
கறுப்புச் சட்டை பற்றிய சர்ச்சை
""கழகத்தின் ஒரு பிரிவாகத் தீவிரப் பணிக்கென்று அமைக்கப்பட்டுள்ள தொண்டர் படையினர் மட்டுமே கறுப்புச் சட்டையை அணிய வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்'' என்று வாதிட்டார் அண்ணா. பிடிவாதத்திற்குப் பெயர் பெற்ற பெரியார், தாம் சொன்னது சொன்னதுதான் என்று அழுத்தமாகவே கூறிவிட்டார்.
கறுப்புச் சட்டையைத் தொண்டர் படையோடு வைத்துக் கொள்ளலாம் மற்றவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை என்று, கறுப்புச்சட்டைப் படையின் அமைப்பாளர் சம்பத் பெரியாரிடம் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.
பெரியாரோடு மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும் அண்ணாவோ, சம்பத்தோ தலைமையை மீறி நடக்கவில்லை. தம்முடைய கருத்துகளைத் தெரிவித்தோம் என்னும் அளவில் நிறுத்திக்கொண்டார்கள். ஆனால் சிலர் பகைமையை ஊதிப் பெரிதாக்க முயன்றனர்.
ஆனாலும் சம்பத்தைப் பெரியார் தம் வாரிசாக ஏற்கத் தயக்கம் காட்டுகிறார் என்பது கட்சிக்குள் சில பேர்வழிகளுக்கு ஆனந்தத்தை அளித்தது. அவர்களது நோக்கமெல்லாம் பெரியாருக்கு அடுத்த தலைவராக வளருகின்ற அண்ணாவை அவரிடமிருந்து பிரித்துவிட வேண்டும். சம்பத்தை ஆத்திரப்படுத்தி பெரியார் குடும்பத்திலிருந்து வெளியேறச் செய்துவிட வேண்டும் என்னும் சதித் திட்டத்தோடு பெரியார் மாளிகையிலேயே ஒரு சுயநலக் கும்பல் மறைமுக வேலைகளில் ஈடுபட்டிருந்தது.
அந்தச் சூழ்ச்சிக்காரர்கள் அடுத்து அண்ணாவைச் சந்திக்கிறபோது, ""அண்ணா, உங்கள் படிப்பென்ன, அறிவாற்றலென்ன, ஓடாய் உழைத்தும் உங்களை அய்யா எவ்வளவு அலட்சியப்படுத்துகிறார் பாருங்கள்....'' என்று அவரிடமும் தூபம் போடுவார்கள். சம்பத்திடம் சென்று, ""நீதானே எல்லாம் உனக்கு உரிய மதிப்பிருக்கிறதா? அவரே சர்வாதிகாரம் செய்கிறார், இளைஞர்களை அமுக்குகிறார்....'' என்று அவரையும் திறமையாக உசுப்பி விடுவார்கள்.
மாணவர் இயக்கம் பற்றியும் பெரியாரிடம் வெறுப்பு ஏற்படுத்திவிட்டார்கள். வால்டேர் ரூசோ பற்றியெல்லாம் மணிக்கணக்கில் பேசுகிறார்கள். பெரியாரை மறைக்கிறார்கள். சினிமா, டிராமா என்று இயக்கத்தை எங்கேயோ கடத்திப் போகிறார்கள் என்றெல்லாம் அந்தச் சுயநலமிகள் வாதம் செய்தனர்.
இப்படிச் சில சுயநலமிகளின் குழப்ப வேலை ஆரம்பமாயிற்று. அவர்கள் போட்ட தூபம் புகைப்படலங்களை எழுப்பியது. அது கொழுந்துவிட்டு எரியவிட வேண்டுமென்று பகைவர்களும் தீயவர்களும் துடித்தனர்.
விளைவு.... பெரியார் அண்ணாவிடம் வைத்திருந்த பாசப் பிணைப்பு கொஞ்சங் கொஞ்சமாக தளரலாயிற்று. அண்ணாவும் அவருடைய இயல்புக்கேற்ப முட்டிமோதி நியாயம் பெற முயலவில்லை.
"கறுப்புச்சட்டை போடாமல் மேடைக்கு வந்தால் தடுப்போம்' என்று கூடச் சில தீவிரவாதிகள் பேசிக் கொண்டனர். அண்ணா ஒரு முடிவுக்கு வந்தார். பெரியார் உணர்கிறவரை நாம் சற்று ஒதுங்கி இயக்கத்திலேயே வேறு சில பணிகளை.... இலக்கியப் பணி.... கல்லூரிகளில் சொற்பொழிவு, கலைப்பணி என்று இயக்கத்திற்கு ஆற்றவேண்டிய பணிகளை ஏதாவதொரு வடிவத்தில் முனைப்போடு நடத்திக் கொண்டிருப்பது என்று முடிவு செய்து கொண்டார்.
திராவிட நாடு இதழில் வழக்கம் போல் அண்ணாவின் கட்டுரைகள் பெரியாரைச் சிறப்பித்து, மேலும் மிடுக்கோடு வெளிவந்து கொண்டிருந்தன. விடுதலை நிர்வாகப் பணியோடு, மாணவர் இயக்கப் பணிகளையும் கறுப்புச்சட்டை படை இயக்கத்தையும் சம்பத் எப்போதும் போல் விறுவிறுப்போடு நடத்திக் கொண்டிருந்தார்.
கறுப்புச்சட்டை விவகாரத்தால் அண்ணா பொதுக்கூட்டங்களைத் தவிர்த்தார். இதனால் திராவிடர் கழகப் பொதுக்கூட்ட மேடைகள் அவ்வளவாக சோபிக்கவில்லை. இந்தக் குறை சிறிது சிறிதாக உணரப்பட்டுவந்தது.
தமது அடுத்த பணியாக பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கும் பணியில் அண்ணா தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். இதற்காக அமைத்த தமிழறிஞர்கள் குழுவில் சம்பத்தும் இடம் பெற்றார். தம்மைக் கலந்து இந்த ஏற்பாட்டினைச் செய்யவில்லை என்னும் ஆதங்கம் பெரியாருக்கு இருந்தது. வருவோர், போவோரிடம் அது எதிரொலித்தது.
சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழ் நடத்திய கழக ஆதரவாளர் செல்வாக்கு மிக்க சாரங்கபாணி. அவர் தமிழகம் வந்து, பெரியாரைச் சந்தித்தபோது பாரதிதாசனுக்கு நிதியளிக்க மலேயா, சிங்கப்பூர் தமிழர்களும் ஆர்வம் காட்டுவதாகச் சொன்னார். அவ்வளவுதான், பெரியாருக்குக் கோபம் கொப்பளித்தது. ""கட்சி என்பதையே நினைக்காமல் அவனவன் இஷ்டத்திற்கு விளையாடுறானுங்க'' என்று நொந்த உள்ளத்தோடு கூறினார். ""பாரதிதாசனுக்கு என்ன வந்தது இரண்டுப் பாட்டுப் பாடிவிட்டால் புலவர்.
அவருக்கெல்லாம் பணமுடிப்பு. யாரை கேட்டுக்கிட்டு அண்ணாதுரை இப்படியெல்லாம் செய்யுறாரு?'' என்றும் தம் வேதனையை வெளிப்படுத்தினார் பெரியார்.
குடந்தையிலே தொடங்கிய குள்ளநரிப் பசங்க ஏச்சுக்குப் பிறகு இருந்த பாரதிதாசன் நிதி விவகாரத்திலேயும் பெரியாரின் மனத்தில் எரிச்சல் வெளிப்பட்டது.
பாரதிதாசனுக்குப் பொற்கிழி
சென்னை பச்சையப்பன் கல்லூரித் திடல் மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. இந்த விழாவிற்கு வந்தவர்களுக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. அண்ணா அன்று பட்டுச் சட்டை அணிந்து மேடையில் தோன்றினார். எப்போதும் சாதாரண கசங்கிய சட்டை அணிந்து மேடையில் தோன்றுவார். அந்த அண்ணா பட்டுச் சட்டை அணிந்து உற்சாகமாகக் காணப்பட்டார். அவருடைய உரையின் தொடக்கத்தில் அவரே இது பற்றிக் குறிப்பிட்டார்.....
""இந்தத் தோற்றத்திலே என்னைக் காண்பவர்களுக்கு அண்ணாத்துரை என்ன மாறிவிட்டான் போலிருக்கிறதே என்று எண்ணத்தோன்றும். நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் பளபளக்கும் பட்டுச்சட்டை போட்டுக் கொண்டிருந்தேன். அது என் திருமணத்தின்போது... அதற்குப் பிறகு இன்றுதான். என் வாழ்க்கையில் இரண்டாவது முறையாகப் பட்டுச் சொக்காய் அணிந்திருக்கிறேன். ஏனெனில், எப்படி என் திருமண நாள் என் வாழ்க்கையில் முக்கியமானதோ எந்த அளவுக்கு மகிழ்ச்சியையும் பூரிப்பையும் அளித்ததோ அதே போன்ற உணர்வையும் பெருமையையும் இன்று நான் பெறுகிறேன்.''
ச.சோமசுந்தரபாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த இனிய விழாவில் அண்ணா, பாரதிதாசனுக்குப் பொன்னாடை போர்த்தி ரூ.25,000 கொண்ட பொற்கிழியை வழங்கினார். பலத்த கரவொலியும் வாழ்த்து முழக்கமும் விண்ணைப் பிளந்தன. கட்சி வேறுபாடின்றித் தமிழகத் தலைவர்களும் இலக்கிய மேதைகளும் பாரதிதாசன் மீது வாழ்த்து மலர் சொரிந்தனர்.
இவ்விழாவில் நிதிக் குழுவின் சார்பில் நன்றி தெரிவித்துப் பேசிய ஈ.வெ.கி. சம்பத் தமது உரையில் குறிப்பிட்டதாவது: ""சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி நமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே. தம்முடைய கவிதைகள் காகிதத்தால் மூட்டும் நெருப்பு என்றும் சுப்பு ரத்தினம் வரிகள் சுள்ளியில் மூட்டும் நெருப்பு என்றும் குறிப்பிட்டிருக்கிறார். புதியதோர் உலகு செய்வோம் என்று பாடிய புதுமைக் கவிஞர் "கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே' என்று கனல் தெறிக்கப் பாடியவர். அத்தகைய புரட்சிக் கவிஞரின் தமிழுக்குத் தமிழர்கள் அங்கீகாரம் வழங்கிடும் விழா இது. இந்த விழா பல பேருக்கு எரிச்சலைத் தரலாம். இதனைப் பலர் இருட்டடிப்புச் செய்யலாம். ஆனால் முகிலைக் கிழித்து வரும் முழுமதி போல் புரட்சிக் கவிஞரின் புகழ் விளங்கிக் கொண்டிருக்கிறது. எங்களாலும் நிதி திரட்டி அளிக்க முடியும் என்னும் ஆற்றலை அண்ணா மெய்ப்படுத்தி இருக்கிறார். இயக்கப் பெரியவர்களை, இயக்கத்திற்காகத் தங்களைத் தத்தம் செய்து கொண்டிருப்போரைத் தமிழ்ச் சமுதாயம் உதாசீனம் செய்து விடாது என உணர்த்துகிற முதல் விழா இது...'' என்று சம்பத் உணர்ச்சி பொங்க குறிப்பிட்ட போது பலத்த கரவொலி எழுந்தது.
பாரதிதாசன் கவிதை வரிகளை மேடைகளில் தமது உரை நெடுகிலும் உணர்ச்சி பொங்கக் குறிப்பிடும் இளந்தாடி வீரர் நெடுஞ்செழியனும் இவ்விழாவில் உரையாற்றினார். அண்ணாவின் நன் முயற்சியை அனைவரும் பாராட்டினர். பாரதிதாசன் மன நெகிழ்ச்சியோடு நன்றியுரையாற்றினார்.
ஆகஸ்ட் 15 கருத்து வேறுபாடு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனியாகப் பிரித்துத் தரப்பட்டது. நாடு முழுவதும் விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்கள் எழுச்சியோடு நடத்தப்பட்டன. ஆனால் பெரியார் ஆகஸ்ட் 15}ஆம் நாள் திராவிடருக்குத் துக்க நாள் என்று அறிவித்தார். ""வெள்ளையன் வெளியேறினாலும் வட நாட்டுக் கொள்ளையன் நம்மீது ஏறிச் சவாரி செய்கிறானே'' என்றார்.
பெரியாரின் கூற்றை மறுத்த அண்ணா, ஆகஸ்டு 15}ஆம் நாள் இன்ப நாள் என்று அறிக்கை விட்டார். ""இரண்டு பேர் நம்மீது சவாரி செய்தார்கள். ஒருவன் ஒழிந்ததில் பாதிச் சுமை குறைந்தது அல்லவா? அதனால் ஆகஸ்டு 15 மகிழ்ச்சிக்குரிய நாள்'' என்று அண்ணா குறிப்பிட்டார். கழகம் இரு அணிகளாகிக் கருத்து மோதல்கள் நடந்தன.
கறுப்புச் சட்டைக் கருத்து வேறுபாடு, பாரதிதாசன் நிதி விவகாரம் ஆகியவற்றோடு ஆகஸ்டு 15 கருத்து மோதலும் சேர்ந்து இயக்கத்தில் புதிய விரிசலை ஏற்படுத்திவிட்டது. பெரியாரும் அண்ணாவும் அறிக்கைப் போர் புரிந்தனர்.
""தலைவரும் கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும், நான் சமூகச் சீர்திருத்தம், பொருளாதாரச் சமத்துவம், திராவிடத் தனி அரசு எனும் அடிப்படைக் கொள்கைகளைக் கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன்....'' என்று அண்ணா அறிக்கையில் குறிப்பிட்டார். சம்பத் அண்ணாவின் கருத்தை ஆதரித்தார்.
இவ்வறிக்கைப் போரினைத் தொடர்ந்து பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட விரிசல்களைப் பெரிதுபடுத்திக் கட்சியில் இருந்த சூதுமதியினர் சமயமறிந்து சாமர்த்தியமாகச் செயல்பட்டனர். அண்ணாவின் மீது பல அவதூறுகளைக் கிளப்பிவிட்டு அவர் மனம் புண்படச் செய்தனர். அதன் காரணமாக அண்ணா அடுத்து நடந்த தூத்துக்குடி மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநாடு கே.வி.கே. சாமியின் தீவிர முயற்சியால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் ஊர்வலத்தில் குதிரைகள் மீது கருஞ்சட்டைத் தொண்டர்கள் கொடியேந்தி அணிவகுத்து வர அடுத்து கறுப்புப் புடவையணிந்த மகளிர் அணிவகுப்பும் அதனைத் தொடர்ந்து திரளான கருஞ்சட்டை படை வீரர்களும் பவனி வந்ததைப் பார்த்து பெரியார் பூரித்துப் போனார். மாநாட்டில் பாராட்டுரை வழங்கிய பெரியார், ""நாம் வாங்கப் போகிற திராவிட நாட்டில் கே.வி.கே. சாமிதான் கவர்னர் ஜெனரல்'' என்று சொன்னதுமே பலத்த கரவொலி எழுந்தது.
மாநாட்டு ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தும் அண்ணாவும் அவர் தோழர்களும் வராதது மக்களுக்குப் பெரும் குறையாகக் காணப்பட்டது.
இரண்டு முக்கிய மாநாடுகளிலும் அண்ணா கலந்து கொள்ளவில்லை. அண்ணாவை ஆதரித்துச் சம்பத்தும் பங்கேற்கவில்லை. அண்ணாவும் அவரது அணியினரும் பங்கேற்காததை மாநாடு கண்டோர் பெருங்குறையாகவே கருதினர்.
ஆகஸ்டு அறிக்கைக்குப் பிறகு அண்ணா கழகப் பணியில் ஈடுபடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார். எழுத்தாளர் மாநாடு, இலக்கிய கூட்டங்கள், கொள்கைப் பரப்பு நாடகங்கள், திரைப்படத்துறை என்று அண்ணா பணிகளை அமைத்துக் கொண்டார். தம்பி சம்பத்தை விடுதலை நிர்வாகம், மற்றும் தொண்டர்படை தொடர்பான பணிகளை விடாது நிறைவேற்றி வருமாறு அண்ணா கேட்டுக் கொண்டார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.